Saturday, January 11, 2014

வர்மம்

1. கொண்டைக்கொல்லி வர்மம்
இடம் :

தலையின் உச்சியில் உள்ளது.



வேறு பெயர்கள் :

1. கொண்டைக்கொல்லி வர்மம் (வர்ம கண்ணாடி - 500)

2. உச்சி வர்மம் (வர்மநிதானம் - 500)

3. பதப்பு வர்மம் (வர்ம சூடாமணி/வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

4. உச்சிபதப்பு வர்மம் (வழக்கு)

5. துடிக்காலம் (வார்மாணி நாலுமாத்திரை)

6. தேரை வர்மம் (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)

7. பிரமானந்தம் (வர்ம விதி)

8. அதிபதி மர்மம் (அஷ்டாங்க ஹிருதயம்)

9. மேட (மேஷ) வர்மம் (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)

10. பேய் காலம் (வழக்கு)



பெயர்க்காரணம் :

தலையில் உச்சியில் அமைந்துள்ளதால் உச்சி வர்மம் எனப்படுகிறது. உச்சியில் கொண்டை முடியும் இடத்தில் அமைந்திருப்பதால் கொண்டைக் கொல்லி வர்மம் என்று வழங்கியிருக்கலாம். (தலை முடிந்த கொண்டைக் கொல்லி, வர்மசாரி 205) குழந்தைகளுக்கு இவ்வர்மம் அமைந்திருக்கும் இடத்தில் என்புகள் முழுமையாக வளர்ச்சியடைந்து இணைந்திருக்காததாகையால் அவ்விடம் மேலும் கீழும் துடிப்பதைக் காணலாம். எனவே துடிகாலம் எனப்படுகிறது. இதை உச்சிப்பதப்பு என்னும் அழைப்பர். இவ்விடத்தில் அடிகொண்ட உடனே ஆளைக் கொன்று விடுமாகையால் கொண்டை கொல்லி எனவும் வழங்கப்பட்டிருக்கலாம்.



இருப்பிடம் :

1. ‘உச்சி நடுவில் கொண்டக் கொல்லி

ஒட்டை யதற்குக் கீழ் சீறுங்கொல்லி’

(வர்ம கண்ணாடி-500)



2. ‘ஆமென்ற சிரசு நடு கொண்டைக்கொல்லி

அதனொன்னு ஒட்டையின் கீழ் சிறுங்கொல்லி’

(வர்ம பீரங்கி-100)



3. ‘கேளப்பா சிரசில் நடு கொண்ட கொல்லி

கீர்த்தி பெற ஒட்டையின் கீழ் சீறுங்கொல்லி’ 

(வர்மசாரி-205)



4. ‘பராபரத்தின் தியானமது பணிந்து கேளு

பாரப்பா உச்சி நடுமையம் தன்னில் உச்சி வர்மம்’ 

(வாகட நிதானம்)



5. ‘கேளப்பா உச்சி வர்ம தலத்தைக் கேளு

கிருபையுடன் நடு நெற்றிதனியிலிருந்து

ஆளப்பா அவரவர் கையதனால் விரல் எட்டு

அளந்து மேல் பார்த்திடவே தலம் தான் காணும்’ 

(வர்ம நிதானம்)



6. ‘கேளே நீ சிரசு வட்டம் நடுவில் தானே

கிருபையுடன் பதப்பு வர்மம்’ 

(வர்மசூடாமணி)



7. ‘......... பொருந்துவர்மம் காணலாகும்

பட்சமுடன் அதற்கு அஞ்சு விரலின் மேலே

பதப்புவர்மம் அதிலிருந்து.......’ 

(வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)



8. ‘கேளப்பா உச்சியுட பதப்புதனில் தேரை வர்மம்’

(வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)



9. ‘சீறும் கொல்லி வர்மத்திலிருந்து பன்னிரண்டு விரலளவுக்கு

மேலாக கொண்டைக்கொல்லி வர்மம்" (வர்ம விளக்கம்)



10. ‘உச்சியில் துடிக்காலம்.....’ (வர்மாணி நாலு மாத்திரை)



11. ‘உச்சி நடுவில் கொண்டைக்கொல்லி அதற்கு பன்னிரெண்டு

விரலளவுக்கு கீழே பின்புறம் சீறுங்கொல்லி.....’ (வர்ம விரலளவு நூல்)



12. ‘கண்டத்தின் மேல் திலர்த காலத்திலிருந்து சீறுங்கொல்லி உட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) நான்காகமடக்கி (8 விரலளவு) திலர்த காலத்திலிருந்துமேல நோக்கினால் அளந்தால் உச்சி வர்மம் அறியாலாம்’ (வர்ம நூலளவு நூல்)



13. ‘கூர்ந்து நிற்கும் கொண்டைக் கொல்லி தலமேதென்றால்

ஆர்ந்து உச்சிப்பட்டம் அருகில் நின்று

சேர்ந்து மூன்று விரல் சூட்சமாக பின்பாகம்

சார்ந்திருக்கும்..’ (உற்பத்தி நரம்பறை-1000)



14. ‘கேளு நீ பாழ் நடுவர்மம் மேட வர்மம்

கீர்த்தியுற்ற மேடமென்ற கொண்டைக்கொல்லி’ (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)



15. ‘நெற்றிக்கு மேலதாகி நேரேழுமுச்சி தன்னில்

சுற்றேழு நரம்புக்கெல்லம் சூழ்ந்திடுமிடமுமாகி மற்றது பிரமானைந்த.’ (வர்ம விதி)



விளக்கம் :

இவ்வர்மம் தலையின் நடுவில் திலர்த வர்மத்திலிருந்து எட்டு விரலளவுக்கு மேலாகவும், சீறும் கொல்லி வர்மத்திலிருந்து ஓர் ஓட்டைச் சாணுக்கு (12 விரலளவு) மேலாகவும் அமைந்துள்ளது. கொண்டைக்கொல்லி வர்மம், உச்சிவர்மம், பதப்பு வர்மம், தேரை வர்மம் ஆகிய நான்கு வர்மங்களும் ஒரே இருப்பிடத்தைக் கொண்டிருப்பதாலும், ஒரே குறி குணங்களைக் கொண்டிருப்பதாலும் இந்நான்கு வர்மங்களும் ஒன்றே என்பது தெளிவாகிறது. 



Anatomy : The Bregma of the skull. The point of intersection of sagital and coronal sutures

குழந்தைகளில் இப்பகுதியில் துடிப்பு காணப்படும். இது உச்சி பதப்பு (Fonticuli) என்று அழைக்கப்படுகிறது. இவ்வர்மம் இரு Parietal என்புகளும், முன்பக்கமுள்ள ஒரு Frontalஎன்பு ஆக மூன்று என்புகளும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது.



மாத்திரை :

ஒரு ஒட்டையும் இரு நெல்லிடையும் வாங்கி இடித்தால் விழும் மயங்கும்.



குறிகுணம் :

கொண்டைக் கொல்லி (1)



தாராக தலை முடிந்த கொண்டை கொல்லி

சளம் கேடு வந்திடுகில் குணத்தை கேளு

சீராறும் கொண்டையது தளர்ந்து போகும்

செய்யும் ஸ்திரி போகமது வீழ்ந்து போகும்

பாராடும் சன்னி சேற்பனம் தான் வந்து

பழிகேடு வந்துவிடும் பதனம் பாரு

காராடும் வர்மமது கொண்ட தானால்

கை கடந்த உயிரெனவே கண்டுகொள்ளே. (அடி வர்ம சூட்சம் –500) 



கொண்டைக் கொல்லி வர்மத்தில் சரியான மாத்திரையில் காயம் கொண்டால் தலை தளர்ந்து போகும். பெண் போகம் செய்ய முடியாத அளவுக்கு குறியின் விறைப்புத்தன்மை இல்லாமல் போகும். சன்னி, கபம் போன்றவைகள் வந்து மரணத்தை ஏற்படுத்தும்.



வர்மலாட சூத்திரம்-300 :கொண்டையை (தலை) சாய்க்கும். 



வர்மசாரி-205 :கொண்டை குழைந்து போகும். விந்து வெளிப்படும். சன்னி சிலேற்பனம் வந்து பழிகேடு செய்யும். இறந்து போகும்.



