Sunday, December 14, 2014

புராணம் ஒரு அறிமுகம்!

புராணம் என்பது சுருக்கமாக உள்ள வேதங்களை தெளிவாக விரிவாக விளக்கமாக எடுத்துக்கூறுவதே என பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் கூறுகிறார். அதாவது சின்னஞ்சிறியதாக இருப்பதை பூதக்கண்ணாடி நன்றாகப் பெரிசு பண்ணிக் காட்டுகிறதல்லவா? இம்மாதிரி வேதத்தில் சுருக்கமாக, சின்னச் சின்னதாகப் போட்டிருக்கிற தர்மவிதிகளை கதைகள் மூலம் பெரிசு பண்ணிக் காட்டுவதுதான் புராணம். ஒன்றைச் சுருக்கமாகச் சொன்னால் அது மனஸில் ஆழப்பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக விஸ்தாரம் பண்ணிச் சொன்னால் நன்றாக மனசில் பதியும். ஸத்யம் வத (உண்மையே பேசு) என்று மட்டும் வேதம் சொல்கிறது. அப்படிப் பேசுவதால் எத்தனை பெருமை ஏற்படுகிறது என்பதை ஹரிச்சந்திரன் கதை பல அத்யாயங்களில் விஸ்தாரமாகச் சொல்கிறது. தர்மம் சர (அறத்தைப் பின்பற்று) என்று இரண்டு வார்த்தையில் வேதம் சொன்னதை நீள நெடுக மஹாபாரதத்தில் தர்மபுத்திரரின் கதையாகச் சொல்லியிருக்கிறது. மாத்ரு தேவோ பவ. பித்ரு தேவோ பவ வாக்குக்கு ஸ்ரீராம சரித்ரம் பூதக்கண்ணாடியாய் இருக்கிறது. அடக்கம், பொறுமை, தயை, கற்பு முதலான அநேக தர்மங்களை வேதத்தில் கட்டளையிட்டுள்ளவற்றை புராண புருஷர்களும், புண்ய ஸ்திரீகளும் தங்களுடைய சரித்திரத்தின் மூலம் நன்றாகப் பிரகாசிக்கும்படி செய்திருக்கிறார்கள். அவற்றைப் படிப்பதாலும், கேட்பதாலும் இந்த தர்மங்களில் நமக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டாகிறது.
புராணங்கள் தோன்றிய காலம்: புராணங்கள் பல உண்டு. அவற்றில் மகா புராணங்களையே பதினெண் புராணங்கள் என்று கூறுவர். வேதங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் உள்ள உட்பொருளை சற்றுக் கற்பனையும் கலந்து யாவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய கதை வடிவில் உள்ளவை புராணங்கள். புராண என்ற சொல்லுக்கு மிகப் பழைமையானது என்ற பொருள் உண்டு. புராணங்கள் எழுதப் பெற்ற காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே புராணங்கள் கூறப்பட்ட காலத்தைக் துள்ளியமாகக் கணித்துக் கூறுவது இன்றளவும் இயலாததாகவே உள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் மிகவும் பழமையானவை. உலக அளவில் மிகவும் பழமையான நூல்களாக இவை கருதப் படுகின்றன. வேதவியாசர் வாழ்ந்த காலத்தைக் கருத்திற் கொண்டு, புராணங்களின் காலம் கி.மு.6 அல்லது கி.மு. 7ஆம் நூற்றாண்டு என்று சமய நூல் விற்பன்னர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்து சமயத்தின் பொற்காலம்: கி.பி. 300-600 காலகட்டங்களில் வடநாட்டை ஆண்ட குப்தர்கள் வடமொழியை நன்கு போற்றி வளர்த்துள்ளனர். இந்து சமயமும் வடமொழி இலக்கியமும் புராணங்களும் நன்கு வளர்ச்சி பெற்றன. இவர்கள் காலத்தில் வடமொழியிலுள்ள தொன்மையான புராணங்கள் ஒழுங்குபடுத்தித் தொகுக்கப் பெற்றன என்பர். அதனால் குப்தர்கள் காலத்தை இந்து சமயத்தின் பொற்காலம் என்று அழைக்கின்றனர். எனவே வடமொழியில் புராணங்கள் தோன்றிய காலம் கி.பி.300 க்கும் முற்பட்டதாகக் கருத இயலும்.
கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி: திருப்பூவணப் புராணத்தில், சுச்சோதி தீர்த்த யாத்திரைச் சருக்கம், சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம், மற்றும் நளன் கலிமோசனச் சருக்கம் ஆகிய சருக்கங்கள் பாடப்பெற்றுள்ளன. இதனால், திருப்பூவணப் புராணம் அடங்கிய பிரமகைவர்த்த புராணம் எழுதப்பட்ட காலம், சுச்சோதி மற்றும் நளன் காலத்திற்குப் பிற்பட்ட காலம் என்பது உறுதி.
