Sunday, March 9, 2014

கருட புராணம் பகுதி-2

13. பாவ புண்ணியங்களை ஆராயும் பன்னிரு சிரவணர்கள் சிருஷ்டி தொடங்கி நடைபெற்று வரும்போது எல்லோரும் அவரவர் தொழிலைச் செய்யத் தொடங்கினர். யமனது சங்கடம் ஆற்றல் மிக்க யமதர்மராஜன் ஜைமினி நகரில் அரியாசனத்தில் அமர்ந்து ஜீவர்களின் பாவபுண்ணியங்கள் பற்றி ஆராயத் தொடங்கினான். ஆனால், சேதனர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை அவனால் அறிந்து கொள்ள இயலவில்லை. யமன் நான்முகனை அடைந்து பாவ புண்ணியங்களை அறிந்து கொண்டு, அதற்குத் தக நடக்கவும் தனக்கு அருள் புரியுமாறு வேண்டினான். சிரவணர்கள் தோற்றம் அதைக் கேட்ட பிரம்மன் ஒரு தர்ப்பைப் புல்லைக் கொண்டு நீண்ட கண்கள், அழகு, அகக்கண் கொண்டு புண்ணிய பாவங்களை அறிந்து இயமனுக்கு உதவ பன்னிருவரைத் தோற்றுவித்தார். அவர்களே பன்னிரண்டு சிரவணர்கள். இயமன் அவர்களுடன் தென்புலம் அடைந்து சேதனர்களின் பாவபுண்ணியங்களை அறிந்து அதற்கேற்ப காத்தும், தண்டனை அளித்தும் வரலானான். உலகில் ஒரு ஜீவனின் இறுதிக்காலம் முடிந்தவுடன் அங்குஷ்ட அளவில் வாயு வடிவிலான ஜீவனை யமகிங்கரர்கள் யமபுரிக்கு அழைத்துச் செல்வர். தர்மவான்கள் கர்ம மார்க்கமாகவே வைவஸ்வத நகரம் என்னும் யமபுரிக்கு அழைத்துச் செல்லப்படுவர். சான்றோர்க்குப் பொன், பொருள் வழங்கியோர் விமானங்களில் ஏறிச் செல்வர். பெரியோர்கள் விரும்பியவற்றை விரும்பியவாறே அளித்தவர்கள் குதிரை மீதேறிச் செல்வர். வீடுபேற்றை விரும்பி வேத சாஸ்திர புராணங்களை அறிந்த பக்தர்கள் தேவ விமானம் ஏறி தேவருலகம் செல்வர். இவற்றில் சேராத பாவிகள் கால்களால் நடந்தே செல்வர். அவ்வழியில் கூர்மையான இலைகள் கொண்ட செடி, கொடிகளும், வறுத்துக் கொட்டிய மணல்களும் நிறைந்திருக்கும். அவ்வழியில் போகும் போது மிகவும் வருத்தம் ஏற்படும். ஜீவன் வாழும்போது சிரவணரைப் பூசித்து இருந்தால் அவர்கள் அந்த ஜீவனின் பாவங்களைப் பொருட்படுத்தாமல், புண்ணியங்களை மட்டுமே யமனிடம் சொல்வார்கள். சிரவணரைப் பூசிப்பவர்களுக்குப் பாவம் செய்ய மனமே இடம் தராது. பன்னிரண்டு கலசங்களில் நீர் நிரப்பி, அன்னம் தயாரித்து அக்கலசங்களைச் சிரவணர்களாகவே எண்ணி அந்தணர்க்குத் தானம் செய்ய வேண்டும். அந்த ஜீவன்களுக்குச் சிரவணர்கள் யமலோகத்தில் எல்லா நன்மைகளையும் செய்வர்.

 14. ஜீவன் யமலோகம் செல்லுதல் மானிடர் உலகத்துக்கும் யமபுரிக்கும் இடையில் எண்பத்தாறாயிரம் காதம் இடைவெளி உள்ளது. யமதர்ம ராஜன் ஒவ்வொருவர் ஆயுட்காலம் முடிந்ததும் ஜீவனைப் பிடித்து வரும்படி யம தூதர்கள் மூவகையினரை அனுப்பி வைப்பான். அந்த யமகிங்கரர்கள் ஜீவனைப் பாசத்தால் கட்டிப்பிடித்து காற்றின் உருவமான தேகத்தில் அடைந்து யமலோகம் கொண்டு செல்வர். அங்கு யமனுக்கு எதிரில் ஆவியுருவச் சீவர்களை அவிழ்த்து நிறுத்தி அவர்கள் ஆணைப்படி நடக்கச் சித்தமாக இருப்பதாகக் கூறுவர். அப்போது கூற்றுவன் யமகிங்கரர்களிடம் அச்சீவன்களை மீண்டும் கொண்டு போய் அவர்கள் வீட்டிலேயே விட்டு விட்டு பன்னிரண்டு நாட்கள் கழித்த பிறகு, முறைப்படி மீண்டும் கொண்டு வருமாறு ஆணையிடுவான். இதனால்தான் இறந்தவன் உடலை உடனே எரிப்பதோ, புதைப்பதோ கூடாது. யமகிங்கரர்களால் அவிழ்த்து விடப்பட்ட வாயு வடிவுடைய ஜீவன் சுடுகாட்டில் தன் சிதைக்குப் பத்து முழ உயரத்தில் ஆவி வடிவில் நின்று திரும்பவும் புகமுடியாதவாறு தீப்பற்றி எரியும் உடலைப் பார்த்து ஓலமிட்டு அழும். புண்ணியம் செய்த ஜீவன் இவ்வுடல் எரிந்து ஒழிந்ததே நல்லது என்று மகிழ்ச்சி அடையும். தேகம் முழுவதும் எரிந்து சாம்பலான உடனே ஜீவனுக்குப் பிண்டத்தாலான சரீரம் உண்டாகும். இறந்தவனின் புத்திரன் முதல் நாள் போடும் பிண்டத்தால் சிரசும், இரண்டாம் நாள் கழுத்தும் தோள்களும், மூன்றாம் நாள் மார்பும், நான்காம் நாள் வயிறும், ஐந்தாம் நாள் உந்தியும், ஆறாம் நாள் பிருஷ்டமும், ஏழாம் நாள் குய்யமும், எட்டாம் நாள் தொடைகளும், ஒன்பதாம் நாள் கால்களும், பத்தாள் நாள் சரீரம் முழுவதும் உண்டாகும். ஜீவன் உடலை விட்டுப் பிரியும் முன்பேயே உள்ளே நுழையாமல் வாசலிலேயே நின்று கதறிக்கொண்டு நிற்கும். பிண்ட உருவைப் பெற்ற பதினொன்றாம் நாளிலும், பன்னிரண்டாம் நாளிலும் புத்திரனால் பிராமண முகமாய் கொடுக்கப்பட்டவற்றை உண்டு பதின்மூன்றாம் நாளன்று மறுபடியும் யமகிங்கரர்கள் இழுத்துச் செல்ல திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே யமலோகத்தை அடையும். பயங்கரமான பாதையில் வாள் போன்ற இலைகள் கொண்ட செடி கொடிகள், வறுத்த மணல் இருக்கும் வழியில் செல்ல வேண்டும். இவ்வழியில் செல்லும் ஜீவன் படும் துன்பம் சொல்லத் தரமன்று. சர்வேசுரன் ஒருவன் உண்டென்றும் சுவர்க்கம், நரகர் அடைய நன்னெறி, தீய நெறி உண்டென்றும், பிறப்புக்கு அப்பால் உள்ள வாழ்வுக்கு இதமானவற்றைச் சொல்லுபவர்களோடு முரண்பட்டு சாதுக்களை ஏசித்திருந்தேனே, அவற்றின் பயனை இப்போது உணர்கிறேன் என்றும் ஏகாதசியில் உபவாசம் இருக்கவில்லை. நற்செயல், நல்வினை ஏதும் செய்யவில்லை, என்றெல்லாம் கூறிப் புலம்பும் ஜீவனை யமகிங்கரர்கள் யமபுரிக்கு அழைத்துச் செல்வர்.

 15. ஜீவன் செல்லும் பாதையில்.... யம தூதர்களால் பாசக்கயிற்றால் பிணைக்கப்பட்டு அவர்களிடம் உதைப்பட்டுச் செல்லும் ஜீவன் தான் மனைவி மக்களுடன் உலகில் வாழ்ந்த காலத்தில் அடைந்த இன்பத்தை எண்ணி எண்ணி துன்பமுறும். தான் செய்த தவறுகளை, அதர்ம காரியங்களை நினைத்துக் கண்ணீர் வடிக்கும். தன்னால், தன் பொருளால் சுகத்தை அனுபவித்த மனைவி மக்கள் எவரும் தற்போது கூட வரவில்லையே. மற்றவர்கள் வயிறெரிய பொருள் சேர்த்தோம். இப்போது நம் வயிறு பற்றி எரிகிறதே என்று அலறித் துடிக்கும். அப்போது யமதூதர்கள் அவன் கன்னத்தில் அறைந்து மனைவி மக்களே நித்தியம் என்று அறம் செய்யாமல் நடத்திய அதர்ம வாழ்க்கை என்ன ஆயிற்று? நீ செய்த புண்ணிய பாவமே உனக்கு இவ்வுலகில் இன்பம், (அ) துன்பத்தைத் தரவல்லது. பிறர் பொருளை அபகரித்தல் போன்ற அதர்மங்களை செய்யாமல் தர்மம் செய்து வாழ்ந்திருந்தால் இப்போது இக்கேடு வராதல்லவா? என்று பலவாறு இடித்துக் கூறி, பாசத்தால் நையப்புடைத்து முசலத்தால் புடைபுடை என்று புடைப்பார்கள். சேதனன் காற்று நிறைந்த வழியில் கடும் புலிகள் நிறைந்த பாதையில் யமகிங்கரர்களுடன் சென்று ஓரிடத்தில் தங்கி, புதல்வனால் இருபத்தெட்டாம் நாளில் செய்யப்படும் ஊனமாச சிரார்த்த பிண்டத்தை உண்டு, முப்பதாம் நாளன்று யாமியம் என்ற நகரத்தை அடைவான். அங்குப் பிரேதக் கூட்டங்கள் இருக்கும். மற்றும் பத்திரை என்ற நதியும், வட விருக்ஷமும் உள்ளன. சிறிது நேரச் சிரம பரிகாரத்துக்காக யமகிங்கரர்களுக்கு அஞ்சி அவ்யாமியம் என்ற நகரில் தங்கி, இரண்டாவது மாசிய பிண்டத்தை உண்டு, தொடர்ந்து யமகிங்கரர்களால் ஆரணியத்தின் வழியே இழுத்துச் செல்லப்பட்டு துன்புற்று, திரைபக்ஷக மாமிச பிண்டத்தை வேண்டி அரசன் சங்கமனின் கௌரி நகரைச் சார்ந்து மூன்றாம் மாசிக பிண்டத்தைப் புசித்து அப்பால் சென்று வழியில் கடுங்குளிரால் வருந்துவான். யமகிங்கரர்கள் எறியும் கல் மழையால் வருத்தமுற்று குரூரன் என்ற அரசனின் குரூரபுரம் அடைந்து ஐந்தாவது பிண்டத்தைப் பெறுவான். அடுத்து கிரௌஞ்சம் என்ற ஊரை அடைந்து ஆறாவது மாசிகப் பிண்டத்தை உண்பான். அங்கு அரை முகூர்த்த காலம் சிரமபரிகாரம் செய்து கொண்டு பயங்கரப் பாதையில் செல்கையில் பூவுலக வாழ்வை எண்ணி புலம்ப, யம கிங்கரர்கள் அந்த வாய் மீதே புடைப்பார்கள். அடுத்து இரத்தம், சீழ், சிறுநீர், மலங்கள் நிறைந்த வைதாரணி ஆறு வரும். கோதானம் செய்திருந்தால் அது வந்து படகோட்டிகள் அருகில் உன்னை நதிக்கு அப்புறம் சேர உதவும். கோதானம் செய்யாதவர் அந்த ஆற்றில் நெடுங்காலம் மூழ்கித் தவிக்க வேண்டும். எனவே பாரதத்தில் பிறந்து வாழும் ஒவ்வொரு ஜீவனும் வைதரணி கோதானம் செய்ய வேண்டும். அல்லது அவன் மரித்த பிறகு அவனுடைய புத்திரனாவது செய்ய வேண்டும். அடுத்த நமனுக்கு இளையோனான விசித்திரனது நகரை அடைந்து ஊனஷானி மாசிகப் பிண்டத்தை உண்டு, பிறகு அவ்விடம் விட்டுப் புறப்படுகையில், ஏழாம் மாதம் பிண்டத்தை உண்ணும்போது பிசாசுகள் தோன்றி நம்பினவரைக் கெடுத்த ஜீவன் அந்த அன்னத்தை உண்ணத் தகுதியற்றவன் என்று கூறி பலவந்தமாக பறித்துக் கொண்டு போகும். ஈத்துவக்கும் இன்பம் பெறாத ஜீவன், தன் புத்திரனால் அவனுக்காகக் கொடுக்கப்படும் மாசிகப் பிண்டம் அவனுக்குச் சேராமல் பைசாசங்களைச் சேரும் சாக்காடு நிச்சயம் என்று உணராமல் பிறர் பசிதீர அன்னதானம் செய்யாமல் வாழ்ந்த நான் படுந்தொல்லையை யாரிடம் சொல்வேன்? என்று துயருறும். மானிடப் பிறவி அடைந்த ஜீவன் தான, தரும, பூசை முதலியவற்றால் புண்ணியங்களைச் சேர்க்கவேண்டும். அப்பிறவியில் செய்யப்படும் நல்வினைத் தீவினைப் பயன்களையே அது அடையும். ஜீவன் உதககும்பதானம் செய்திருப்பின் அந்த உதக கும்ப நீரைப்பருகி தாகவிடாய் தீர்ந்து ஏழாம் மாதத்தில் மீண்டும் பயணத்தைத் தொடரும். யமபுரிக்கான பாதையில் பாதி தூரம் கடந்து விட்டதால் அவனுக்குரியவர் பூவுலகில் அப்போது அன்னதானம் செய்யவேண்டும். பிறகு பக்குவப்பதம் என்ற நகரில் எட்டாவது மாசிகப் பிண்டத்தையும், துக்கதம் என்ற ஊரில் ஒன்பதாவது மாத பிண்டத்தையும், நாதாக்கிராந்தம் என்ற நகரில் பத்தாம் மாசிக பிண்டத்தையும் உண்பான். அதபதம் என்ற ஊரை அடைந்து பதினொன்றாம் மாத பிண்டத்தை உண்டு, அடுத்த சீதாபரம் என்ற ஊரை அடைந்து சீதத்தால் வருந்தி, பன்னிரண்டாம் மாத வருஷாப்தி பிண்டத்தை உண்டு, அடுத்து வைவஸ்வத பட்டணம் சேரும் முன்பே ஊனாப்திக பிண்டத்தை உண்டு யமபுரியாகிய அப்பட்டணத்தை ஜீவன் அடையும். பன்னிரண்டு சிரவணர்கள் அங்குதான் இருப்பர். ஜீவன்கள் அந்தப் பன்னிரெண்டு சிரவணர்களையும் ஆராதித்தால், அவர்கள் ஜீவன் செய்த புண்ணியங்களை மட்டும் யமனுக்கு எடுத்துரைப்பர். எனவே அந்தப் பன்னிரு சிரவணர்களை ஆராதித்தல் மறுமையில் நன்மை பயக்கும். இவ்வாறு ஜீவன் செல்லும் பாதையில் அது பரிதவிக்கும் நிலைகள் கூறப்பட்டன.