வர்ம நிதானம் : மேல் மூச்சு எடுக்கும். மல்லாந்து விழும். வயிறு பொருமும். சிறுநீரும் பேதியும் கட்டும். சன்னி சீதமுண்டாகும். காயம் ஓரிறை ஆழமாக பட்டால் முக்கால் நாழிகைக்குள் (18 நிமிடம்) சீவன் போகும். அடி பலமாகபட்டால் கண் மூக்கில் நீர் பாயும் தலை சுற்றி மயங்கும். விழி குத்திட்டு பார்க்கும்.



வர்ம விளக்கம் : கண் இரண்டும் சிவந்து துடிக்கும் துணியால் கண்ணை மறைத்தாற் போல பார்வை மறைக்கும். ரோமங்கள் எழும்பி நிற்கும்.



வர்ம சூடாமணி : கழுத்து குறுகும். கண்ணிரண்டும் மூடிப்போகும். பல்லும் வாயும் பூண்டு போகும். உடல் உலரும்.



வர்மாணிநாலுமாத்திரை:மயக்கம் வரும்.உடல் உளைச்சல்,செவிக்குத்து,காது இரைச்சல்,வலி,கண்ணில்சதை வளர்ச்சி காணும்.



வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம் - 2200 :கொண்டை குழைந்து போகும். ஸ்திரி போகம் குழைந்து தாழும். சன்னியும், சீதமும் வரும். பழிகேடு செய்யும்.



தொடுவர்ம நிதானம் : உச்சி நடுவில் அடியிடி தாக்குபட்டால் தலை குழையும். கைகால் சோர்ந்து விடும். உடல் அயரும்.



உற்பத்தி நரம்பறை-1000 :அடியிடிகள் கொண்டால் பிராந்து (மனப்பிறழ்வு) உண்டாகும். உடன் மருத்துவம் மேற்கொண்டு குணமானாலும் குற்றம் வரும். கொண்டைக் கொல்லி தானத்தில் அடிகொண்டவுடன் கண் சிவக்கும். முதிர்ந்து போகும். பொருத்துகள் தோறும் திமிர் தோன்றி மரத்துப் போகும்.



அவதி :

13 நாழிகை கடந்தபின் மருந்து செய்யலாம். (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)

15 நாழிகைக்குள் இளக்க வேண்டும். (தொடுவர்ம நிதானம்)



மருத்துவம் :

இளக்கு முறை 1 : (வர்ம நிதானம்-500)



நோயாளியை படுக்கையில் கிடத்தி, இரண்டு கால்களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, கால் வெள்ளையில் கால் மடக்கி மூன்று தட்டு தட்டவும். இப்படி இளக்குமுறை செய்த பிறகு உச்சியில் கை கொண்டு அமர்த்தி உடலை குலுக்கி விடவும். இளகும். இன்னமும் மயக்கம் தெளியவில்லை என்றால் மூக்கில் தும்பை சாறு நசியம் செய்யவும். மயக்கம் நீங்கி எழுந்து பேசுவான். தொண்ணூறு நாட்கள் கழிந்த பின் தலைச்சுற்று, சுரம், குளிர், மலக்கட்டு இவை வரும். தலையிலிருந்து நீர் இறங்கி நெஞ்சில் சயம், வறட்சை வரும்.











இளக்கு முறை 2 : (வர்ம சூடாமணி)

நோயாளியின் வலது கால் வெள்ளை குழியில் கை முறுக்கி ஒரு குத்து குத்தவும். கழுத்துக்கு மேல் நோக்கி தடவிக்கொண்டு அதில் கை கொண்டு அமர்த்தி பிடித்தால் கண் விழித்து எழுவான்.



தளம் 1 : தக்கோலம், கசகசா, நெல்லி பருப்பு, சாதிபத்திரி, தாய்ப்பாலால் அரைத்து சிரசில் தளம் வைக்கவும். இவ்வாறு இரு சாமம் (6 மணி நேரம்) கழித்த பின்பு ‘முக்கூட்டு எண்ணெய்’ இட்டு வெந்நீரில் குளித்து வரவேண்டும். குற்றம் எல்லாம் நீங்கும்.