திருப்பூவணப் புராணத்தில் நளன்கலிமோசனச் சருக்கத்திலே,
மேவுமந்தமிகுந்திரையாயுக
மோவில்பல்புகழோங்குநளன்றனக்
கியாவுநல்கியிருங் கலி தீர்த்தருள்
பூவணேசன்பொற்கோயில்புகுந்தனன் (பாடல் 1325)
என்று கூறப்பட்டுள்ளது. எனவே கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான் என்பதும், அவனது ஆட்சிக்காலத்திற்குப் பிறகே பிரமகைவர்த்த புராணக்கதைகள் கூறப்பட்டுள்ளன என்பதும் உறுதி. கலியுகம் தோன்றி 5108 ஆண்டுகள் ஆகின்றன. எனவே பிரமகைவர்த்த புராணம் எழுதப் பெற்ற காலம் (கலி5108  கி.மு.2008  3100) கி.மு.3100க்குப் பிற்பட்டகாலம் எனத் திருப்பூவணப் புராணத்தின் வழியாக அறியமுடிகிறது. இந்நூல் பல்வேறு வகைகளில் கம்ப இராமாயணத்துடன் ஒப்பு நோக்கிப் பார்க்கப்படுகிறது.
இறைவன் குறித்த புராணங்கள்: நைமிசாரண்யத்தில் சூதர் சொன்ன கதைகளை வியாசர் புராணங்களாகத் தொகுத்தார் என்பது ஐதீகம். வியாசரால் தொகுக்கப்பட்ட புராணங்கள் பதினெட்டு. அந்தப் பதினெண் புராணங்களும், சத்துவம், ராஜஸம், தாமசம் ஆகிய முக்குணங்களுக்கு உரியவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
இதில்
சத்துவ குணப் புராணங்கள் விஷ்ணுவைப் புகழ்கின்றன. அவையாவன: விஷ்ணுபுராணம், பாகவத புராணம், நாரதீய புராணம், கருட புராணம், மத்ஸ்ய புராணம், கூர்ம புராணம்,  பத்மபுராணம், வராக புராணம், வாமன புராணம். ராஜஸ குண புராணங்கள் பிரம்மாவைப் புகழ்கின்றன. அவையாவன: பிரம்ம புராணம், பிரமாண்ட புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், பவிஷ்ய புராணம், வாமன புராணம். தாமஸ குண புராணங்கள் சிவனைப் போற்றுகின்றன. அவையாவன: சிவபுராணம், லிங்கபுராணம், ஸ்கந்த புராணம், மார்க்கண்டேய புராணம், அக்கினி புராணம், மத்சய புராணம், கூர்ம புராணம் முதலியன.
வேதத்தில் உள்ள தர்மவிதிகள் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சிரமமாக இருக்கும் . அதை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், கதைகளாக எழுதினார்கள். அவையே புராணங்கள். வேதத்தின் கண்ணாடி என்று புராணங்களைச் சிறப்பிப்பர். புரா என்றால் முற்காலத்தில் நடந்தது என பொருள்.வேதங்களைப் போலவே புராணங்களும் பிரம்மாவிடம் இருந்து வெளிப்பட்டதாக சாந்தோக்ய உபநிஷத், மத்ஸ்ய புராணங்கள் கூறுகின்றன. மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. 18 புராணங்களிலும் 5,09, 500 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் ஸ்கந்த புராணம் பெரியது. 1,81,000 ஸ்லோகங்கள் கொண்டது. மார்க்கண்டேய புராணம் சிறியது. 9000 ஸ்லோகங்களே உள்ளன.
வேதங்களின் அங்கங்களாக உள்ள பிராம்மணங்களில் கூட புராணங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நான்கு வேதங்களையும் தொகுத்த வேதவியாசரே புராணங்களையும் தொகுத்துக் கொடுத்துள்ளார். திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகிய மூவரும் உருவாகக் காரணமாக இருந்த வேதவியாசரே அவர்களின் உண்மை வரலாற்றை உடனிருந்து மகாபாரதம் என்ற இதிகாசமாக இயற்றியதுடன் ஸ்ரீமத் பாகவத புராணம் என்பதையும் இயற்றியுள்ளார். புராணங்களில் 18 பெரிய புராணங்களும் 18 சிறிய உபபுராணங்களும் இருக்கின்றன. பதினெட்டுப் பெரிய புராணங்களைப் பற்றிய விவரங்களை இனி பார்ப்போம்.