 16. யமபுரியில் யமதர்பார் அங்குஷ்ட பரிமாணமுள்ள ஜீவன் கர்ம சரீரம் பெற்று வன்னி மரத்தை விட்டு யம கிங்கரர்களுடன் சித்திர குப்தனது பட்டணத்தின் வழியாக யமபுரிக்குச் செல்லும். யமபட்டணம் புண்ணியம் செய்தோர்க்கு மிகவும் அழகாகக் காணப்படும். இறந்தவனைக் குறித்துச் செய்யும் இரும்பு ஊன்றுகோல், உப்பு, பருத்தி, எள்ளுடன் பாத்திரம் ஆகியவற்றை தானம் செய்வதால் யமபுரியிலுள்ள யமபரிகாரர் கள் மகிழ்ந்து காலதாமதம் செய்யாமல் ஜீவன் வந்திருப்பதை யமதர்மனுக்குத் தெரிவிப்பார்கள். எப்போதும் யமதர்மன் அருகிலேயே இருப்பவன் தர்மத்துவஜன். புவியில் இறந்தவனைக் குறித்துக் கோதுமை, கடலை, மொச்சை, எள், கொள்ளு, பயறு ஆகிய ஏழு வகைத் தானியங்களைப் பாத்திரங்களில் வைத்துத் தானம் செய்தால் அவன் திருப்தியடைந்து இந்த ஜீவன் நல்லவன். புண்ணியம் செய்த புனிதன் என்று விண்ணப்பம் செய்வான். பாவம் செய்தவனுக்கு யமனும், யமதூதர்களும் யாவரும் அஞ்சத்தக்க பயங்கர ரூபத்தோடு தோற்றமளிப்பர். அதைக் கண்டு பாவி பயங்கரமாக ஓலமிடுவான். புண்ணியம் செய்த ஜீவன் யமன் முன் தோன்றினால், அவன் புண்ணியம் செய்தவனாகையால் சூரிய மண்டலம் வழியாக பிரம்மலோகம் சேரத்தக்கவன். ஆகையால் அவனுக்கு யமன், தன் ஆசனத்திலிருந்து எழுந்து மரியாதை செய்வான். யமகிங்கரர்களும் அணிவகுத்து நிற்பர். புண்ணியம் செய்தவன் யம தூதர்களால் துன்புறுத்தப்படாமல் யமன் முன் சென்று தேவனாக மாறி தேவருலகம் செல்வான். பாவம் செய்தவனை யமகிங்கரர்கள் யமதர்மராஜன் கட்டளைப்படி நரகத்தில் விழுந்து கிருமி, புழு போன்ற ஜன்மத்தை அடைவான். அந்த ஜீவனும் மிதமாகப் புண்ணியம் செய்திருந்தால் முன்பு போல் மானிடப் பிறவியைப் பெறும்.

 17. சித்திரகுப்தன் கணக்கும் நரகங்களும் யமலோகக் கணக்கன் சித்திரகுப்தன், ஜீவனின் பாப புண்ணியங்களைச், சிரவணர்கள் மூலம் அறிந்து, யமதர்ம ராஜனுக்கு அறிவித்து, அவன் ஆணைப்படி யம கிங்கரர்களைக் கொண்டு அவர்களுக்கான தண்டனைகளை அவ்வப்போது நிறைவேற்றுவான். ஜீவன், வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் யமபுரிக்குச் செல்லும்போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.
 1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.
6. பெற்றோர், மற்ற பெரியோர்களைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.
11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.
12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம். 17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.
21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.
23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.
24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம். 28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம். உதக கும்பதானத்தால் யமதூதர்கள் திருப்தி அடைவர். மாசிகம், வருஷாப் திகம் முதலியவற்றால் ஜீவனும், யமகிங்கரர்களும் திருப்தி அடைவர்.

 18. புத்திரர்கள் பௌத்திரர்கள் கர்மம் குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் வரை சிசு, மூன்று வயது வரையில் பாலகன், ஆறு வயது வரையில் குமரன், ஒன்பது வயது வரையில் பவுண்டகன் எனப்படும். பதினாறு வயது வரையில் கைசோரன் எனப்படுவான். மரித்தவன் பாலகனாயினும், இளைஞனாயினும், விருத்தனாயினும் உதக கும்ப தானத்தை அவசியம் செய்ய வேண்டும். மூன்று வயதுக்குள் இறக்கும் குழந்தையைப் புதைக்க வேண்டும். 24 ஆவது மாதம் முடிந்து 25ஆவது மாதம் பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளை எரிக்கவேண்டும். ஐந்து வயது முடிந்து பூணூல் அணிந்திருந்தாலும், இல்லா விட்டாலும் இறந்தவனுக்குப் பத்து நாட்களுக்கும் பிண்டம் போட வேண்டும். 5 முதல் 12, (அ) 12 நிரம்பியவர் மரித்தால் விரு÷ஷாற்சனம் செய்ய வேண்டும். ஆனால், சபிண்டீகரணம் செய்யலாகாது. புத்திரனுக்குத் தந்தையும், தந்தைக்குப் புத்திரனும் கர்மம் செய்ய வேண்டும். பூணூலை இடது பக்கம் தரித்துக் கொண்டு தருப்பையுடன் ஏகோதிஷ்டம் போன்ற சிரார்த்தங்களைச் செய்தால் மரித்தவன் மறு ஜன்மத்தில் நல்ல குலத்தில் பிறந்து தீர்க்காயுளுடன் வாழ்வான். நல்ல புத்திரனையும் பெறுவான். பெரும்பாலான பிள்ளைகள் தந்தையைப் போன்ற உருவமும் அறிவும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்குகின்றனர். தந்தைக்கு அமைந்துள்ள சிறப்பான அமிசங்களில் ஏதேனும் ஒன்று தனயனுக்கும் பொருந்தும். ஒருவன் தனக்குத் தனது இல்லாள் வயிற்றில் பிறந்த பிள்ளையின் முகத்தைக் கண்ணால் பார்த்துவிட்டால் அந்த ஜன்மத்தில் புத் என்னும் நரகத்தை ஆன்மாவில் காணமாட்டான். மணம் புரிந்துகொண்ட ஒருவன் ஒருத்திக்கே புத்திரன் பிறந்தால் அவன் குலத்தில் பிதிர்த் தேவர்கள் எல்லாம் மிக்க மகிழ்ச்சி அடைவர். தந்தைக்கு ஈமக்கடன்களைத் தலைச்சனே அதாவது முதல் மகனே செய்யக் கடமைப்பட்டவன் ஆவான். மற்ற புத்திரர்கள் இருந்தால் அவர்கள் தகப்பனுக்கு சிவகர்மங்களையும், சிரார்த்தாதிகளைச் செய்யக் கடவராவர். ஒருவன் தனக்குப் பௌத்திரன் பிறந்து அவனை எடுத்துப் பார்த்த பிறகே மரித்தால் நல்லுலகை அடைவான். கொள்ளுப் பேரனைப் பார்த்தவன் அதைவிட நல்லுலகை அடைவான். பெண்ணுக்கு விலை கொடாமல் கன்னிகாதானம் செய்து கொடுக்க அவளை மணம் புரிந்து, புத்திரனைப் பெற்றால், அந்தப் புத்திரன், காமக் கிழத்தியின் மகன் ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்யலாம், தானங்கள் செய்யலாம். சற்புத்திரர்கள் தீர்த்தயாத்திரைச் செய்யலாம். அன்னரூபமாயும், ஆமரூபமாயும், ஹிரண்ய ரூபமாயும் சிரார்த்தம் செய்யலாம்.

