அகழ்வாராய்ச்சி
உலகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்த பண்டை மக்கள், தனித்தும் பிறரோடு கலந்தும் பலவகை நாகரிகங்களையும் பண்பாட்டையும் வளர்த்து வந்தனர். கற்காலமக்கள் செம்பைப் பயன்படுத்தத் தொடங்கியதும் கல்லால் செய்யப்பட்ட பல பொருள்களைப் புறக்கணித்துவிட்டனர். பயன் இல்லாத மண்பாண்டங்களை விலக்கினர். இவ்வாறு நீக்கப்பட்ட அப்பொருள்கள் கவனிப்பு இல்லாமல் நாளடைவில் மண்ணுக்குள் புதையுண்டன. மேலும் பண்டையமக்கள் நல்லிடங்களைத் தேடி அடிக்கடி இடம் மாறித் திரிந்தனர். ஆதலின் ஆங்காங்குப் பழுது அடைந்த பொருள்களை விட்டுவிட்டுச் சென்றனர். அப்பொருள்கள் நாளடைவில் மண்ணுக்குள் புதைந்தன. ஆற்று ஓரங்களிலும் கடற்கரை ஓரத்திலும் வாழ்ந்த மக்கள் இயற்கை சீற்றத்திற்கு அஞ்சி இடம் பெயர்ந்தனர். இயற்கைச் சீற்றத்தாலும் பல்வேறு காரணங்களினாலும் மக்கள் பயன்படுத்தியவை மண்ணுள் மறைந்தன. ஆற்றின் அடியில் புதையுண்டன. பல சமவெளிகளில் மண்மேட்டினுள் புதைந்தன. இங்ஙனம் புதைந்து கிடப்பவற்றைக் கண்டுபிடிக்க மண்மேடிட்ட இடங்களைத் தோண்டிப் பார்த்தனர். அவ்விடங்களில் காணப்படும் பல திறப்பட்ட பொருள்களை ஆய்ந்தனர். அவற்றைப் பற்றிய உண்மை அவற்றைப் மற்றும் பயன்படுத்திய மக்களின் வாழ்க்கை முறை ஆகியவை பற்றி அறிய முயன்றனர். இத்தகைய முயற்சியே அகழ்வாராய்ச்சி.
· அகழ்வாராய்ச்சிகளின் பயன் அகழ்வாராய்ச்சியின் வாயிலாக உண்மைச் செய்திகளையும் அவற்றைப் பயன்படுத்திய பண்டைய மக்களைப் பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்ள முடியும். அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் தொல் பழங்கால மக்களின் பண்பாட்டுக் கூறுகளான வாழ்க்கை முறை, நம்பிக்கை, சடங்கு, வழிபாடு, பேசிய மொழி, கலையார்வம் முதலியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
மொகஞ்சதாரோ - ஹரப்பா உணர்த்தும் பண்பாடு
கி.பி. 1922-ஆம் ஆண்டுவரை வேத கால நாகரிகமே இந்தியாவின் தொல் பழங்கால நாகரிகமெனக் கூறப்பெற்று வந்தது. ஆனால் 1922-ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையினர் சிந்து மாநிலத்தில் மொகஞ்சதாரோ என்னும் இடத்திலிருந்த ஒரு பெரிய மண்மேட்டைத் தோண்டி அகழ்வாராய்ச்சி நிகழ்த்தினர். அதன் வாயிலாக, அங்கு மண்ணுக்கு அடியில், ஓர் அழகிய நகரம் புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல மேற்குப் பஞ்சாப் மாநிலத்தில், ஹரப்பா என்னும் நகரம் புதைந்து கிடப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விடங்களில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்தி, மண்ணுக்கு அடியில் புதைந்து கிடந்த இந்த இருநகரங்களைப் பற்றிய செய்திகளை உலகறியச் செய்தவர், தொல்பொருள் ஆய்வியல் அறிஞர். சர். ஜான் மார்சல் (Sir John Marshall) என்பவர். இப்புதையுண்ட நகரங்களைப் பற்றிய செய்திகளின் தொகுப்பு. பிற்காலத்தில், "சிந்துவெளி நாகரிகம்" (Indus Valley Civilization) என்றும் "ஹரப்பா பண்பாடு" (Harappan Culture) என்ற தலைப்புகளில் அறியப்படலாயின என்றும் அழைக்கப்பட்டன.