மற்ற புராணங்கள்: 1.அக்னி புராணம். 2.வாயு புராணம். 3.பவிஷ்ய புராணம். 4.நாரதீய புராணம். 5.ஸ்காந்தம் (கந்த புராணம்). 6.மார்க்கண்டேய புராணம்.
பிரம்ம புராணம் : பிரம்மன் தட்சப் பிரஜாபதிக்கு விவரிப்பதாக உள்ள இப்புராணத்தில் 25,000 ஸ்லோகங்கள் உள்ளன.
விஷ்ணு புராணம் : இது மிகவும் பழைமையானது. ஆறு காண்டங்களையும், ஒவ்வொரு காண்டத்திலும் ஐந்து பெரும் பிரிவுகளையும் கொண்டது. பராசர மகரிஷி, மைத்ரேயருக்கு உபதேசம் செய்ததே விஷ்ணு புராணமாகும்.
மத்ஸ்ய புராணம் : விஷ்ணுவின் முதலாவது அவதாரமான மத்ஸ்யம் (மீன்) தன்னைக் குறித்து மனுவிடம் விவரிப்பதாக உள்ளது இப்புராணம். பதிமூன்றாயிரம் ஸ்லோகங்களை உள்ளடக்கிய இப்புராணம் பல மன்னர்களின் வரலாறுகளைக் கதைபோல விவரிக்கிறது.
கூர்ம புராணம் : விஷ்ணுவின் இரண்டாவது அவதாரமான கூர்மம் (ஆமை) இந்திரத்யும்னன் என்று மன்னனிடம் விவரிப்பது போல அமைந்துள்ளது. இதில் எட்டாயிரம் ஸ்லோகங்கள் உள்ளன. இப்புராணத்தில்தான் முதன் முதலாக ஜம்புஸ்த்வபம் என்பதாக நமது பரதக்கண்டத்தின் பூகோள அமைப்பு விவரிக்கப்படுகிறது.
வராஹ புராணம் : விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராஹ அவதாரத்தை பதினான்காயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புராணம்.
வாமன புராணம் : பத்தாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப்புராணம் வாமன அவதார வரலாற்றை மட்டுமல்லாது பரமேஸ்வரன்பார்வதி ஆகியோரின் திருமண வரலாற்றையும் கூட விரிவாக விவரிக்கிறது.
கருட புராணம் : மகாவிஷ்ணுவானவர், தமது வாகனமாகிய கருடனுக்கு எட்டாயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கும் செய்திகளே இப்புராணம். இதில் மருத்துவம், வான் ஆராய்ச்சி, மரணத்திற்குப் பின் மனிதர்கள் அடையும் நிலைகள் ஆகியவையும் விளக்கப்படுகின்றன.
ஸ்ரீமத் பாகவத புராணம் : வியாசரே எழுதியது. மகாபாரதத்தில் முழுமையாக இடம் பெறாத ஸ்ரீகிருஷ்ணரின் முழு வரலாறும், விஷ்ணுவின் பிற அவதாரங்கள் குறித்த செய்திகளும், பன்னிரண்டு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு பதினெட்டாயிரம் ஸ்லோகங்களாக விவரிக்கப்பட்டுள்ளன.
லிங்க புராணம் : சிவபெருமானைக் குறித்தும் அவரது 28 வடிவங்களைப் பற்றியும் பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புராணம். லிங்க வழிபாட்டின் தோற்றமும், காரணமும், சிவபெருமானின் அவதார லீலைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
பத்ம புராணம் : ஆறு காண்டங்களில் 55,000 ஸ்லோகங்களைக் கொண்ட பெரிய புராணம் இது. பிரம்மனின் பத்மாசனம் விவரிக்கப்படுவதால் இது பத்ம புராணம் என்று பெயர் பெற்றது.
பிரம்மவைவர்த்த புராணம் : பிரம்மகாண்டம், ப்ரக்ருதி காண்டம், கணேச காண்டம், கிருஷ்ண ஜன்ம காண்டம் ஆகிய பிரிவுகளுடன் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. இதில் உள்ள கணேச காண்டம் என்ற பகுதிதான் விநாயக புராணம் என்ற உபபுராணமாக பின்னர் உருவானது. “கிருஷ்ண ஜன்ம காண்டம்” என்ற பகுதிகளில் உள்ள தகவல்களை ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் காணலாம்.
பிரம்மாண்ட புராணம் : பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப்புராணம் ஒரு பொன்னிற முட்டையிலிருந்துதான் நமது பிரபஞ்சம் (பிரம்மாண்டம்) தோன்றி விரிவடைந்தது என்று விவரிக்கிறது. நவீன விஞ்ஞானம் தற்காலத்தில் நம்பும் பெருவெடிப்பு என்ற நிகழ்வை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தொகுக்கப்பட்ட இப்புராணத்தில் காணலாம்.