 19. சபிண்டீகரணம் உலக வாழ்வை விட்டு, உடலையும் விட்டு மாண்டவனுக்கு வருஷம் முடியும் வரை சகலமும் சாஸ்திரப்படிச் செய்து, சபிண்டீகரணமும் செய்து அவன் குலத்தில் முன்னமே மாண்டவருடைய பிண்டத்தோடு இறந்தவனுக்குரிய பிண்டத்தையும் சேர்த்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி பிதுர்த் தேவர்களோடு சேர்ந்து கொள்வான். இறந்த பன்னிரண்டாம் நாள், மூன்றாவது பக்ஷம், ஆறாவது மாதத்திலும் சபிண்டீகரணம் செய்யலாம். சபிண்டீ கரணம் செய்யும் வரையிலும் மரித்தவன் பிரேத தத்துவத்துடனேயே இருப்பான். புத்திரன் இல்லாவிட்டால் இறந்தவனுடைய கனிஷ்டனாயினும், ஜேஷ்டனாயினும், அவர்களில் ஒருவனுடைய புத்திரனாயினும் கர்மம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தாயாதி செய்யலாம். ஒருவரும் இல்லாவிட்டால் புரோகிதனே இறந்தவனுக்குரிய கர்மங்களைச் செய்யலாம். ஓராண்டு வரையிலும் ஒருவனே கர்மம் செய்ய வேண்டும். நித்திய சிரார்த்தத்தோடு ஒரு குடத்தில் ஜலம் நிரப்பி உதக கும்பதானம் செய்ய வேண்டும். கர்மங்களைத் தவறாமல் செய்தால் இறந்தவன் விமானம் ஏறி நல்லுலகடைவான். கணவன் நல்லவனாயினும், தீயவனாயினும், அறிஞனாயினும், அறிவிலி ஆயினும், உயிரோடிருக்கும் போதும் இறந்த பிறகும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று பக்தி செய்து கற்பொழுக்கத்தில் நிலை நிற்பவளே உத்தமியாகும். தெய்வ வழிபாடு, அதிதி ஆராதனை, விரத, அனுஷ்டானங்கள் முதலியவற்றை கணவன் செய்வானாகில், அவன் மனைவியும் அவனுக்கு அனு கூலமாக யாவையும் செய்ய வேண்டும். அத்தகைய கற்புக்கரசி இறந்த பிறகு உயர் குலத்தில் பிறந்து உத்தமனான ஒருவனைத் தனது கணவனாக அடைந்து, நன்மக்களும் பெற்று குலவிருத்தி செய்து தந்தைக்கும், கணவனுக்கும் புகழை உண்டாக்கி, சுமங்கலியாகவே மரித்து உத்தம லோகத்தை அடைவாள்.

 20. பப்ருவாகனன் வரலாறு பிரேத ஜன்மம் அடைந்த ஒருவர் வரலாற்றினை பகவான் கருடனுக்குக் கூறினார். திரேதாயுகத்தில் பப்ரு வாகனன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் அஹோதயம் என்ற நகரத்திலிருந்து நீதி, தர்மம், நியமம் தவறாமல் உலகை ஆண்டு வந்தான். அவன் தன் படை வீரர்களுடன் வேட்டையாடச் சென்றான். அவன் பார்வையில் ஒரு புள்ளி மான் காணப்பட்டது. அதன் மீது இரண்டு, மூன்று தரம் அம்பெய்தினான். அதனால், அதன் உடலில் காயம் ஏற்பட்டும் அது தப்பி ஓடிவிட்டது. அதைத் தொடர்ந்து, பலவிடங்களில் தேடிச் சென்ற அரசன் தனியனாகி, சோர்ந்து ஒரு தாமரைப் பொய்கையைக் கண்டு நீராடித், தண்புனல் பருகிக் களைப்பு நீங்கினான். குளக்கரையிலிருந்த ஆலமரத்தின் அடியில் பரிஜனங்களின் வருகைக்காகக் காத்திருந்தான். அந்தி மங்கி இருட்டிவிட்டது. அப்போது பிரேதம், பல பிரேதங்களோடு இங்குமங்கும் ஓடி, பசி தாகத்தோடு வருந்துவதையும் கண்டான். அதைக் கண்ட அரசன் அச்சமும், அதிர்ச்சியும், வியப்பும் கொண்டான். அப்போது அந்த பிரேத ஜன்மம் அரசனிடம் வந்து அரசே, உன்னை நான் காணப்பெற்றதால் இந்தப் பிரேத ஜன்மம் நீங்கி நற்கதி அடைவேன் என்று நம்புகிறேன் எனக் கூறியது. அப்போது பப்ருவாகன மன்னன் அந்தப் பிரேத ஜன்மத்தைப் பார்த்து அதன் வரலாறு பற்றிக் கேட்க, அது கீழ்க்கண்டவாறு கூறிற்று: நான் வைதிக நகரில் வைசிய குலத்தில் பிறந்தேன். என் பெயர் தேவன். நான் திருமணம் செய்து கொண்டு சுகமாய் வாழ்ந்து வந்தேன். வாழ்நாள் முழுவதும் தேவாராதனை, விரத அனுஷ்டானம், பிராம்மண வழிபாடு, தேவாலய கைங்கரியம், அனாதைகள் ரக்ஷணை போன்ற நன்மைகளையே செய்து வந்தேன்... எனக்கொரு புத்திரனோ, உறவினரோ இல்லை. யாருமே கர்மம் செய்யவில்லை. எனவே இந்தப் பிரேத ஜன்மத்துடன் நான் மரித்த நாளிலிருந்து நெடுங்காலமாக வருந்துகிறேன். அரசே, நீ குடிமக்களின் காவலன், உறவினன். மரித்து பிரேத ஜன்மத்துடன் இருக்கும் எனக்கு நீயே எல்லாக் கர்மங்களையும் செய்யவேண்டும். என்னிடம் உள்ள இந்தச் சிறந்த மாணிக்கத்தை உனக்குக் காணிக்கையாக அளிக்கிறேன் என்று கூறி மாணிக்கத்தைக் கொடுத்தது. அப்போது கர்ம காரியங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்டான் மன்னன். பிரேதம் சொல்லியது, நாராயண பலி சகிதனாய், ஸ்ரீமந் நாராயணன் மங்கள விக்கிரகம் ஒன்று செய்து, சங்கு, சக்கர, பீதாம்பரங்களைக் கொண்டு அலங்கரித்து, கீழ்த்திசையில் ஸ்ரீதரனையும், தெற்கில் மகாசூரனையும், மேற்கில் வாமனனையும், வடக்கில் கதாதரனையும் நடுவில் அயன், அரனுடன் ஸ்ரீ விஷ்ணுவையும் நிலை நிறுத்தி ஆராதனை செய்து, வலம் வந்து வணங்கி, அக்கினியில் ஹோமம் செய்து, மீண்டும் நீராடி விரு÷ஷார் சர்க்கம் செய்து பதின்மூன்று பிராமணர்களுக்கு குடை, மாரடி, மோதிரம், பலகை, வஸ்திரம், பொன் முதலியவற்றை வழங்கி பிருஷ்டான்ன போஜனம் செய்வித்துச் சய்யாதானம், கடகதானம் ஆகியவை கொடுத்தால் பிரேத ஜன்மத்திலிருந்து விடுபட முடியும் என்றது. அவ்வமயம் அவனது பரிவாரங்கள், அங்கு வர அது மறைந்துவிட்டது. அரசன் தன் நகரமடைந்து பிரேத ஜன்மத்தைக் குறித்து அதற்குரிய கர்மங்களையும், தர்மங்களையும் முறைப்படிச் செய்து முடிக்க, அந்தப் பிரேத ஜன்மம். ஆவிப்பிறவி நீங்கி நல்லுலகை அடைந்தது. பிரேத ஜன்மம் நீங்க வேறென்னென்ன செய்யலாம் என்பதைப் பகவான் கருடனுக்கு விளக்கினார். எண்ணெய் நிறைந்த குடத்தைப் பெரியோர்களுக்குத் தானம் கொடுத்தால் சகல பாபங்களும் நீங்கி பிரேத ஜன்மம் தொலையும், அவன் இன்பமுடன் மீளாவுலகை அடைவான். பொன்னாலான குடங்களில் பாலும், நெய்யும் நிரப்பி திக்குபாலகரையும், அஜ சங்கரரையும், ஸ்ரீ ஹரியையும் ஆராதனை செய்து அக்குடங்களைப் பிராமண உத்தமர்களுக்குத் தானம் கொடுப்பது மிக்க சிறப்புடையதாகும்.

 21. எள், தருப்பை ஏன்? கருமங்களைச் செய்வதற்கு முன் குறிப்பிட்ட இடத்தை திருவலகால் துடைத்துத் தூய்மை செய்து கோமியத்தால் மெழுக வேண்டும். அவ்வாறு தூய்மையான இடத்தில் கருமம் செய்யத் துவங்கினால் தேவர்கள் அங்கு வந்து அக்கருமங்களை நிறைவேறச் செய்வார்கள். இல்லாவிடில் அவ்விடத்தை அசுரரும், பூதங்களும், பிரேதங்களும், பைசாசங்களும் கருமங்களைத் தடுத்தி நிறுத்தி விடுவதுடன், இறந்தவன் நரகத்தை அடைய நேரிடும். எள் மிகவும் தூய்மையான ஒரு தானியம். கருப்பு எள், வெள்ளை எள் எதுவானாலும் தானத்துடன் கொடுத்தால் அதிகப் பயன் உண்டாகும். சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர்த் தேவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள். தர்ப்பைப் புல் ஆகாயத்தினின்று தோன்றியது. அதன் ஒரு முனையில் பிரம்மனும், மற்றொன்றில் சிவனும், நடுவில் விஷ்ணுவும் வாசம் செய்கின்றனர். பிராமணர்க்கும் மந்திரத்திற்கும், தர்ப்பைக்கும், அக்கினிக்கும், திருத்துழாய்க்கும் நிர்மாலிய தோஷமில்லை. ஏகாதசி விரதம், துளசி, பகவத் கீதை, பசு, பிராம்மண பக்தி, ஸ்ரீஹரியின் சரணமும் சம்சார சாகரத்தைக் கடக்க வேண்டியவருக்கு நல்ல தெப்பமாகும். இறக்கும் நிலையை அடைந்தவன் கோமயத்தில் மெழுகப்பட்ட தலத்தில், சூரைப்புல்லைப் (தருப்பையை) பரப்பி, அதன் மேல் எள்ளை இரைத்து, அதன்மீது சயனித்து தருப்பை, திருத்துழாய் கையிலேந்தி பகவன் நாமாவை வாயாரப் புகழ்ந்த வண்ணம் மரிப்பவன் அயன், அரியாதியர்க்கும் அரிய நிரதிசய இன்பவீடாகிய பரமபதம் அடைவான். உயிர் நீங்கும் முன்பே திருத்துழாயோடு தனது நல்லுலக வாழ்வைக் கருதி தானங்களைச் செய்துவிட வேண்டும். உப்பு தானம் மிகவும் சிறந்ததாகும். அது விஷ்ணு லோகத்தில் உண்டானது. உப்பு தானம் செய்து மரித்தவன் சொர்க்க லோகத்தை அடைவான். 

22. தானச் சிறப்பும், பலவகை தானங்களும் உயிர் பிரிதல் உயிரானது மனித உடலை விட்டு நீங்கும் போது கண், நாசி (அ) உரோமக் கால்கள் வழியே நீங்குகிறது. ஞானிகளுக்குக் கபாலம் வெடித்து நீங்கும். பாவிகளுக்கு அபான வழியாக நீங்கும். மறுபிறவி காமக் குரோதர்கள், கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் உயிர் நீங்கும் போது அவையனைத்தும் மனத்தோடு ஒன்றாகும். சேதனனானவன் தனது கர்மத்தாலேயே மறுபிறவி அடைகிறான். மாயையோடு கூடிய தேகம் எல்லாப் பிராணிகளுக்கும் உரியதாகும். சமஸ்த லோகங்களுக்கும் உரிய சம்ஸ்த தேவர்களும் தேகத்திலேயே இருக்கிறார்கள். 1. அனைத்துத் தானங்களிலும் சிறந்தது பருத்தி தானம். அதுவே மகாதானம் ஆகும். பூணூலுக்கும், மானங்காக்கும் ஆடைக்கும் பருத்தியே பயனுடையது. ஆதலால் அதுவே சிறப்புடைத்து. மேலும் பருத்தி தானம் செய்தால், வாழ்நாள் முடியும்போது சிவலோக வாசம் பிராப்தியாகும். மேலும், இத்தானத்தால் மாமுனிவர்களும், பிரம்ம, ருத்திர, இந்திராதி தேவர்களும் திருப்தி அடைவர். இத்தானம் செய்தவன் மீண்டும் பிறந்து யாவரும் புகழ நெடுங்காலம் வாழ்ந்து சொர்க்கமடைவான். 2. திலதானம், கோதானம், புவி தானம், சொர்ணதானம், தானிய தானம், ஆகியவை பாபங்கள் அனைத்தையும் விலக்கிவிடும். இவற்றை உத்தம பிராமணர்களுக்கே தானமாக அளிக்க வேண்டும். (தானங்கள் செய்வதற்குச் சிறந்த காலம் ஜீவன் மரிக்கும் காலமே. கிரகண புண்ணிய காலத்திலும் கொடுக்கலாம்) 3. ஒருவன் மரிக்கும்போது திலம், இரும்பு, லவணம், பருத்தி, தானியம், பொன், பூமி, பசு ஆகியவற்றைத் தானம் செய்வது மிகவும் சிறந்ததாகும். எள், இரும்பு தானத்தால் யமன் மகிழ்ச்சி அடைவான். லவண தானம் யமபயம் நீக்கும். தானிய தானம் கூற்றுவன். அவன் தூதர்களுக்கு மகிழ்ச்சி தரும். சொர்ண தானம், கோதானம் பாவத்தை அழிக்கும். மரணமடைபவன் பகவானைத் தியானித்து, அவன் நாமம் உச்சரித்தால் அவன் நிரதிசய வீடாகிய வைகுந்தம் அடைவான். யமன் ஆயுதங்களாகிய கூடாரம், முசலம், சூரிகை, தண்டம் யாவும் இரும்பால் ஆனவையே. எனவே இரும்புதானம் யமனை மகிழ்விக்கும். அந்தக் கிரகத்தில் யமதூதர்கள் கால் வைக்க அஞ்சுவர். சர்வம் விஷ்ணுமயம் ஜகத் ஜம்பூதங்கள், தானப் பொருள்கள், இந்திராதி தேவர்கள் யாவும் பகவான் விஷ்ணுவே. கொடுப்பவனும், எடுப்பவனும் அந்த பகவானே. ஒருவன் புத்தியைப் பாவபுண்ணியங்களில் நாடச் செய்வதும் அந்த விஷ்ணுவே.

