Wednesday, August 4, 2010

நொடியில் தோன்றி அசுர வதம் புரிந்த நரசிம்ம அவதாரம்!

தீமையை அழித்து அறத்தைக் காக்க திருமால் எடுத்த வடிவங்களே அவதாரங் கள் எனப்படுகின்றன. அவ்வகையில் மனித உடலுடனும் சிங்க முகத்துடனும் மாலவன் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் ஒரு குறிக்கோளுடன் திட்டமிடப்பட்டு, பிறந்து, வளர்ந்து தக்க தருணத்தில் தீமையை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் நரசிம்ம அவதாரமோ ஒரு நொடியில் தோன்றி அசுரவதம் செய்து பக்தனைக் காத்த அவதாரமாகும்.

தான் எவராலும் வெல்லப்படாத வனாக- என்றும் மரணமற்றவனாக வாழ வேண்டுமென்று மிக சாமர்த்தியமாக வரங்களைப் பெற்றான் இரண்யன். "பூமியிலோ வானத்திலோ எனக்கு மரணம் நிகழக் கூடாது; வீட்டிற்கு உள்ளேயோ வெளியிலோ மரணம் சம்பவிக்கக் கூடாது; இரவிலோ பகலிலோ உயிர் பிரியக்கூடாது; தேவர், மனிதர், அரக்கர், மிருகம், பறவை போன்ற உயிரினங் களால் மரணம் ஏற்படக் கூடாது; எந்த வகை ஆயுதங்களாலும் என் உயிர் பறிக்கப்படக் கூடாது' போன்ற வரங்களைப் பெற்றான்.

அதனால் உண்டான மமதையில் இறை நிந்தனை செய்து, "நாராயணனே கடவுள்' என்று சொன்ன தன் மகனையே கொல்ல முயன்றான். அந்தத் தருணத்தில்தான் தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரே நொடியில் தூணைப் பிளந்துகொண்டு அவதரித்தார் நரசிங்கப் பெருமாள். இரண்யன் பெற்ற வரத்திற்குப் பொருந்தாத நரசிம்ம வடிவோடு, பகலும் இரவும் அற்ற அந்தி வேளையில், உள்ளேயோ வெளியிலோ என்றில்லாமல் வாயிற்படியில், தரையிலோ ஆகாயத்திலோ என்றில்லாமல் தன் மடியில் கிடத்தி, எவ்வித ஆயுதங்களையும் பயன் படுத்தாமல் தன் நகங்களாலேயே இரண்யன் வயிற்றைக் கிழித்தார். அவன் குடலை உருவி மாலையாக அணிந்துகொண்டு ரத்தத்தையும் உறிஞ்சிக் குடித்து வதம் செய்து முடித்தார்.

தாங்கொணா உக்கிரத்தோடு இருந்த அவரை சாந்தப்படுத்த பிரகலாதனை அவரருகே அனுப்பினர். சற்று சாந்தம் கொண்டார் பெருமாள். பின் லட்சுமி தேவியை அனுப்பினர். முற்றிலும் உக்கிரம் நீங்கிய பெருமாள் லட்சுமியை மடியில் அமர்த்தியபடி சாந்த சொரூபராக- லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுத்தார். இவ்வாறு நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில். அந்த நாளையே ஒவ்வொரு ஆண்டும் நரசிம்ம ஜெயந்தி விழாவாக வைணவத் தலங்களில் கொண்டாடுகின்றனர்.

நரசிம்மர் கோவில் கொண்டுள்ள சிறப்பான தலங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளன. அதில் ஆந்திர மாநிலத்திலுள்ள அகோபிலம் முக்கியமான இடத்தை வகிக்கிறது. நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலம் இதுதான். இரண்யன் ஆண்ட இடம், பிரகலாதன் வாழ்ந்த இல்லம், கல்வி கற்ற இடம் போன்றவை இங்கு உள்ளன. இரண்யன் வதை நடைபெற்ற அரண்மனையில் நரசிம்மர் வெளிப்பட்ட தூண் உக்கிர ஸ்தம்பம் என்னும் பெயரில் இன்றும் உள்ளது. திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான் அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டார். புகழ் பெற்ற இந்த அகோபிலம் தலம் அமைந்துள்ள மலைப்பகுதி ஆதிசேஷன் போன்ற தோற்றத்தில் அமைந்துள் ளது. இம்மலைத் தொடரின் ஒரு பக்கம் திருமலை அமைந்திருக்க, இன்னொரு பக்கம் ஸ்ரீசைலம் விளங்குகிறது.

கருடன் வழிபட்ட ஒன்பது நரசிம்ம மூர்த்தங் களும் சுயம்பு வடிவங்களே!

1. அகோபில நரசிம்மர்: உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே.

2. பார்க்கவ நரசிம்மர்: மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். ராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது ராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.)

3. யோகானந்த நரசிம்மர்: மலைமீது, தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் இங்கே யோக நிலையில் அமர்ந்துள் ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர்.

4. சத்ரவத நரசிம்மர்: கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர். அரிய வகை கருங்கல்லாலான திருவடிவம்.

5. க்ரோத (வராக) நரசிம்மர்: பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ளனர். இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத் தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம்.

6. கராஞ்ச (சாரங்க) நரசிம்மர்: மேல் அகோபிலத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளார். கராஞ்ச மரத்தடியில் கோவில் கொண்டு, கையில் வில்லேந்தியுள்ளதால் இப்பெயர் பெற்றார்.

7. மாலோல நரசிம்மர்: "மா' என்றால் லட்சுமி. "லோலன்' என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார். அகோபிலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் கொண்டுள்ளார்.

8. பாவன நரசிம்மர்: பவனி நதிக்கரையில் கோவில் கொண்டதால் இப்பெயர் பெற்றார். அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும்.

9. ஜ்வாலா நரசிம்மர்: மேரு மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுவென்கின்றனர். இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.

மேலும் ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதிக்கரையில்- நாகார்ஜுனா அணைக்கும் விஜயவாடா நீர்த்தேக்கத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் புகழ்பெற்ற ஐந்து நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. மங்களகிரி லட்சுமி நரசிம்மர், வாடப்பள்ளி நரசிம்மர், வேதாத்திடை யோக நரசிம்மர், மட்டப்பள்ளி லட்சுமி நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர் எனப்படும் சாளக்கிரம வீரலட்சுமி நரசிம்மர் ஆகிய தலங்களே அவை.

இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.

இவற்றில் பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.

பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரி கோவில் ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இவையன்றி இன்னும் பல தலங்களில் நரசிம்மர் கோவில் கொண்டுள்ளார். நரசிம்ம ஜெயந்தி நாளில், தன் பக்தனுக்காக நொடிப் பொழுதில் தோன்றி காத்து ரட்சித்த அந்த உலக நாயகனை வணங்கிப் பேறு பெறுவோம்.

No comments:

Post a Comment