Saturday, January 28, 2012

வர்மத்தின் மர்மங்கள்

வர்மத்தின் மர்மங்கள்



அகத்தியர்பெருமனால் வகுத்துரைக்கப் பட்ட, மாபெரும் தத்துவங்களைக் கொண்ட அடங்கல் முறைகள் அனைத்து நோய்களையும் 18 அடங்கலாக ஒடுக்கி, அதற்கு தீர்வு காணும் முறைகள்தான் அடங்கல் முறைகள். இந்த 18 அடங்கல்களுள் 108 வர்மத்தின் செயல்பாடுகளும் அடங்கியுள்ளன. இது இந்திய மருத்துவ முறைகளில் மாபெரும் வலிமையும், தீர்க்கமும் கொண்ட சிகிச்சை முறையாகும்.

உடலில் உள்ள அங்க அவையங்களில் அடங்கி ஒடுங்கியிருக்கும் அற்புதமான சக்தி நிலை, ஒடுங்கியிருக்கும் உயிர்நிலை ஓட்டத்தினை அகத்தியர் பெருமான் தெள்ளத் தெளிவாகக் கூறியிருப்பதன் காரணம், மனிதர்களுக்கு உண்டாகும் எந்த ஒரு நோய்க்கும், அது சம்பந்தப்பட்ட அடங்கல் பாதித்திருக்கும் என்பதுதான் உண்மை நிலை என்பதை கண்டறிந்த அகத்தியர் அடங்கல் நிதானம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நோயைக் கணித்துக் கூறுவதற்கு முன் அந்த நோய்க்கு தொடர்புடைய வர்மப் புள்ளிகள், அடங்கல்கள், எவ்வாறு பாதிக்கப் பட்டிருக்கிறது என்பதை ஒரு மருத்துவர் கவனிக்க வேண்டியது முதல் கடமையாகும்.

பொதுவாக அடங்கல்கள் வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்றத்தின் உடற் கூறுகளுக்கு தகுந்தவாறு அந்த அடங்கல்களின் பரிணாம செயல் பாடுகளிலிருந்து அறிந்து கொள்வார்கள்.

எப்படி கல்லீரல் பாதித்தால், உள்ளங்கை அடங்கல் பாதித்திருக்கிறது என்று ஒரு வர்ம மருத்துவரால் கணித்துக் கூற முடிகிறதோ, அதுபோல், நோயின் குறிகுணங்களைக் கொண்டு எந்த அடங்கல் பாதித்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இதிலிருந்து நோய்களுக்கும் அடங்கல் களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பது உண்மையாகிறது.

பழங்காலத்தில் வர்ம மருத்துவர்கள் எந்தக் கருவிகளும் இல்லாமல், அடங்கல் மூலம் நோய்களையும், நோய்கள் மூலம் அடங்கலையும் கணித்து அதற்குத் தகுந்தவாறு மருத்துவம் செய்து வந்துள்ளனர்.

இன்றும் வர்ம மருத்துவர்கள் நோயின் குறிகுணங்களை அடங்கல் பரிகார முறையில் நோய்களைக் கணித்து அதற்குத் தகுந்தவாறு, மருந்து மாத்திரைகள் கொடுத்து, நோய்களைத் தீர்த்து வருவது காலம் அறிந்த உண்மை.

சில சமயங்களில் மனம் பாதிக்கும் அளவுக்கு நிகழ்வுகள் ஏதேனும் நடந்தால் அதனாலும் அடங்கல்கள் பாதிக்கப்பட்டு அதுவே நோயாகவும் மாறுகிறது. அதுபோல், புறச் சூழ்நிலைகளாலும், அடங்கல் பாதிக்கப் படலாம்.

இப்படி மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்படும் இனம் புரியாத நோய்களுக்கு அடங்கல் முறைகள் மூலம் அவற்றின் பாதிப்புகளைக் கண்டறிந்து குணப்படுத்துவதே வர்ம மருத்துவத்தின் தனிச் சிறப்பாகும்.