 23. உடலியல் பற்றிய விளக்கங்கள் ஒரு சமயம் இந்திரனைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் பெண்களிடம் போய்ச் சேர்ந்தது. மாதவிலக்கான மங்கை நான்கு நாட்கள் வரையில் குடிமனைக்குப் புறம்பே இருக்கவேண்டும். அவளைப் பிறர் பார்க்கக் கூடாது. முதல் நாளன்று சண்டாள ஸ்திரீயைப் போலும், இரண்டாம் நாள் பிரமஹத்தி செய்தவள் போலவும், மூன்றாம் நாள் ஒலிப்பான் போலவும் காணப்படுவாள். நான்காவது நாள் ஸ்நானத்திற்குப் பிறகு சிறிது தூய்மை அடைவாள் போலவும் காணப்படுவாள். ஐந்தாம் நாள் சுத்தியடைந்து குடும்பக் காரியங்களைக் கவனிக்கும் தகுதி பெறுவாள். 6 முதல் 18 நாள் வரை, ஏழு இரட்டை நாளில் அவளோடு கூடி மகிழ்ந்தால் ஆண் குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை குணவானாக, தனவானாக, துர்மிஷ்டனாக, விஷ்ணு பக்தி உடையவனாக இருப்பான். ரஜஸ்வாலை ஆன ஐந்தாம் நாள் பாயசம் போன்ற மதுர பதார்த்தங்களையே உண்ண வேண்டும். தம்பதியர் சந்தனம், புஷ்பம், தாம்பூலம் கொண்டு குளிர்ந்த மெய்யினராய் மனதில் மோகமுடையவராய் கூடி மகிழ வேண்டும். அவ்வமயம் சுக்கில, சுரோணிதக் கலப்பால் ஸ்திரீ வயிற்றில். கரு ஏற்படும். சுக்கிலம் அதிகமானால் ஆண் குழந்தையும், சுரோணிதம் அதிகமானால் பெண் குழந்தையும் பிறக்கும். புணர்ந்த ஐந்தாவது நாள் கருவறையில் ஒரு குமிழியுண்டாகும். பதினான்கு நாட்களில் தசைகளும், இருபதாவது நாளில் மேலும் தசை அதிகமாகும். இருபத்தைந்தாவது நாளில் புஷ்டி அடையும்.
ஒரு மாதத்தில் பஞ்சபூத சேர்க்கை உண்டாகும்.
2-ஆவது மாதத்தில் தோல்,
 3-ஆம் மாதத்தில் நரம்புகள் உண்டாகும்.
4-ஆம் மாதத்தில் மயிர் புறவடிவம் ஏற்படும்.
 5-இல் காது, மூக்கு, மார்பு தோன்றும்.
ஆறில் சிரம், கழுத்து, பற்கள் உண்டாகும்.
7-இல் பாலின் குறி தோன்றும்.
8-இல் அனைத்து அவயவங்களுடன் ஜீவன் பிரவேசிக்கும்.
9-இல் சுழிமுனை நாடி மூலம் பூர்வ ஜன்ம கர்மம் அறியும். பத்தில் குழந்தை பிறக்கும். பஞ்ச பூதாத்மகமாகிய உடல், பஞ்சேந்திரியங்களை அடைந்து இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று முக்கிய நாடிகளும், காந்தாரி, கஜசிம்மஹி, பூழை, அச்சு, அலாபு, குரு, விசாகினி என்ற ஏழுநாடிகளும் உடலில் முக்கியமானவை பெற்று தசவித வாயுக்கள் சேர்ந்துள்ளது. இந்தச் சரீரம். சுக்கிலம், எலும்பு, நீர், ரோமம், இரத்தம் ஆகிய ஆறு கோசங்கள் கொண்டது. உண்ணுகின்ற உணவின் சாரம் உடலில் பரப்புவது வாயு இவ்வாறு அண்டத்திலுள்ளவையெல்லாம் பிண்டத்திலுமுண்டு. பிண்டத்திலுள்ளவை எல்லாம் மனித உடலில் உள்ளன. மனித உடலில் பதினான்கு உலகங்கள். சப்த குலாசலங்கள், தீவுகள், நவக்கிரகங்கள் இருக்கின்றன. ஒருவன் ஆயுள் அவனுடைய பூர்வ ஜன்ம கர்மானுசாரத்தை அனுசரித்து கருவிலுள்ள போதே பிரமன் நிச்சயித்து விடுகிறான். எனவே தீர்க்க ஆயுளும், உயர்ந்த வித்தையும், யோகமும், மற்ற யாவும் மறு ஜன்மத்திலாவது ஒருங்கே பெற்றிட ஜீவன் நற்கர்மங்களைச் செய்யவேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

 24. பிரயோபவேசம், தலயாத்திரை, சுவர்க்கம் ஒருவன் ஆகார வியவஹாரம் ஒன்றும் செய்யாமல் நியமத்தோடு தர்ப்பாசயனம் செய்து பகவானையே தியானித்துக் கொண்டு மரித்தால் அவன் வைகுந்தம் அடைவான். எனவே பிரயோபவேசம் பகவானுக்கு உகந்ததாகும். பிரயோபவேசம் செய்த நாட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வேள்வி செய்த பலன் கிடைக்கும். அவன் உலகியலின் உண்மையையும், வாழ்வியலின் இரகசியத்தையும், தெய்வீக இயலின் மெய்ம்மையையும், உணர்ந்து இனி உயிர் வாழ்க்கை வேண்டியதில்லை என்று, இனி மரித்து விடுவோம் எனத் துணிந்து அதை நல்ல முறையில் பிரயோபவேசம் செய்து நல்லுலகை அடைவான். தலயாத்திரை விடு, மனைவி, மக்களை நெடுங்காலம் பிரிந்து, நெடுந்தூரம் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்துடன் யாத்திரை செய்பவனுக்குப் பிரம்மாதி தேவர்களெல்லாம் வேண்டியவற்றைக் கொடுக்கிறார்கள். அப்படிச் செய்யும் ஒருவன் வழியில் மரித்தால் அவன் சுவர்க்கம் பெறுவான். மரண காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து, ஒருவன், விஷ்ணு ÷க்ஷத்திரம் ஒன்றில் மரிக்க எண்ணி யாத்திரை செய்ய நடந்தால், அவன் நடக்கும் அடி ஒன்றுக்கு ஒரு பசுவைத் தானம் செய்த பயனை அடைவான். தம்மவர்க்கு உதவி, அன்னியருக்கு உதவி செய்வதை விட தன் பெற்றோர்க்கு, உடன்பிறந்தோர்க்கு வேண்டியவற்றைக் கொடுப்பது சிறப்புடைத்து, தந்தைக்குக் கொடுத்தல் உத்தம பிராமணனுக்குக் கொடுத்த தான புண்ணியத்தை விட நூறு மடங்கு கிடைக்கும். தாய்க்குக் கொடுத்தால் ஆயிரம் மடங்கு அதிகம். உடன் பிறந்த ஆண், பெண்களுக்குக் கொடுத்தலும் அளவற்ற புண்ணியம் தரும். நல்ல ஒழுக்கத்திலும், நன்னெறியிலும் ஒழுகி, உயிரினங்களிருந்து உற்ற சமயத்தில் உதவி, பூதானம் செய்பவனைக் கண்டு புவிமகள் மகிழ்ச்சி அடைவாள். பூதானம் செய்தவனும், புனலில் மூழ்கியவனும், பஞ்சாக்கினி நடுவில் இருந்து தவம் செய்தவனும், வேள்விளைச் செய்தவனும், போரில் புறமுதுகிடாமல் முன்னேறியவனும் இகத்திலும், பரத்திலும் இன்பம் அடைவான். சுவர்க்கம் அடைதல் அயோத்தி, காஞ்சி, மதுரை, மாயா, காசி, அவந்தி, துவாரகா ஆகிய ஏழில் ஒன்றில் மரித்தால் நிரதிசய இன்ப வீடடைவான். சந்நியாசம் பெற்றவன், விஷ்ணு பக்தி செய்பவன், ஸ்ரீராம, கிருஷ்ண நாம உச்சாடனம் செய்வோர், அவ்வாறு செய்து கொண்டே இருக்கையில் மரித்தால் பேரின்ப வீடு அடைவர். திருத்துழாய் பயிரிட்டவன், அதற்கு நீர் பாய்ச்சியவன் நல்லுலகடைவான். ஆபத்திலுள்ள பசு, பிராமணன், குழந்தைகளைத் தன்னுயிரைக் பணயம் வைத்த காப்பாற்றுபவன் தேவர்கள் எதிர் கொள்ள சுவர்க்கம் அடைவான். ஸ்ரீரங்கம், காசி, குரு÷க்ஷத்திரம், பிருகு ÷க்ஷத்திரம், பிரபாசதீர்த்தம், காஞ்சி, புஷ்கரம், பூதேஸ்வரம் ஆகிய புனித நகரங்களில் மாண்டவன் மோட்சமடைவான். வேத சாஸ்திரங்களை உணர்ந்தவர், கன்னிகை, பூமி, கிருகம், பசு, திலம், யானை, தானம் கொடுத்தோர், கிணறு, நடைவாவி, குளம், தேவாலயம் புதுப்பித்தோர் இவற்றைத் தோற்றுவித்தோரைக் காட்டிலும் அதிக புண்ணியம் பெற்று விண்ணுலகடைவர். 