அக்னி புராணம் : அக்னிதேவன் வசிஷ்ட மகரிஷிக்கு விவரித்தது இப்புராணம். சிவலிங்கம், துர்க்கை, இராமர், கிருஷ்ணர் ஆகியோரைப் பற்றியும், நாடகம், சிற்பம், ஜோதிடம் போன்ற கலைகளைப் பற்றியும் விவரிக்கிறது என்பது இப்புராணத்தின் சிறப்பாகும்.
வாயுபுராணம் : பதினான்காயிரம் ஸ்லோகங்களைக் கொண்டு இப்புராணத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஆண்ட குப்த வம்சத்து மன்னர்களைப் பற்றியும், கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணபட்டர் என்பவரைப் பற்றியும் கூட தகவல்களைத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பவிஷ்ய புராணம் : வருங்காலத்தில் என்னென்ன நிகழ்வுகளெல்லாம் நடக்க இருக்கின்றன என்று சூரியன் முன் கூட்டியே மனுவுக்குத் தெரிவிப்பதாக அமைந்தது இப்புராணம். ஸ்தலங்களைப் பற்றியும் அங்கெல்லாம் யாத்ரிகர்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளைப் பற்றியும் கூட இப்புராணம் விவரிக்கிறது.
நாரதீய புராணம் : நாரத மகரிஷியானவர் சனத்குமாரருக்கு உபதேசித்தது இப்புராணம். 25,000 ஸ்லோகங்கள் இதில் உள்ளன.
ஸ்காந்தம் : முருகனின் வரலாற்றை விவரிப்பதுதான் இப்புராணம்
மார்க்கண்டேய புராணம் : மிகப்பழைமையான புராணம் இது. இதிலுள்ள தேவி மகாத்மியம் என்ற பகுதிதான், பின்னர் தனியான ஓர் உப புராணமாக உருவெடுத்தது.
மேற்குறிப்பிட்ட பதினெட்டு பெரிய புராணங்களும் தேவபாஷையாகிய சம்ஸ்கிருதத்தில் தான் உள்ளன என்றாலும் பிற்காலங்களில் பாரத நாட்டின் பல்வேறு பாஷைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ஸ்காந்தம் தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியரால் கந்தபுராணம் என்ற பெயரில் வழிநூலாக எழுதப்பட்டது. ஹாலாஸ்ய மகாத்மியம் என்ற உப புராணம் தான் பின்னர் திருவிளையாடற் புராணம் என்ற பெயரில் தமிழில் உருவெடுத்தது. பதினெண் புராணங்கள் எனப்படினும் அவை உண்மையில் வாயு புராணத்துடன் 19 என்று ரோமஹர்ஷனர் (அ) லோமஹர்ஷனர் கூற்றாக ஓர் ஆங்கில நூலில் வாயுபுராணத்துடன் சேர்த்து 19 பெயர்கள் தரப்பட்டுள்ளன. இந்த ரோமஹர்ஷனர் வியாசரின் சீடர்களில் முதன்மையானவர் என்றும், புராணங்களைக் கூறும் இனத்தவர் என்பதால் சூதர், சூதமுனிவர், சூதபவுராணிகர் என்றும் அழைக்கப்படுகிறார்.
புராணங்கள் சூதமுனிவரால் நைமிசாரணிய முனிவர்களுக்கு உபதேசிக்கப்பட்டுப் பின்னர் சீடர்கள் பலர் மூலம் பரவின என்பர். அவை வடமொழியில் இயற்றப்பட்ட பின் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் பிற்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. எனினும் புராணங்கள் முதன்முதலில் தோன்றிய வரலாறு பற்றி அகச்சான்றுகள் சில உள்ளன. எடுத்துக்காட்டுகள் :
1. சிவ புராணம் - பிரம்மாவால் நாரதருக்குக் கூறப்பட்டது.
2. கூர்ம புராணம் - புலஸ்தியரால் நாரதருக்கு கூறப்பட்டது.
3. கருட புராணம் - கருடன் காசியபருக்குக் கூறினார்.
4. மார்க்கண்டேய புராணம் - மார்க்கண்டேயர் வியாசர் சீடர்களில் ஒருவரான ஜைமினி முனிவருக்கு கூறியது.
5. அக்கினி புராணம் - அக்கினி தானே வசிஷ்டருக்குக் கூற அவர் வியாசருக்கு கூறினார்.
6. வராக புராணம் - வராகரே கூறினார்.
7. கந்த புராணம் - கந்தனே கூறி அருளினார்.
8. வாயு புராணம் - வாயுவாலேயே கூறப்பட்டதாகும்.
9. விஷ்ணு புராணம் - மத்ஸ்யாவதார விஷ்ணு, மனுவுக்குக் கூறினார்.

No comments:

Post a Comment