தளம் 2 : தேவதாரம், காந்தம், சாதிலிங்கம், அதிமதுரம், கருஞ்சீரகம், ஓமம், மூசாம்பரம், கடுகு, மஞ்சள், கொட்டம், கிராம்பு, திப்பிலி, முயல்புளுக்கை, சாம்பிராணி, எலிப்புளுக்கை இவைகளை நவரை இலை(கற்பூரவல்லி) சாற்றாலாட்டி வெதுப்பி குழம்பு பருவத்தில் தலையில் தளமிட வேண்டும். இதனால் உச்சிவர்மம், மண்டை நோய், உள்வலிப்பு, சீதம், பீனிசங்கள், விடாத தலைவலி தீரும். சன்னி விரைவாய் குணமாகும்.



இளக்கு முறை 3 : (வர்ம விளக்கம்)

இந்த வர்மம் கொண்டால் மூலாதாரத்தில் படங்கால் கொண்டு மூன்று தட்டு தட்டி விரல் இரண்டினால் தடவித் தாழ்த்தவும். கபாலத்தில் விரல் பொத்தி அடித்து, மூக்கிலும், உயிர் நிலையிலும் ஊதி விடவும். இளகும் இளகினாலும் 96 நாட்கள் கழியும் போது பித்தகாசம் உண்டாகும்.



மருந்து : நெல்லிக்காய் தோடு, நில வேம்பு, நெல்பொரி, தாமரை வளையம், பூலாத்தி சேர்த்து கஞ்சி வைத்து கொடுக்கவும்.



இளக்கு முறை 4 : (வர்மநாலு மாத்திரை)

உப்பு, வெற்றிலை, சுக்கு இவற்றை சதைத்து உச்சியில் வைத்து, காதின் மேல் பகுதியிலுள்ள மண்டை ஓட்டின் பகுதியில் இருவிரல் கொண்டு ஊன்றி பிடிக்கவும். உச்சியிலும் ஊன்றவும். நினைவு உண்டாகும். வர்மம் இளகும். சுவாசம் உண்டாகும்.



எண்ணெய் :மாச்சீனி, குக்கில், கூகை நீறு, சிற்றரத்தை, கொம்பரக்கு, கடுகு ரோகினி, வகைக்கு 15 கிராம், மலைதாங்கி சாறு 750 மில்லி , வேலிப்பருத்தி சாறு-375 மில்லி, தேங்காய் எண்ணெய்-750 மில்லி, முதிர் மெழுகு பருவத்தில் காய்ச்சி எடுத்து மெழுகவும். 96 நாட்கள் தலையில் தேய்க்க சுகமாகும்.



இளக்கு முறை 5 : (பிராண அடக்கம்)



உச்சியின் பதப்பில் உச்சி வர்மம் கொண்டால் புறந்தலையில் இருத்தி தட்ட வேண்டும். உடன் இளகும்.



இளக்கு முறை 6 : (வில்லிசை கைவல்லியம்-300)

கொண்டைக்கொல்லி வர்மம் கொண்டால், வலது கைக் குழிக்கு இரு விரலுக்கு தாழ்வாக அகப்புறம் அமர்த்தி பதத்திலும் கையமர்த்த இளகும். வர்மம் வலுவாகக் கொண்டால் இரத்தம் வெளிப்பட்டு காணும். உள்வர்மம் ஏற்றிருந்தாலும் இளகும்.



இளக்கு முறை 7 : (உற்பத்தி நரம்பறை 876/1000)

திலர்த வர்மத்தில் சுண்டு விரல் பதித்து இறையளவு கீழாக அசைத்து அழுத்தி விடவும். புறப்பாகத்தில் சுழியாடி வர்மத்தின் சுழியில் பெருவிரலை பதியவைத்து இடம் வலமாக அசைத்து விடவும். செவிக்கு இருவிரலுக்கு மேலேயுள்ள தலத்தில், கையின் ஓரம் கொண்டு இருபக்கமும் மெதுவாகத் தடவி, நெருக்கி வைத்து, இரு கையிலும் ஒரே அளவு அழுத்தம் கொடுத்து, அசைத்து மேலேந்திக் கொள்ளவும். அதோடு காலடங்கலும் செய்ய வேண்டும். அதாவது கால் முட்டுக்குக் கீழாக உள்ள விசை நரம்பில் தூக்கி துரிதமுடன் இழுத்துவிட நோயாளியின் மயக்கம் நீங்கி ஒரு நொடிக்குள் எழுந்துவிடுவான்.