25. ஆசௌம், துர்மரணம், குழந்தை பாபங்கள் பிராமணனுக்குப் புத்திரன் பிறந்தாலும், பிராமணன் இறந்தாலும், தாயாதிகளுக்கு பத்து நாள் வரையில் தீட்டு (ஆசௌசம்) உண்டு. ஆசௌசமுடையவர்கள் ஓமங்கள், தேவ ஆராதனை செய்யக்கூடாது. அந்த நாட்களில் அவர்கள் வீட்டில் யாரும் உணவருந்தக் கூடாது. அகால மரணம், அயல்நாட்டில் மரணம், மிருகங்களால் மரணம் ஆகியவற்றிற்கு உடனே கருமம் செய்யக்கூடாது. கிரியைகள் துவங்கப்படுகிற அன்று முதலே ஆசௌசம் உண்டாகும். ஒருவன் இறந்த செய்தி கேட்டவுடன் ஸ்நானம் செய்துவிட வேண்டும். திருமணக்கோலம் கொண்டிருக்கும் காலத்திலும், யாகஞ்செய்யும் காலத்திலும், உற்சவம் செய்ய கங்கணம் பூண்டிருக்கும் காலத்திலும் ஆசௌசம் இல்லை. ஓர் ஆசௌசம் நேர்ந்த காலத்தில் இடையிலே வேறொரு ஆசௌசம் வந்தால் முன்னதாக வந்ததுடன் பின்னர் வந்த ஆசௌசமும் தாயத்தார்க்கு நிவர்த்தியாகும். பசு, பிராமணர், மங்கையரைப் பாதுகாக்கும் விஷயத்திலும், யுத்த பூமியிலும், ஒருவன் தன் உயிரை இழந்தால் அவனைச் சேர்ந்தவர்களுக்கு ஒருநாள் மட்டுமே ஆசௌசம் உண்டு. துர் மரணம் அடைந்தால்! முந்நூற்று அறுபது பலாச இலைகளின் காம்புகளால் மரித்தவனது உடலைப் போல் ஒரு பிரதிமை செய்ய வேண்டும். சிரசுக்கு நாற்பது, கழுத்துக்குப் பத்து, மார்புக்கு இருபது, வயிற்றுக்கு இருபது, தொடைகளுக்கு நூறு, இமைக்கு இருபது. இரு கரங்களுக்கு நூறு, முழந்தாள்களுக்கு முப்பது, இனக்குறிக்கு நாலு, விருஷணங்களுக்கு ஆறு, கால்களுக்குப் பத்தும் வைத்து; மறுபடியும் சிரசுக்குத் தேங்காய், முகத்துக்குப் பஞ்சரத்தினம், நாவுக்கு வாழைப்பழம், மூக்கிற்கு எள்ளுப் பூவும், காதுக்கு எள்ளும், நரம்புக்குத் தாமரைத் தண்டும், தசைக்கு அன்னமும், இரத்தத்திற்குத் தேனும், மயிர்களுக்குச் சவுரியும், தோலுக்கு மான்தோலும், ஸ்தனப் பிரதேசத்திற்குக் குன்றிமணியும், நாபிக்குத் தாமரைப் பூவும், விருஷணர்களுக்குப் பனங்காயும், வைத்து சந்தன புஷ்பங்களால் அலங்கரித்து சாஸ்திர முறைப்படிக் கிருத்தியங்கள் செய்தால் துர்மரணம் அடைந்தவன் நற்கதி அடைவான். குழந்தைகளின் பாபங்கள் நான்கு முதல் பன்னிரண்டு வயது வரை குழந்தைகள் செய்கிற பாபங்கள் அவர்களுடைய பெற்றோரையே சேரும். பெற்றோர்கள் இல்லை எனில் காப்பாளர்களைச் சேரும். அத்தகைய பாபங்களுக்காக அவர்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் பாவம் குழந்தைகளுக்குச் சேராது. கருட புராணம் முற்றிற்று. 

3. பிடரி வர்மம் – Pidari Varmam -- 11. மூர்த்தி காலம் – Moorthi Kalam

3. பிடரி வர்மம் – Pidari Varmam

வேறு பெயர்கள் :
1. பிடரிக் காலம் (வர்ம சாரி-205)
2. பிடரிச்சுழி (அ) பிடரிக்குழி

இடம் :
பிடரிப் பகுதியில் உள்ளது.

இருப்பிடம் :
1.     ‘தாமப்பா தலை முடிந்த தலத்தில் தானே
            சார்வான குழிவதிலே பிடரிக்காலம்’   (வர்ம சூத்திரம்-101)

2.     ‘அறிந்து கொள்ளு பிடரியென்ற காலங்கேளு
            அப்பனே பிடரி என்ற பெருநரம்பில் பிடரிக்காலம்’   (வர்ம நிதானம்)

3.     ‘அதனொன்று ஓட்டையின் கீழ் சிறுங்கொல்லி
            ஓமென்ற அங்குலம் நால் கீழ் பிடரி வர்மம்’     (வர்ம பீரங்கி-100)

4.     ‘கொள்ளவே பிடரியதின் குழியில் தானே
            குணமான முடி முகிழ்தலத்திலப்பா
      விள்ளவே அதில் பிடரிக்காலம்........’     (வர்ம கண்டி)

5.     ‘சீறும்கொல்லி வர்மத்துக்கு நாலு விரலுக்குக்
            கீழே பிடரி வர்மம்........’    (வர்ம விரலளவு நூல்)

6.     ‘.......................................................................
            கீர்த்தி பெற ஓட்டையின் கீழ் சீறும் கொல்லி
      நானப்பா நாலு விரலின் கீழ் பிடரிக்காலம்’    (வர்மசாரி-205)

7.           ‘முறையான ஆராய்ச்சிக் காலம் பாரு
      அடவாக அதற்கு அரைவிரலின் மேலே
            அடுத்துண்டு பிடரியென்ற காலமப்பா’    (வ.ஒ.மு.ச.சூ.-1200)


விளக்கம் :
பிடரி வர்மமானது தலை (கொண்டை) முடிந்த தலத்திலுள்ள குழியில் உள்ளது. பெண்கள் தலை முடியை பின் பக்கமாக கொண்டை முடிந்து கொள்ளும் இடம் பிடரியாகும். இறுக்கமாக தலை முடியை கொண்டை போட்டுக் கொண்டால் மட்டுமே இந்த குழியான தலத்தை மறைத்துக் கொண்டிருக்கும். சற்றே தளர்த்திக் கொண்டை போட்டுக் கொண்டாலும் அது இப்பிடரிக் குழிக்கு நான்கு விரலளவுக்கு கீழாக உள்ள வளை முடிந்த வர்மம் என்ற தலத்தை மறைத்துக் கொண்டிருக்கும்.

சீறும்கொல்லி வர்மத்துக்கு நான்கு விரலளவுக்கு கீழாக இவ்வர்மம் உள்ளது என்று பொதுவாக எல்லா நூல்களும் குறிப்பிடுகின்றன. வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200என்ற நூல் மற்ற நூல்களிலிருந்து வேறுபட்டு ஆராய்ச்சி காலம்’ என்ற ஒரு வர்மத்தை அறிமுகப்படுத்துகிறது. இவ்வர்மத்துக்கு அரை விரலளவுக்கு மேலே பிடரி வர்மம் உள்ளதாக இந்நூல் குறிப்பிட்டாலும்வேறு வர்ம நூல்களோடு ஒப்பாய்வு செய்ததில் பிடரி வர்மத்துக்கு ஒரு விரலளவுக்குக் கீழே ஆராய்ச்சிக் காலம் இருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது. (விளக்கம் : பேன் குழி வர்மம் பார்க்கவும்)

வர்ம நிதானம் என்ற நூல் பிடரி என்ற பெரு நரம்பில் பிடரிக்காலம்’ எனக் குறிப்பிடுகிறது. வர்ம சூத்திரம்-101 என்ற நூல் பிடரி தன்னில் பெரு நரம்பின் மையம் வாக்கடா சுழியாடி’ என்று குறிப்பிடுகிறது. எனவே பெரு நரம்பில் மேல் பக்கத்தில் அதாவது சுழியாடி வர்மத்துக்கு அருகிலேயே (சுமார் 2 விரலளவுக்கு மேல்) பிடரி வர்மம் அமைந்திருக்க வேண்டும் என அறிய முடிகிறது.

உடற்கூறுச் சான்று :
பிடரி வர்மத்தின் இருப்பிடமானது மூளைப்பகுதிக்கும்தண்டு வடப்பகுதிக்கும் (பெரு நரம்பு) நடுப்பகுதியான முகுளம் (Medulla Oblongata) பகுதியை மையமாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும் என அறிய முடிகிறது. ஏனெனில் இவ்வர்மத்தின் முக்கிய குறிகுணமாக விதமாக மூச்செடுக்கும்’ (வர்மசாரி-205) என்று கூறப்பட்டுள்ளது. இது முகுளப் பகுதியில் உள்ள சுவாச மையம் (Respiratory Centre) பாதிப்படைவதால் ஏற்படுகிறது.

ஏழாவது கழுத்து என்புக்கும் (கிழிமேக வர்மம்) சுமார் ஏழு விரலளவுக்கு மேலேயுள்ள இடமே பிடரி வர்மத்தின் இருப்பிடமாகும்.

மாத்திரை :
பதினான்கு விரல் அகலம் வாங்கி சரித்து வெட்டினால் விழும். பலமாக கொண்டதென்றால் உடனே சாகும்.
குறிகுணம் :

பிடரிவர்மம் (3)
அள்ளுகின்ற பிடரிவர்மம் குணத்தை கேளு
      அடித்த உடன் கண்சீறும் நாக்கு தள்ளும்
மெள்ளவே மூச்செடுக்கும் மேல் துடிக்கும்
      மெதுவான கடிகையது இருபத்தேழே.   (அடிவர்ம சூட்சம்-500)   

பிடரி வர்மத்தில் காயம் ஏற்பட்டால் குணம் ஏதெனில் கண் சீறும். நாக்கு வெளியே தள்ளும். மேல் மூச்சு வாங்கும். உடம்பு துடிக்கும்.                                                                                                                                          

வர்மலாட சூத்திரம்-300 :மூச்சிளைக்கும். (பிரதான குறிகுணம்)

வர்ம நிதானம்-500 :கழுத்து நீண்டு கை கால் தளர்ந்து போகும். நாக்கு வெளியில் தள்ளும். வாய் பிளக்கும். வயிறு ஊதும். மூன்று நாட்களுக்குள் மரணம் வரும். இக்குறிகுணங்கள் மாறினால் மரணம் வராது.

வர்மசாரி-205 :தலை குழையும். கண்டம் சாய்க்கும். மூச்சு அடைக்கும். நாக்கு தள்ளும். மரணம் ரும்.

வர்ம கண்ணாடி-500 :கண் சீறும்நாக்கு தள்ளும்.

வர்ம கண்டி : முகம் சீறி கோணும்.

வர்ம விளக்கம் : தலை குனிந்து போகும். கண் இரண்டும் மூடிப்போகும். மூச்சு விடும் கிறுகிறுப்பு காண்பிக்கும்.

தொடுவர்ம நிதானம் : கண் இரண்டும் அடைக்கும் தலை குனிந்து உடல் சாயும். பெருமூச்செடுக்கும் நாக்கு வெளித்தள்ளும்.

உற்பத்தி நரம்பறை-1000 :பிடரியின் முடிச்சுக்குள் குத்திடிகள் கொண்டால்அட்டை சுருண்டது போல உடல் கூனி சுருளும். குதித்தெழுந்த நாடியெல்லாம் விசை தளர்ந்து,பொறியான அசைவெல்லாம் குழைந்து போகும். பிராண வாயு சிக்கல் கொண்டு உணர்வற்று பொறி தளர்ந்து கிடக்கும்.

காலக்கெடு:
நாழிகை 24 (வர்ம கண்ணாடி-500)
நாழிகை 18 (வர்ம கண்டி)
நாழிகை 13¾ (வர்ம சாரி-205)
நாழிகை 2 (தொடுவர்ம நிதானம்)

மருத்துவம் :

இளக்குமுறை 1 : (வர்ம நிதானம்-500)
நாடியை பிடித்து ஏந்தி கழுத்துச் சுற்றி கீழ்பக்கமாக தடவிநாடியை இருபக்கமும் அசைத்துகை-காலை இழுத்து விட்டால் குற்றம் மாறிப் போகும்.

பிடரி பெருநரம்பில் குற்றம் வந்தால்நரம்பில் நீருண்டாகிசிரசில் அக்கினி சேர்ந்து பைத்தியம் வரும். இந்நோய் வராமல் இருந்தாலும்சிரசில் நீரேற்றம்தலைகுத்து உண்டாகும். கால்கைஉடல் உளைச்சல் வரும். உடலில் நீர் கட்டும் வயிறு வலிக்கும்.

