ஒரு பெண் தாய்மை நிலையினை அடையும் போது, சத்தான உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும். அப் பெண்ணைக் கண் கலங்காது பராமரிக்க வேண்டும் என்று எம் தமிழ் மரபு வழி பெரியோர்கள் சொல்லுவார்கள். இதுவே யதார்த்தமும் கூட.
சில ஆண்கள் பெண் கர்ப்பமாகிய பின்னர், அவளை தாய் வீட்டிற்கு(மாமியார்) வீட்டிற்கு அனுப்பிடுவார்கள். இன்றைய இயந்திர வேகமான உலகில் மாமியார் வீட்டிற்கு மனைவியை அனுப்ப முடியாத கணவன்களின் கையில் உள்ள மிகப் பெரிய பொறுப்புத் தான் ‘கர்ப்பிணிப் பெண்ணைக் கண் கலங்காது பாராமரிக்க வேண்டிய பொறுப்பு.
கர்ப்பிணிப் பெண்ணைக் கண் கலங்காது பராமரிக்க நிறைய வழிகள் இருப்பதாக அனுபவம் மிக்க பெரியோர்கள் சொல்கிறார்கள். ஆனால் தன் ஆசை நாயகி விரும்பிக் கேட்கும் உணவு வகைகளைச் சமைத்தும், வயிற்றுப் பிள்ளத் தாச்சியைக் கொண்டு அதிகளவான வேலைகளைச் செய்விக்காதும் இருப்பதற்கு ஆண்கள் சமையலில் பங்கெடுத்தல் அவசியமான ஒரு செயல் தானே.
ஒரு பெண் கர்ப்பம் தரித்திருக்கும் போது, பிள்ளை பெற்ற பின்னரும் நீங்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டிய ஓர் உணவினை எப்படிச் சமைப்பது என்று தான் இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.
சரக்கு அரைச்சுக் காய்ச்சுவது எப்படி!
ஈழத்தில் குடற் புண், வயிறு எரிவு, வயிற்று நோவு, மற்றும் உள் காயங்கள் உள்ளோருக்கும், பிள்ளை பெற்றிருக்கும் பெண்களுக்கும் உட் காயங்களை ஆற்றிடவும்,
வயிற்றில் எரிவினை உண்டாக்காது மிளகாய்க்குப் பதிலாக- வயிற்றினைக் குளிரிவிக்கும் நோக்கில் சமைத்துப் பரிமாறும் ஓர் கூட்டுக் கலவை தான் இந்த அரைச்சு காய்ச்சும் கறி.
தேவையான பொருட்கள்:
*மூன்று ஸ்பூன் மல்லி (3 Small Spoon)
*சின்னச் சீரகம்/ சிறிய சோம்பு- அரை ஸ்பூன்(அதிகமாக போட்டால் கசப்புச் சுவை உருவாகும்)
*பெரிய சீரகம்/ பெரிய சோம்பு- அரை கரண்டி அளவு
* நான்கு, அல்லது ஐந்து மிளகு
*ஒரு செத்தல் மிளகாய்- One Dry Red Chill
*சிறிய துண்டு பூண்டு/ உள்ளி
*சிறிய துண்டு இஞ்சி
*மஞ்சள் கட்டை தேவையான அளவு- சிறிதளவு போதும்.
இனிச் செய் முறை:
*மேலே தரப்பட்ட பொருட்களினை மிக்ஸியில் அல்லது அம்மியில் கொட்டி, அரைக்கத் தொடங்கவும்.
*உள்ளியினையும், இஞ்சியினையும் இறுதியாகச் சேர்த்து அரைக்கவும்.
*உள்ளி, இஞ்சியினைச் சேர்த்து அரைக்கும் போது சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
*இப்போது களித் தன்மையுடைய கூட்டு மிக்ஸியில்/அம்மியில் தயாராகியவுடன், அதனை எடுத்துப் ஒரு குவளையில் போட்டு வைக்கவும்.
*பழப் புளியினை பிறிதோர் குவளையில் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். வயிற்றில் புண் உள்ளோர், உட் காயங்கள் உள்ளோர் பழப் புளியினைத் தவிர்ப்பது நல்லது.
*இனி ஏற்கனவே அரைத்த களித் தன்மையுடை கூட்டுக் கலவையினை, பழப் புளிக் கலவையோடு மிக்ஸ் பண்ணவும். (ஓரளவு தண்ணிப் பருவமாக)
*சிறிய வெங்காயம், கறி சமைப்பதற்காக சிறிய, சிறிய துண்டுகளாக வெட்டிய மீன், உப்பு முதலியவற்றோடு, இந்தக் கலவையினையும் சேர்த்து, பத்து நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
*கொதித்துக் கறிப் பருவம் வந்தவுடன் இறக்கி லேசான சூட்டோடு பரிமாறவும்.
முக்கிய விடயம்: அரைக்கப்பட்ட கூட்டுக் கலவையோடு, நீங்கள் மீனுக்குப் பதிலாக முருங்கைக் காயினை அவித்துச் சேர்க்கலாம்.
அல்லது இந்தக் கலவையானது கொதித்து வருகையில் முட்டையினை உடைத்துச் சேர்க்கலாம்.
அல்லது- அவித்த உருளைக் கிழங்கினையும் சேர்த்துச் சமைக்கலாம்.
இப்போது அரைத்துக் காய்ச்சும் கூட்டுக் கலவைக் கறி தயார். உங்கள் மனைவிக்கோ அல்லது காதலிக்கோ நீங்கள் சமைத்துப் பரிமாறி மகிழலாம்.
*உங்கள் கவனத்திற்கு: வயிற்றில் புண் உள்ளோர், பிள்ளை பெற்ற தாய்மார், பழப் புளியினைத் தவிர்ப்பது நல்லது.
NANDRI THANKS TO சித்தர் அறிவியல் Wisdoms of Siddhars