பாறைக்கல் ஒற்றல் : (உற்பத்தி நரம்பறை-883/1000) மருந்துகள் சேர்ந்த பாறைக்கல் கிழியை ஆவியில் சூடாக்கி ஒற்றடமிட வேண்டும். முதலில் உச்சியை சுற்றிலும் ஒற்றடமிட்டு பின் பிடரி வழியே கீழ் நோக்கியும், சென்னி வழி நரம்பு மார்க்கத்திலும், செவிக்குற்றியில் காதைச் சுற்றிலும், அலவாடியின் இரு பக்கத்திலும் என்று முறைப்படி ஒற்றடமிட வேண்டும். இவ்வாறு மூன்று நாள் ஒற்றடமிட வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிய கிழியையே பயன்படுத்த வேண்டும். பின் தலைக்கு கீழ்கண்ட தைலமிட வேண்டும்.



தடவல் செய்ய தைலம் : (உற்பத்தி நரம்பறை-900/1000) இத்தைலத்தை தலைக்கு தேய்த்து சுழியாடி முடிச்சியிலும் போட்டு உள்ளங்கை வெள்ளை, கை வெள்ளை அடியோரம், பெருவிரல் இரண்டு கொண்டு தடவி கைப்பாகம் செய்துவிட சுகமாகும்.



இளக்கு முறை 8 : (தொடுவர்ம நிதானம்)

உச்சிவர்மத்தில் அடிபட்ட பதினைந்து நாழிகைக்குள் (15x24=360 நிமிடம்) இளக்க வேண்டும். நாசியில் நசியம் செய்யவும். பிறகு வர்ம கஷாயம், பொடி, நெய் போன்றவற்றை முறையாகக் கொடுக்கவும். நோயாளியை எடுத்திருத்தி உச்சியில் ஒரு கைவிரித்து வைத்து, மறு கைகொண்டு குத்த வேண்டும். புட்டி மத்தியிலும் குத்த வேண்டும். மூக்கு, முகம் இவற்றில் முறைப்படி தடவி தூக்கிவிட வேண்டும். ஒரு கும்பத்தில் தண்ணீர் எடுத்து செபித்து முகத்தில் எறிய வேண்டும். வாயில் சுக்கை இட்டு மென்று மூக்கிலும், செவியிலும் ஊத வேண்டும். சாமையரிசி கஞ்சி வைத்து சூடாக கொடுக்க வேண்டும்.



குணமானாலும் ஓர் ஆண்டு கழியும் போது கபால குத்து, மண்டை உளைச்சல், தும்மல், கண் கூசுதல் வரும். உடல் மெலியும். மூவாண்டுகளுக்குப் பிறகு கண்கள் பாழ்படும். திடமான உடல் மோசமடையும் சஞ்சலம் ஏற்படும். உடல் பாழாகும். நற்கிரியைகள், தான தர்மங்கள் செய்வது நல்லது.



உச்சிவர்ம முறிவு (தொடுவர்ம நிதானம்) : 

இந்த தலத்தில் முறிந்து இரத்தம், பாயுமானால், வலி, இளுப்பு, முகம் கோணல், அகம் பதறல், புறம் குளிரல், அலறல், கண் மிகவலித்தல், மூன்று நாளில் கண் இரத்தம் போல சிவத்தல் போன்ற குறிகுணங்களைக் காட்டும்.



அவதி :3-7-10-16-48 நாட்களுக்குள் இளக்கு முறை செய்ய வேண்டும்.



கிழி : மூன்று நாட்கள் வர்ம கிழி ஒத்தடமிட சன்னி, வலி, சீதம் குணமாகும். நோயின் நிலைமைக்கேற்ப பல்வேறு வர்ம மருந்துகள் அடிக்கடி கொடுத்து அவதி கழிந்த பின்பு வர்ம நெய்களும் கொடுத்து தலை மூழ்க செய்ய வேண்டும்.