இளக்குமுறை 2 : (தொடுவர்ம நிதானம்)
நோயாளியை எடுத்திருத்திகால்கள் இரண்டையும்மடக்கிப் பிடித்து நெஞ்சோடு சேர்த்து அணைத்து இறுக்கிபிடித்து தூக்கி பின் கீழிருத்திபலமாக கைமடக்கி உச்சியில் குத்திகழுத்தில் இருவிரலால் முறையாகத்தடவி குழியதில் (சுமை வர்மம்) தாக்கவும். பிடரியின் இருபக்கங்களிலும் நரம்பு இளகும் படியாகத் தடவி தாக்கவும். கும்பத்தில் தண்ணீரெடுத்து செபித்து முகத்தில் தண்ணீரை அடிக்கவும். மயக்கம் தெளிந்து எழும்புவர்.

கஞ்சி : உலுவாய் (வெந்தயம்) கஞ்சி சூடாகக் கொடுக்கவும். வியர்த்திடும்.

தைலம் : மொசுமொசுக்கை தைலம் உள்ளுக்கும் கொடுத்துதலைக்கும் இட்டு முழுகவும்.

பின் விளைவுகள் :300 நாட்களுக்குப் பிறகு பிடரிவலிமூச்சு முட்டுகண்களின் பார்வை குன்றல்பசி மந்தம் அல்லது மிகுபசிகாது இரைச்சல்பிரம்மை போல் புலம்புதல்தலை சொறிதல்விந்து வீணாய் வெளியேறல் போன்ற குறிகளைக் காட்டும்.

இளக்குமுறை 3 : (வர்ம கண்டி)
உச்சியில் அடிஅடித்து உதறிவிடவும்.

இளக்குமுறை 4 : (வர்ம விளக்கம்)
நோயாளியை எடுத்து இருத்தி அசைத்து விடவும். இருபுறமும் தடவி தாழ்த்தி விடவேண்டும். கை பிணைத்து தலை மேல் வைத்து மூன்று அடி அடித்து கங்கண பொருத்தில் கைகுத்தி அடித்து விடவும் இளகும்.

மருந்து : கூவிளத்தின் வேர்சிற்றாமுட்டிமரமஞ்சள்-கஷாயம் வைத்துகஞ்சி வைத்து கொடுக்க வேண்டும். தண்ணீர் ஓதி எறியவும்.

இளக்குமுறை 5 : (வர்ம சூத்திரம்-101)
நோயாளியை எடுத்து இருத்தி அசையாமல் உச்சியில் ஓர் அடி போடவும் கண்டத்தில் அணுகாமல் இருபுறமும் கயிறு போல அசைத்து விடவும் அன்னப்பாலுடன் கறி உப்பு இட்டு குடிக்கக் கொடுக்கவும்.

இளக்குமுறை 6 : (உற்பத்தி நரம்பறை-1000)
இரு புருவத்தில் தாக்கிட வேண்டும்.

மருத்துவப்பயன் :
(1) பிடரி வர்மம் இடகலை நாடியின் துணை வர்மமாகும். இவ்வர்மத்தைப் பயன்படுத்தி இடகலை நாடியையும் அதில் இயங்கும் வாயுவின் செயல்பாட்டையும் சீர்படுத்தலாம்.
(2) பிடரி வர்மம் விசுத்தி வர்மங்களுள் ஒன்று. இதனை பயன்படுத்தி விசுத்தி சக்கரத்தின் செயல்பாட்டைத் தூண்டலாம். இதன் மூலம் வாயு பூதக்குறைபாடுகளை சீர்செய்யலாம்.
(3) கிரியை நோய்கள்தலைவலி குணமாகும்.
(4 ) தலை-கழுத்து வர்ம தடவுமுறைகளில் பயன்படுகிறது.

4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam

வேறு பெயர்கள் :

1. சுருதி வர்மம் (வர்ம பீரங்கி-100)
2. சருதி வர்மம் (வர்ம ஒடிவு முறிவு சாரி-1500)
3. சரிதி வர்மம் (வர்ம கண்ணாடி-500)


இருப்பிடம் :
1.     ‘தானான உச்சியிலிருந்து எட்டு விரலின் கீழே
            சரிதி வர்ம மெனவுஞ் சொல்வார்
      வானான இதற்கு இரு விரலின் கீழே
            மகிமையுள்ள பொற்சை என்ற காலமாமே
                                          (வர்ம கண்ணாடி-500)

2.     ‘ஏறவே கொண்டைக்கொல்லி எண்விரல் கீழ் சருதியாமே
                                          (வர்ம லாட சூத்திரம்-300)


3.     ‘உச்சியில் நின்றெண் விரல் கீழ் சருதி வர்மம்
                                          (அடிவர்ம சூட்சம்-500)

4.     ‘நாமப்பா நாலுவிரல் கீழ் பிடரிக்காலம்
            நாலிறைக்கும் பக்கத்தில் சுருதி வர்மம்
                                          (வர்மானி-16)

5.     ‘நாளப்பா விரல் நாலின் கீழ் பிடரிக்காலம்
            நாலிறை பக்கம் மேல் முன் சருதி வர்மம்
                              (வர்ம ஒடிவு முறிவு சாரி-1500)

6.     ‘கேளப்பா சிரசில் நடு கொண்ட கொல்லி
            கீர்த்தி பெற ஒட்டயின் கீழ் சீறும் கொல்லி
      நாளப்பா நாலு விரலின் கீழ் பிடரிக்காலம்
            நாலிறைக்கும் மேல் பக்கமதில் சுருதிவர்மம்
                                                (வர்ம சாரி-205)


குறிகுணம் :

சருதி வர்மம்  (4)
தானான சருதி வர்மம் குணமேதென்னில்
      தலை உருட்டும் பனிகுளிர்ந்து அடிக்கும் பாரு
தேனான பல்நறுக்கும் பிதற்றும் சொன்னோம்
      தெளிவான வர்மமிது சாத்தியம் சொல்லு
சருதி வர்மத்தின் குணம் ஏதெனில் தலை உருட்டும். சுரம், குளிர் இவைகள் காணும். வாய் பிதற்றும்.

வர்மலாட சூத்திரம்-300 :தலை பிதற்றும் (பிரதான குறிகுணம்)

வர்ம பீரங்கி-100 :தலை உருட்டும்சுரம்,குளிரடிக்கும்.

வர்ம சாரி-205 :தலை சுருட்டும்சுரம்குளிரடிக்கும்.

காலக்கெடு:
கடிகை 18-க்குள் சாத்தியம் (வர்ம பீரங்கி - 100) (கடிகை என்பது 24 நிமிடம்)
கடிகை 11 (வர்மசாரி - 205)

5. பொற்சை வர்மம் – Porchai Varmam

வேறு பெயர்கள் :
1. பொற்சை காலம் (வர்ம பீரங்கி-100)
2. பொர்ச்சை காலம் (வர்ம கண்ணாடி-500)
3. புகழ்ச்சை வர்மம் (உற்பத்தி நரம்பறை-1000)
4. புகச்சை வர்மம் (வர்மசாரி-205)
5. பெரிச்சல் வர்மம் (வர்ம நிதானம்-500)

இருப்பிடம் :

1.     ‘தானான உச்சியிலேயிருந்து எட்டு விரலின் கீழ்
            சரிதி வர்ம மெனவுஞ் சொல்வார்
      வானான இதற்கு இரு விரலின் கீழே
            மகிமையுள்ள பொர்ச்சை என்ற காலமாமே
      காலமாம் அதற்குமொரு இறைக்கு கீழே
            கனமான குத்தி என்ற காலமாகும்
                                    (வர்ம கண்ணாடி-500)

2.     ‘ஓமென்றங்குலம் நாலுக்குக் கீழ் பிடரி வர்மம்
            உச்சாணின் எண் விரலுக்குக் கீழ் சுருதி வர்மம்
      காமென்ற இருவிரலுக்குக் கீழ் பொற்சைக் காலம்
            காணிறை கீழ் குற்றிக் காலம்............’        (வர்ம பீரங்கி-100)

3.           ‘.......................................சீறும்கொல்லி
      நாளப்பா நாலு விரலின் கீழ் பிடரிக்காலம்
            நாலிறைக்கு மேல் பக்கமதில் சுருதி வர்மம்
      பாளப்பா இரண்டிறை கீழ் பொற்சகாலம்
            பகர்ந்த ஓரிறை பற்றி குற்றிக்காலம்’   (வர்மசாரி-205)

4.     ‘தேனென்ற காதில் நால் விரலுக்கு மேல்
            திறமான பெரிச்சல் வர்மம் குணத்தைக் கேளு’ (வர்ம நிதானம்-500)

குறிகுணம் :

பொர்ச்சைக் காலம் (5)
ஏனான பொர்ச்சை என்ற காலம் தானும்
      எழும் புகை போல் கண் இரண்டும் புகைச்சல் காய்ச்சல்
தானான பொய்கை குத்தும் புருவம் வீங்கும்
      தனிமுகங்கள் வேறாகி கலங்கும் பாரு
மானான மணி மந்திரம் வேண்டாம் சொன்னோம்
      மலங்காதே மனம் சலித்து வாடிடாதே

வர்மலாட சூத்திரம்-300 : கண் புகையும் (பிரதான குறிகுணம்)

வர்ம சாரி-205 :வர்மம் கொண்டவுடன் மயங்கும். புருவம் சீறி குத்தும்.

வர்ம கண்ணாடி-500 :கண்ணிரண்டும் புகையும் சுரம் வரும். சென்னியிலே குத்து உண்டாகும். கண் புருவம் அடுத்தடுத்து சீறும்.

வர்ம நிதானம்-500 :தலை எல்லாம் பெரிச்சல் (உணர்விழத்தல்) பிடிக்கும். செவி இரண்டும் அடைக்கும். தலை சுற்றும்.

காலக்கெடு :
வர்ம சாரி-205 :கடிகை 64 (ஒரு கடிகை 24 நிமிடம்)

வர்ம கண்ணாடி-500 :கடிகை 60 கழிந்தால் சாத்தியம்.
 6. குற்றிக் காலம் – Kutti Kalam

வேறு பெயர்கள் :
1. குற்றிக் காலம் (வர்ம சாரி-205)
2. குத்திக் காலம் (வர்ம கண்ணாடி-500)
3. கொம்பு குத்தி வர்மம் (வர்ம வில்லு விசை)

இருப்பிடம் :
1.     ‘......................................................................
            மகிமையுள்ள பொர்ச்சை என்ற காலமாமே
      ‘காலமாம் அதற்கு ஒரு இறைக்கும் கீழே
            கனமான குத்தி என்ற காலமாகும்’   (வர்ம கண்ணாடி-500)

2.     ‘பாரப்பா இரண்டிறை கீழ் பொற்சைக் காலம்
            பகர்ந்த ஓரிறை பற்றி குற்றிக் காலம்’ (வர்மசாரி-205)

3.     ‘வலது காதுக்கும் மூன்று விரலுக்கும் உயரே
            மோடெலும்பின் சுளியில் கொம்புகுத்திகாலம்’ (வர்ம வில்லு விசை)

.
குறிகுணம் :

வர்மலாட சூத்திரம்-300 :சுழன்று சுற்றும். (பிரதான குறிகுணம்)

வர்ம சாரி-205 :உடல் துடிக்கும். சுழலும். கண்ணிரண்டும் அடைக்கும் மதிமயங்கி மயக்கம் உண்டாகும்.

வர்ம கண்ணாடி-500 :தேகம் துடிக்கும் பல் பூண்டுகண் அடைக்கும்.

வர்ம வில்லு விசை : தலை உருட்டி பேசும்காதின் பக்கம் குழிந்து இருக்கும். கண் மஞ்சள் நிறமாக இருக்கும். மூக்கில் சுவாசம் திறந்து வரும்.