· சிந்துவெளி நாகரிமும் தமிழர்களும் சிந்துவெளி நாகரிகத்தைத் திராவிடர் நாகரிகம் (தமிழர் நாகரிகம்) என்று கூறுவதற்கு அங்குத் தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களும், வெளிப்பட்ட கட்டட அமைப்பும், பயன்படுத்திய நாணயங்களும் சான்றாக அமைந்துள்ளன. இவ்வுண்மையை, சர். ஜான் மார்ஷல், சர். மார்டிமர் வீலர் (Sir Mortimer Wheeler), ஹிராஸ் பாதிரியார் (Father Heros) போன்ற தொல்லியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வு முடிவுகளாக வெளியிட்டுள்ளனர். மேலும் டாக்டர் எச்.ஆர். ஹால் (Dir. H.R. Hall) என்ற வரலாற்று அறிஞர். "சமீப கிழக்கின் தொன்மை வரலாறு" (Ancient History of the near east) என்ற நூலிலும் பல சான்றாதாரங்களுடன் நிறுவியுள்ளார். தொல்லியல் அறிஞர், ஜராவதம் மகாதேவன் என்பவரும், மொகந்சதாரோ முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் தமிழ் - பிராமி எழுத்துகளை ஒத்திருக்கின்றன என்று குறிப்பிடுகின்றார். மேலும் அங்குக் கிடைத்துள்ள பல தகவல்கள் எந்த வகையில் தமிழோடும் தமிழர்களோடும் தொடர்புடையன என்பதையும் தம் ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளார். மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் எனவும், தமிழர் நாகரிகமும் பண்பாடும் இந்திய நாடு முழுவதும் பரவியிருந்தது எனவும் வரலாற்றுப் பேராசிரியர் கே.கே. பிள்ளை போன்றோர் குறிப்பிடுகின்றனர்.
· சிந்துவெளி புலப்படுத்தும் தமிழ்ப்பண்பாடு சிந்து வெளியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட நகரங்களின் இல்லங்கள் வரிசையாகக் கட்டப்பட்டுள்ளன. மாட மாளிகைகள், மண்டபங்கள், நீராடும் குளம், கழிவு நீர்ப்பாதைகள் ஆகியவையும் காணப் பெறுகின்றன. எளியமையான வீடுகளிலும் தனித்தனியே சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை முதலியன இடம் பெற்றிருந்தன. கற்பனையும், அழகும், தொழில் நுட்பமும் பொருந்திய கட்டடக் கலை மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியைப் புலப்படுத்தும் என்பதை முன்னரே பார்த்தோம். மனிதன், தன் வாழ்க்கை நோக்கத்தையும், அழகு உணர்வோடு கூடிய பயன்பாட்டையும், தான் அமைக்கும் கட்டடங்களில் வெளிப்படுத்துகின்றான். இது அவனது பண்பாட்டுக் கூறுகளில் சிறப்புடையது. சிந்துவெளி நாகரிகம் வாயிலாக வெளிப்படும் தமிழர் பண்பாடு இதைத்தான் நமக்குப் புலப்படுத்துகிறது.
அரிக்கமேடு அகழ்வராய்ச்சி உணர்த்தும் பண்பாடு
புதுச்சேரிக்கு அருகாமையில் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சியும் தமிழர் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துகின்றது.
அரிக்கமேடு அகழ்வராய்ச்சியில் கிடைத்தவை
இங்கு மண்பாண்டங்கள் பல கிடைத்துள்ளன. விற்பனைச் சாலைகள், பண்டகச் சாலைகள், முதலியவை இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து என்ன புலப்படுகிறது? தொல் பழங்காலத் தமிழ் மக்கள் செம்மைப்பட்ட வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தனர் என்பது புலப்படுகிறது. இத்தகைய வாழ்க்கை முறை அவர்களது தொன்மையான பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி உணர்த்தும் பண்பாடு
இந்தியாவிலேயே மிகப் பெரிய அகழ்வாராய்ச்சியாகக் கருதப்படுவது, திருநெல்வேலி பக்கத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியாகும். இங்கு மனித எலும்புக்கூடுகள், மெருகிட்ட மண்பாண்டங்கள், இரும்பாலான சில கருவிகள், பொன்னாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட அணிகலன்கள், சிறு வேல்கள் ஆகியவை அடங்கிய தாழிகள் பல கிடைத்துள்ளன. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று தாழிகள் அமைத்தல். இறந்தோரைப் புதைப்பதற்காகத் தாழிகளை நம் முன்னோர் பயன்படுத்தியுள்ளனர். அத்தாழிகளில் இறந்தோரைப் புதைக்கும் பொழுது, அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும், விரும்பிய பொருள்களையும், இறந்தோர் உடலுடன் புதைத்த பழைய மரபை அத்தாழிகளில் அறிய முடிகிறது. இன்றைக்கும் சில இடங்களில் இந்தப் பழைய மரபு பின்பற்றப்படுகிறது. தாழிகளைத் தோண்டி எடுத்ததின் மூலம், தமிழர் பண்பாட்டுக் கூற்றை வெளிப்படுத்தும் பழக்க வழக்கத்தையும், நம்பிக்கையையும் அறிய முடிகிறது.
No comments:
Post a Comment