ஒற்றல் : சாம்பிராணி, மஞ்சள், சுக்கு, நவச்சாரம், சுண்ணாம்பு, தேவதாரம், சதகுப்பை, மிளகு, சிற்றரத்தை, வசம்பு, நிலவேம்பு, புங்கம் விதை, தலைப்புண்ணாக்கு (இலுப்பைபிண்ணாக்கு), ஓமம், தும்பை, நொச்சி, சுண்டை வேர், எருக்கன் இலைச்சருகு, வெற்றிலை, எலிப்புளுக்கை வகைக்கு சமனெடுத்து கிழி கட்டி வேப்பெண்ணெயில் வெதுப்பி ஒற்றடமிட வலி, சீதம், சன்னி, மூர்ச்சை போகும்.



கஞ்சி : தினை அரிசி கஞ்சி சூடாகக் கொடுக்கவும். வர்மத்தின் பின் விளைவுகள் மாற பஞ்சாட்சரம் ஓதி தண்ணீரை முகத்தில் எறியவும்.



கஷாயம் : வெள்ளறுகு, குன்றி, ஆடாதோடை, நத்தைச்சூரி, செஞ்சட்டி, சிற்றாமுட்டி, குட்டித் தக்காளி, கொடுப்பை, முடக்கொத்தான், நெருஞ்சில், கருஞ்சுண்டை, வல்லாரை, வேலிப்பருத்தி, வில்வம், கொம்பரக்கு, கொத்தமல்லி, தேவதாரம், அமுக்கூரம், கர்க்கடகசிங்கி, அதிமதுரம், உலர் திராட்சை, சிற்றரத்தை, சீரகம் இவை வகைக்கு 15 கிராம். இடித்து மூன்று கூறு செய்து, ஒரு கூறு எடுத்து 2.25 லிட்டர் நீரில் கஷாயமிட்டு எட்டொன்றாக குறுக்கி காலை, மாலை இருவேளை அருந்தக் கொடுக்கவும். இதனால் வர்மத்தால் வந்த சயரோகம், வலி, கொழுத்து, சீதம், சன்னி போன்ற நோய்கள் நீங்கும் உடல் வன்மை பெறும்.



உச்சிமுறிவு கஷாயம் : (வ.ஒ.மு. சரசூத்திரம்-1114/1200) கச்சோலம், திப்பிலிமூலம், இரத்த சந்தனம், குடகப்பாலை அரிசி, சிவதை வகைக்கு 10 கிராம் வீதம். மீறை, 2.5 கிராம். மாதுளை வேர், நத்தைச்சூரி வேர், வெண்குன்றி, பொன்னாவாரை வகைக்கு 20 கிராம். மேற்கண்ட எல்லாவற்றையும் இடித்து சதைத்து ஆறு பங்கு வைத்து ஒரு பங்கெடுத்து 1,5 லிட்டர் நீர் விட்டு காய்ச்சி எட்டிலொன்றாக்கி வடித்து 2 வேளையாக அருந்தவும். இதைபோல 6 நாள் 12 வேளை அருந்தவும்.



உச்சிமுறிவு பூச்சு :

பூச்சு : 1 (வ.ஒ.மு. சரசூத்திரம்-1112/1200) சந்தனம், ஆதாளி, குக்கில், வாழைக்கிழங்கு, நின்பப்பழம், நஞ்சறுத்தான் இவை சமனெடை எடுத்து வேலிப்பருத்தி சாறு விட்டரைத்து வெதுப்பி உச்சி முறிவிடத்தில் பூசவேண்டும்.



பூச்சு : 2 (வ.ஒ.மு. சரசூத்திரம்-1113/1200) வில்வ வேர், குப்பைமேனி, உழிஞ்ஞை வேர், ஆடாதோடைப்பட்டை, மல்லி, சாம்பிராணி, தக்கோலம், கடுகு, எள் இவை சமனெடை எடுத்து வேலிப்பருத்தி சாற்றில் அரைத்து வெதுப்பி உச்சிமுறிவுக்கு பூசலாம்.



பூச்சு : 3 (வ.ஒ.மு. சரசூத்திரம்-1114/1200) சுக்கு, ஓமம், சதகுப்பை, கிராம்பு வகைக்கு சமனெடை எடுத்து சாராயம் விட்டரைத்து வெதுப்பி பூசலாம்.