காலக்கெடு:

வர்ம சாரி - 205 :நாழிகை 26 (ஒரு நாழிகை/கடிகை 24 நிமிடம்)

வர்ம கண்ணாடி - 500 :கடிகை 19

7. செவிக்குத்தி வர்மம்

வேறு பெயர்கள் :
1. செவிக்குத்தி வர்மம் (வர்ம கண்ணாடி-500)
2. செவிக்குற்றி வர்மம் (உற்பத்தி நரம்பறை-1000)
3. செவிக்குறி வர்மம் (வர்ம சூடாமணி)
4. சிருங்காடம் (வர்ம விதி)

இருப்பிடம் :
1.     ‘தேளப்பா காது சிறு தண்டருகு பற்றி
            திட்டமுடன் செவிக்குத்தி காலமாகும்’  (வர்ம நிதானம்)

2.     ‘மூலமாம் காதில் சிறுதண்டருகில் தானே
            முறையான செவிக்குத்தி காலமென்பர்
      கூலமாம் இதனிரண்டு இறைக்கும் மேலே
            குணமான பொய்கை என்ற காலமாகும்
                                                (வர்ம கண்ணாடி-500)

3.     ‘காடப்பா காதில் சிறுதண்டில் தானே
            கலங்காதே செவிக்குத்தி காலம் என்பர்’ (வர்ம சூத்திரம்-101)

4.     ‘காதின் முன்புறத்தில் செவிக்குத்தி காலம்’  (வர்மவிரலளவு நூல்)

5.     ‘சயமாகும் செவிக்குறி வர்மம் தானும்
            செயலாக அதன் குணத்தை சொல்லக்கேளு
      ‘கேளப்பா காதில் சிறுதண்டின் அருகே
            கெடி குழிவுங்காணும் அதுதானே......’    (வர்ம சூடாமணி)

6.     ‘சீறுகின்ற கொல்லியதில் ஆறுவிரலில்
      ஆறுவிரல் சுற்றி செவிக்குத்திக் காலம்’       (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

7.     ‘வருதியின் செவியினில் சேர்வன்மையாம் சிறுதண்டிற்கும்
      சுருதியின் சேரிடத்தில் செவிக்குற்றி காலம் தானே’  (வர்ம லாட சூத்திரம்-300)

8.     ‘பேதகமே இல்லையடா கீழ்தாரைக்குள்
      வேதகமே அலவாடி மூட்டில் குச்சம்
      சேதகமுனை ஏவி நிற்கும் செவிக்குற்றியில்’    (உற்பத்தி நரம்பறை-1000)

9.     ‘கண்டத்தின் மேல் திலர்த வர்மத்திலிருந்து
      சீறுங்கொல்லியுட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு)                        நான்காக மடக்கி (8 விரலளவு) திலர்த காலத்திலிருந்து
      பார்த்தால் செவிக்குத்திக் காலம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)

10    ‘உற்ற கண்ணாடி நாசியுறு கன்னமிவை பிரிந்து
      வெற்றியுள் வாயிற் காணுமெதிற் சிருங்காட வன்மம்’    (வர்மவிதி)


குறிகுணம் :
சொல்லு செவிக்குற்றியுட காலம் தானும்
      சுண்டுதான் கோணி ஒருபுறமாய் கொள்ளும்
தொல்லையோடு வாய் மூக்கில் ரத்தம் வந்து
      தொடராக கொப்பளித்து ஒலிக்கும் பாரு
முல்லையுடல் மயங்கிவரும் மூக்கு வியர்க்கும்
      மோசம் ஒரு செவிகேளாது இருக்கும் பாரு
பல்லையாம் படுவர்மம் இதுதானய்யா
      பலமாகும் கடிகை இருபத்தி மூன்றே.

வர்மலாட சூத்திரம்-300 :வாய்மூக்கில் இரத்தம் வரும். (பிரதான குறிகுணம்)

வர்ம சாரி-205 :வாய்மூக்கில் நீர் வடியும். முகம் கறுக்கும். மூக்கில் இரத்தம் கொட்டும்.

வர்ம கண்ணாடி-500 :வாய்மூக்கில் இரத்தம் கொப்புளித்து பாயும். உதடும் வாயும் கோணும். உணர்வு கெட்டு மயங்கும்.

வர்மாணி-101 :வாயில் நுரை தள்ளும். விழி இரண்டும் தெறித்து நிற்கும். செவி ஒன்றும் கேட்காது.

வர்ம கண்டி : கண்ணிரண்டும் தள்ளி இரத்தம் காணும்.

வர்ம கண்டி - உரைநடை : சன்னி வரும். பல் பூண்டுகண் அடைக்கும். தலை சுற்றும்.

வர்ம சூத்திரம்-101 :விழியிரண்டும் தள்ளி வாயில் நுரை வரும்.

வர்ம சூடாமணி : வாயில் நுரை வரும். கண்ணிரண்டும் அரை கண்ணாகும்.

வர்ம விதி : மரணம் ஏற்படும்.

வர்ம நிதானம்-500 :சென்னி வலிக்கும். கண் வலிக்கும். கண்ணில் நீர் பாயும். தலைசுற்றும். இதில் முறிந்தால் வாய் மூக்கில் இரத்தம் வரும். கவிழ்ந்து விழும். தலை உருட்டும்சன்னி உண்டாகும். காது இரண்டும் அடைக்கும். மயங்கும் பிடரியில் குத்து உண்டாகிசுரம்குளிர்சீதம் வரும். 3-6-9-12 கழிந்தால் மரணம் ஏற்படுத்தாது.

தட்டு வர்ம திரட்டு : விழி இரண்டும் தள்ளி வாயில் நுரை வரும். செவி இரண்டும் கேளாது. மருத்துவம் செய்தாலும் 3-ம் மாதம் காது இரண்டும் தடிக்கும்கேளாது. 6-ம் மாதம் முகம் கோணும். 12-ம் மாதம் மரணம் வரும்.

உற்பத்தி நரம்பறை-1000 :காயம் பலமாய் கொண்டால் உடனே கொல்லும். மாத்திரை குறைவாக இருந்தால் கொண்டவுடன் ஆள் மயங்கும். கண்டம் ஒரு பக்கம் கோணும். கண்ணிரண்டும் சிவக்கும். நாசியில் நீர் பாய்ந்து காணும்.

காலக்கெடு :
1.     கடிகை - 37 (வர்ம சாரி-205) (கடிகை/நாழிகை 24 நிமிடம்)
2.     கடிகை - 21 (வர்ம கண்ணாடி-500)
3.     கடிகை - 29 (வர்ம பீரங்கி-100)
4.     கடிகை - 13¾ (வர்மாணி-101)
5.     நாழிகை - 23 (வர்ம கண்டி)
6.     நாழிகை - 13 (வர்ம கண்டி-உரைநடை)
7.     நாழிகை - 17 (வர்ம சூடாமணி)
8.     நாழிகை - 25 (தட்டு வர்ம திரட்டு)
9.     3-6-9-12 கழிந்தால் மரணம் ஏற்படாது (வர்ம நிதானம்-300)

8. பொய்கை காலம் - Poigai Kalam

வேறு பெயர்கள் :
1. பொய்கை காலம் (வர்ம கண்ணாடி-500)
2. சென்னி பொய்கை வர்மம் (வர்மாணி நாலுமாத்திரை)

இருப்பிடம் :
1.     ‘வர்மமடா காதின் மேல் பொய்கைக் காலம்’  (வர்மசாரி-205)

2.     ‘காமென்ற செவிக்குத்திக்காலம் இருவிரலின் மேல்
            கண்டிடுவாய் பொய்கையென்ற காலமாமே’    (வர்ம பீரங்கி-100)

3.           ‘முறையான செவிக்குத்திக் காலமென்பார்
      கூலமாம் இது இரண்டு இறைக்கும் மேலே
            குணமான பொய்கை என்ற காலமாகும்’ (வர்ம கண்ணாடி-500)

4.     ‘குறியான செவிக்குத்தி வர்மம் அதிலிருந்து
            கூறு இருவிரல் மேலே பொய்கை வர்மமிரண்டு
                                                (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

5.     ‘பெருநரம்பு வர்மத்துக்கு ஆறுவிரலுக்கு முன்னால் பொய்கைக்
      காலம் இதற்கு நான்கு விரலுக்கு முன்னால் நட்சத்திரக்காலம்
                                                (வர்மவிரலளவு நூல்)

6.     ‘தலை சுற்றளவு நூலை (32 விரலளவு) நான்காக மடக்கி
      (8 விரலளவு) திலர்த வர்மத்திலிருந்து பக்கவாட்டில்
      அளக்க பொய்கை காலம் அறியலாம்’   (வர்ம நூலளவு நூல்)

7.     ‘தானென்றால் செவிக்குற்றியதனுக்கு மேல் பக்கமாக
      கோனென்றால் ரண்டிறைக்கு கொள்கையாம் பொய்கைக்காலம்
                                          (வர்ம லாட சூத்திரம்-300)

8.     ‘நானென்ற பொய்கையது கடைக்கண்ணில்
            நட்சத்திரம் பதிய நால் விரல் தான் வைக்க
                                          (சரசூத்திர திறவுகோல்-36)

9.     ‘சென்னி பொய்கையில் கைதேற்றி அடித்தால்...........  (வர்மாணி நாலுமாத்திரை)

10.    ‘நிறைவான பொய்கையடா கண்ணின் பக்கம்
      துறவொன்று மாறியது துடிப்பு பாரே
      ............. .......... ............ ................ ...........
      தப்பாமல் அத்தலத்தில் நரம்பு தானே
      ஒப்பாமல் நிற்கும் ஒயாமல் உயிருள்ளமட்டும்’  (உற்பத்தி நரம்பறை-1000)

குறிகுணம் :

பொய்கைக் காலம் (8)
பாரப்பா இன்னுமொரு பொய்கை காலம்
      படும் குணம் யான் பண்பாக உரைக்க கேளு
சீரப்பா பட்ட உடன் மயக்கமாகும்
      செவி கேட்கும் செகம் பார்க்கும்  தெளிவிராது
சாரப்பா சடலமதுக்கு அழிவிராது
      சார்வாக கடிகையாறில் எழும்பும் பாரு
நேரப்பா கடிகை ஓர் ஒன்பதுக்குள்
      நினைவாகி நிற்குமடா நிலைமைக்காணே.

பொய்கை காலத்தின் குறி குணம் ஏதெனில் பட்ட உடன் மயங்கும். செவி கேட்கும். கண்ணை சுழற்றி சுழற்றி பார்க்கும். ஆனால் தெளிவாக இருக்காது. மரணம் ஏற்படுத்தாது,  

வர்மலாட சூத்திரம்-300 :கண் புகைச்சலாகும் (பிரதான குறிகுணம்)

வர்ம சாரி-205 :கண் புகைந்து சுரம் உண்டாகும். குத்தல் ஏற்படும். புருவம் சீறும். வாய்,மூக்கில் நீர் வடியும்.

வர்ம கண்ணாடி-500 :பட்டவுடன் மயங்கும். உணர்வு அற்று போகும்.

வர்ம நிதானம்-300 :சென்னிபொட்டில் வலிமுக வீக்கம்தலை சுற்றல்மூக்கில் வலி,காந்தல் இவை உண்டாகும். இந்த இடத்தில் குத்துப்பட்டு முறிந்து போனால் கண் பார்வை இழப்பு ஏற்படலாம். நாளடைவில் தலைவலி உண்டாகும். பொய்கை குத்து மாறாது.

தொடுவர்ம நிதானம் : பொறி தளர்ந்துகண் மயங்கிபுலன் அயர்வு உண்டாகும். வாயில் நுரை-பதைதள்ளும். அண்ணாந்து வாய் பிளந்திருக்கும். உணர்வற்று முதிர்ந்து போகும்.

உற்பத்தி நரம்பறை-1000 :பொய்கையில் காயம் ஏற்பட்டவுடன் முகம் மஞ்சள் நிறம் போல பேதமுற்று காணும். மூச்சு விட சிரமம் உண்டாகும். மிகவும் வலித்து மூச்சு இழுக்கும். அடிபட்ட தலம் பந்து போல வீங்கும். மயக்கம் உண்டாகும். பள்ளை இரண்டும் குளிர்ந்து காணும். முதுகுத் தண்டும் குளிர்ந்து போகும். வியர்வையுண்டாகும். அழைத்தால் கேட்காது. கண் மயங்கி அடைத்திருக்கும். உடல் முற்றும் குளிர்ந்து போகும். முடிப்புகள் ஒரு நொடியில் குழைந்து போகும். தாதுக்கள் நிலை தளர்ந்து தயங்கி தடைப்பட்டு அசையாது நிற்கும்.

வர்மாணி நாலுமாத்திரை : தலை ஒரு புறம் சரிந்து விழும். அலறும் மூக்கில் நீர் வடியும். வாய் பூட்டி உணர்வு கெட்டு கிடக்கும்.

காலக்கெடு:
(1)    51 நாழிகைக்குள் இளக்குமுறை செய்ய வேண்டும். 51 நாழிகை
      கழிந்தால் மயக்கம் தெளிந்து சுகமாகும். (நாழிகை 24 நிமிடம்)

(2)    30 நாழிகைக்குள் இளக்குமுறை செய்ய வேண்டும். (தொடுவர்ம
      நிதானம்)

(3)    5 நாழிகை (வர்மாணி நாலுமாத்திரை)

9. நட்சத்திர காலம்  – Natchathira Kalam

வேறு பெயர்கள் :
1. நட்சேத்திர காலம் (வர்ம பீரங்கி-100)
2. மீன வர்மம் (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)
3. ஆபங்க வர்மம் (வர்ம விதி / சுஸ்ருத சம்ஹிதா)

இருப்பிடம் :
1.     ‘காலமாம் கடைக்கண் கீழ் நட்சத்திரக்காலம்’ (வர்ம பீரங்கி-100)

2.     ‘காலமாம் கடைக்கண்ணில் இறைக்குள்ளே தான்
            கலங்குகின்ற நட்சத்திர காலம் எண்ணே
      எண்ணவே அதற்கு இரண்டு இறைக்குக் கீழே
            இதமான காம்போதிக் காலமாகும்’      (வர்ம கண்ணாடி-500)

3.     ‘வளமான கண்ணின் கீழ் நட்சத்திர காலம்
            வர்மமடா இரண்டிறை கீழ் காம்பூரிக்காலம்’   (வர்மசாரி-205)

4.     ‘பொய்கை காலத்துக்கு நான்கு விரலுக்கு முன்னால்                    நட்சேத்திரக்காலம் இதற்கு இரண்டு விரலுக்கு
      கீழே அலவு காம்பூரி வர்மம்’    (வர்ம விரலளவு நூல்)

5.     ‘இயல்பான கடைக்கண்ணில் இமையில் தானே
            நயம்பெறவே நட்சேத்திர காலம்.....’     (வர்ம கண்டி)

6.     ‘கடைக்கண் இறைக்குள்ளே தான்
            கலங்குகின்ற குழியிதிலே நட்சேத்திரகாலம்’   (வர்மசூத்திரம்-101)

7.           ‘............... பொய்கை வர்மம் ரண்டு
      தறுகிலே இருவிரலின் பக்கம் மாறி
            சார்வான நட்சத்திரகாலம் ரண்டு
      மறவாதே அதிலிருந்து நால்விரல் மேல்
            மைந்தேனே சென்னிவர்மமாகும் ரண்டு’  (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

8.     ‘நன்றான கடைக்கண்ணில் ஓரிறைக்கு தாழே
            நாயகனே நட்சத்திரக் காலமாகும்’ (வர்ம திறவு கோல்-225)

9.     ‘நானென்ற கடைவிழிக்கு கீழ் நட்சத்திரம்தான்
            நாடுமறை ரண்டின்கீழ் காம்பூரியாகும்’ (அடி வர்ம சூட்சம்-500)

10.    ‘கண்டத்தின் மேல் திலர்தகாலத்திலிருந்து சீறுங்கொல்லி
      உட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) எட்டாக
      மடக்கி (4 விரலளவு) திலர்தவர்மத்திலிருந்து அளக்க
      நட்சத்திரக்காலம் அறியலாம்’    (வர்ம நூலளவு நூல்)

11.    ‘சுருதியிடங்கண் புறத்திற் கண் புருவத்தில்
      மருவிடுங் கீழபாங்கமெனு...............’       (வர்ம விதி)

12.    ‘அப்பனே மீனமது நட்சேத்திர வர்மம்
            (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)

குறிகுணம் :

நட்சத்திரக் காலம் (9)
ஆமப்பா நட்சத்திர காலம் கொண்டால்
      அகலாது கண்சீறி சிவந்து போகும்
வாமப்பா முகம் கோணும் இன்னும் கேளு
      வளர் மேனி அண்ணாந்து ஆகாசம் பார்க்கும்
நாமப்பா கடிகை பதினெட்டரைக்குள்
      நவின்ற குறிகுணமதனை நன்றாய் பார்த்து
பாரப்பா படுவர்ம அடங்கல் தன்னில்
      பார்த்திளக்கு பரிகாரம் முன்போல் காணே.       (அடிவர்ம சூட்சம் -500) 

நட்சத்திரக் காலத்தில் காயம் ஏற்பட்டால் கண் சீறி சிவக்கும். முகம் ஒரு புறமாய் கோணும். மல்லாக்க விழுந்து ஆகாயம் பார்க்கும். பதினெட்டரை நாழிகைக்குள் பார்த்து தக்க பரிகாரம் தேடிக்கொள்ளவும்.                    

வர்மலாட சூத்திரம்-300 :அதிகமாய் கண் சிவக்கும் (பிரதான குறிகுணம்)

வர்ம சாரி-205 :வாய்மூக்கில் நீர் பாயும். மலம் போகாது. முகம் கோணும். உடல் நடுங்கும்.

வர்ம பீரங்கி-100 :கண் இரண்டும் சிவக்கும். முகம் கோணும். உடல் தடிக்கும். வாயில் நீர் பாயும். மயங்கும்.

வர்ம சூத்திரம்-101 :கண்ணும் முகமும் மஞ்சள் போல மாறும். முகம் மாறிவியர்வை உண்டாகும். கண் பார்வை இருக்காது. முதுகுவிலா இருபுறமும் குளிர்ந்து காணும்.

வர்ம நிதானம்-500 :சென்னியில் தரிப்பு உண்டாகும்தலை நடுக்கம் காணும். வாய் பேசாது. கண் கூசும். கண்ணில் தரிப்பு உண்டாகும்.

வர்ம விதி : கண் பார்வை குறைவு நோய்கள்கண் குருடு இவை ஏற்படும்.

காலக்கெடு :
நாழிகை-18 அல்லது 27-க்குள் இளக்குமுறை செய்ய வேண்டும்.
நாழிகை-12 (வர்ம கண்டி-வடக்கன்வழி)

10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam

வேறு பெயர்கள் :
1. காம்பூரி காலம் (வர்ம பீரங்கி-100)
2. காம்போதிக் காலம் (வர்ம கண்ணாடி-500)
3. அலவு காம்பூரி வர்மம் (வர்ம விரலளவு நூல்)
4. அலவு காம்போதி அடங்கல் (அடங்கல் விவரம்)

இருப்பிடம் :
1.           ‘வளமான கண்ணின் கீழ் நட்சத்திரக் காலம்
      கற்மமடா ரண்டிறை கீழ் காம்பூரிக் காலம்
            கருது மூன்றிறைவலத்தே மூர்த்தி வர்மமே’   (வர்மசாரி-205)

2.           ‘..........நட்சத்திரகாலம் எண்ணே
      எண்ணவே அதற்கு இரண்டிறைக்கும் கீழே
            இதமான காம்போதிக் காலமாகும்.
      திண்ணவே இதற்கு மேல் வலம் இறை மூன்றில்
            திருக்கான மூர்த்தி என்ற காலமென்பர்’ (வர்ம கண்ணாடி-500)

3.     ‘நட்சத்திரக் காலத்துக்கும் இரண்டு விரலுக்கு கீழே
      அலவு காம்பூரி வர்மம் இதற்கு இரண்டு விரலுக்கு
      வலத்தே சிறு தண்டின் பக்கம் கபால வர்மம்’        (வர்ம விரலளவு நூல்)

4.     ‘காலமாம் கடைக்கண் கீழ் நட்சத்திர காலம்
            காலம் கீழ் இரண்டிறையில் காம்பூரிகாலம்
      ‘காலமதில் இறைமூன்றில் மூர்த்திக்காலம்’       (வர்ம பீரங்கி-100)

குறிகுணம் :
காம்பூரிக் காலம்  (10)
காணப்பா காம்பூரி காலம் கொண்டால்
      கணக்கான  குறி குணங்கள் கலந்து கேளு
பூணவே கடிவிசம் தான் கொண்டா போலே
      புயலான கண்ணதுவே காணாதப்பா
வீணவே வெற்றி பச்சிலை பறித்து
      விரைவாக சிரசுமேல் மத்திப்பிட்டால்
தோணவே கண்திறக்கும் கடிகை எட்டில்
      தொகையான மறுகாலம் சொல்ல கேளே.       

காம்பூரிக் காலத்தின் குணம் ஏதெனில் விஷம் தீண்டியது போல் வலி மேல்நோக்கி ஏறும். கண் காணாது மயங்கும்.   

வர்மலாட சூத்திரம்-300 : தலை கனம்கண் மயக்கும். (பிரதான குறிகுணங்கள்)

வர்ம பீரங்கி-100 :மதிமயங்கும்கடி விஷம் போல ஏறும். இரு விழிக்கும் பார்வை தெரியாது. கண் சீறல்கண்புகைச்சல் இருக்கும்.

காலக்கெடு :
கடிகை 8-க்குள் (அல்லது 18) மருத்துவம் செய்தால் குணமாகும்.(கடிகை 24 நிமிடம்)

11. மூர்த்தி காலம் – Moorthi Kalam

வேறு பெயர்கள் :
1. மூர்த்தி வர்மம் (வர்மசாரி-205)
2. வலமூர்த்தி காலம் (வர்ம லாட சூத்திரம்-300)

இருப்பிடம் :
1.     ‘கர்மமடா ரண்டிறை கீழ் காம்பூரிக்காலம்
            கருது மூன்றிறை வலத்தே மூர்த்திக்காலம்
      தர்மமடா இறையின் கீழ் அண்ணான் காலம்’   (வ.ஒ.மு. சாரி-1500)

2.     ‘பண்பான காம்பூரி ரண்டு மூர்த்தி ரண்டு’      (வர்ம சாரி-205)

3.           ‘அனாதி ரண்டிறைக்கு கீழ் காம்பூரிக் காலம்
      இன்னும் மூன்றிறை வலத்தே மூர்த்திக் காலம்
            இன்னு யிறையின் கீழ் அண்ணான் காலம்’    (வர்மானி-16)

4.           ‘நாடுமிறை ரண்டின் கீழ் காம்பூரியாகும்
      மானென்ற இறை மூன்றில் வலமே மூர்த்தி
            மருளிறையாம் இறையின் கீழ் அண்ணான் காலம்’ (அடிவர்ம சூட்சம்-500)

5.     ‘கருத்தான கண்ணினடி அருகுபற்றி
      கூர்ந்து நிற்கும் முனைகள் இருவசங்கள் தாவி
      கண்டுகொள் இத்தலமிரண்டும் மூர்த்தியென்றகாலம்’ (உற்பத்தி நரம்பறை-1000)

குறிகுணம் :

மூர்த்திக்காலம் (11)
வேளடா இன்னுமொன்று மூர்த்தி காலம்
      வெளியாக அதின் குணத்தை விள்ள கேளு
மெள்ளடா மண்டை தனில் உளைவு குத்து
      மெதுவான மயக்கமது கண்டுபாரு
பாளடா அரத்தை சிறு புள்ளடிவிட்டு அரைத்து
      பூசிடவே குத்துவலி உளைச்சல் போமே.  
மூர்த்தி காலத்தின் குணம் ஏதெனில் தலை உளைச்சல், குத்து, சிறு மயக்கம் காணும்.       

வர்மலாட சூத்திரம்-300 :தலை உளைச்சல் (பிரதான குறிகுணம்)

வர்ம சாரி-205 :மண்டை உளைவுவிலா குத்து உண்டாகும். அறிவு கெட்டு மயங்கும்.

உற்பத்தி நரம்பறை-1000 :கண் சிவக்கும். நாசி வழியே நீர் வடியும். மயக்கமும்,மரணமும் வரும்.

காலக்கெடு :
18 நாழிகைக்குள் மரணம் வரும். (உற்பத்தி நரம்பறை-1000) (நாழிகை 24 நிமிடம்)