பூச்சு : 4 (வ.ஒ.மு. சரசூத்திரம்-1114/1200) சிறுபுன்னலரிசி, ஆதாளி, பஞ்சவன்பழுக்காய், சாதிபத்திரி, கசகசா, தான்றிக்காய் சமனெடை எடுத்து பன்னீர் விட்டரைத்து வெதுப்பி பூச சதைமுறிவு இரத்தக்கட்டு குணமாகும்.



பூச்சு : 5 (வ.ஒ.மு. சரசூத்திரம்-1115/1200) தாழை விழுது, தண்ணீர் விட்டரைத்து அனலேற்றி விசை கொண்ட தலங்களில் பூசலாம்.



பூச்சு : 6 (வ.ஒ.மு. சரசூத்திரம்-1115/1200) வல்லாரை, நிலப்பனை, முத்தக்காசு, அதிமதுரம், சுக்கு, ஓமம், கச்சோலம், சதகுப்பை சமனெடை எடுத்து கையான்சாறு விட்டரைத்து வெதுப்பி பூச சதைமுறிவில் வந்த நீர் அகலும். ஒற்றலும் இடலாம்.



உச்சி வர்மம் தீர தலைக்கு எண்ணெய் : (வ.ஒ.மு. சரசூத்திரம்-1140/1200) சதாவேரி கிழங்கு, மஞ்சிட்டி, பறங்கிப்பட்டை, செஞ்சட்டி சமூலம், உழிஞ்ஞை, தும்பைப்பூ குடம், வகைக்கு 15 கிராம் எலுமிச்சம்பழச்சாறு விட்டரைத்து 1.5 லிட்டர் பசும்பாலில் வேக வைத்து இறுத்து அதோடு சந்தனம், திப்பிலி மூலம், கடுகு, அமுக்கூரம், தேவதாரம் வகைக்கு 15 கிராம் இவற்றை தும்பைச் சாற்றால் அரைத்து, நல்லெண்ணெய் 1.5 லிட்டர், வேப்பெண்ணெய் 375 மில்லி. ஒன்றாய் சேர்த்து காய்ச்சி மணல் பருவத்தில் வடிக்கவும். வடிப்பாத்திரத்தில் புனுகு 5 கிராம் போடவும். தலையில் தேய்த்து வெந்நீரில் முழுக உச்சி வர்மம், நரம்பு விஷம், விறையல் குற்றம், விசையின் வர்மம் எல்லாம் குணமாகும். 



மருத்துவப்பயன் :

(1) பல வர்ம இளக்கு முறைகளில் தட்டடங்கல் செய்யும் இடம்.

(2) சுவாசம், வலி இவைகளுக்கு உச்சியின் மேல் அடங்கல் செய்ய சுகமாகும். (வர்மானி திறவுகோல்-10)

(3) கொண்டைக் கொல்லி வர்மம் சுழுமுனை நாடியின் இணை வர்மங்களில் ஒன்று. இவ்வர்மத்தைப் பயன்படுத்தி சுழுமுனை நாடியையும், அதில் இயங்கும் வாயுவின் செயல்பாட்டையும் சீர்படுத்தலாம்.

(4) பதப்பு வர்மம் ஆக்கினை வர்மங்களில் ஒன்று. இதைக் கொண்டு ஆக்கினை ஆதாரத்தின் செயல்பாட்டைத் தூண்டலாம். இதன் மூலம் பஞ்ச பூதத்திலொன்றான ஆகாய பூதத்தின் குறைபாடுகளை சீர்செய்யலாம்.

(5) தலை-கழுத்து வர்ம தடவு முறைகளில் உச்சி வர்மத்தில் ஆரம்பித்து முன் புறமாகவும், பின் புறமாகவும், பக்கவாட்டிலும் தடவி விடும் நுட்பங்களில் உச்சி வர்மம் சிறப்பிடம் பெறுகிறது.

(6) உச்சி வர்ம தலத்திலுள்ள முடிக்கற்றையைப் பிடித்து இழுத்து விடுவது வர்ம இளக்கு முறைகளில் முக்கியத்துவம் பெறுகிறது.

(7) உச்சியில் எண்ணெய் வைக்கும் இடமும், குழந்தைகளுக்கு ஊதி விடும் இடமும் இதுவேயாகும்.




NANDRI SIDDHABOOK.COM

No comments:

Post a Comment