2. சீறும்கொல்லி வர்மம்
வேறு பெயர்கள் :
1. சீறும் கொல்லி வர்மம் (வர்ம பீரங்கி-100)
2. சிடை வர்மம் (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)
பெயர்க்காரணம் :
இந்த வர்மத்தில் அடிபட்டால், நோயாளி தலையை அங்குமிங்கும் உருட்டுவான். மேலும் வாயில் நுரை தள்ளும், இது காண்பதற்கு சீறுவதைப் போலத் தோன்றும். இதனால் இவ்வர்மத்திற்கு ‘சீறும்கொல்லி’எனப் பெயர் வந்திருக்கலாம்.
இடம் :
பின் தலைப் பகுதியில் உள்ளது.
இருப்பிடம் :
1. கேளப்பா சிரசில் நடு கொண்டக் கொல்லி
கீர்த்தி பெற ஒட்டயின் கீழ் சீறும் கொல்லி
நாளப்பா நாலு விரலின் கீழ் பிடரிக்காலம்’ (வ.ஒ.மு. சாரி-1500)
2. ‘ஆமென்ற சிரசு நடு கொண்டைக் கொல்லி
அதனொன்று ஒட்டையின் கீழ் சீறும் கொல்லி
ஓமென்ற அங்குலம் நால் கீழ் பிடரி வர்மம்’ (வர்ம பீரங்கி-100)
3. ‘தானான தலை நடுவில் கொண்டைக் கொல்லி
சாண் ஒட்டை அதற்குக் கீழ் சீறுங்கொல்லி
ஊனான இதற்கு நாலங்குலத்தின் கீழ்
உற்றதொரு பிடரி வர்மம் ஆகும்பாரு’ (வர்ம கண்ணாடி500)
4. ‘தானான தலை நடுவில் கொண்டைக் கொல்லி
சாணொட்டை அதன் கீழே சீறுங்கொல்லி
ஊனான இதற்கு நாலங்குலத்தின் கீழே
உற்றதொரு பிடரிவர்மமாகும் பாரு’ (வர்ம திறவுகோல்)
5. ‘சேரவே தலையில் மத்தி செகித்ததோற் கொண்டைக்கொல்லி
பூரவே சாணொட்டைக்குள் புகன்றிடும் சீறும்கொல்லி
தாரவே நால்விரலுக்கு தாழவே பிடரி வர்மம்’ (வ.லா. சூத்திரம்-300)
6. ‘கொண்டைக் கொல்லி வர்மத்திலிருந்து பன்னிரண்டு விரலுக்குக்
கீழ் சீறுங்கொல்லி இதற்கு நாலு விரலுக்குக் கீழ் பிடரிவர்மம்’
(வர்ம விரலளவு நூல்)
7. ‘கொண்டைக் கொல்லி வர்மத்திலிருந்து பன்னிரண்டு
விரலளவுக்குக் கீழே பின்புறமாக சீறும்கொல்லி வர்மம்....’
(வர்ம விளக்கம்)
8. ‘உச்சியிலுள்ள துடி காலத்திலிருந்து முன் பக்கம்
கொம்பேறிக் காலமும் பின்பக்கம் சீறும் கொல்லி வர்மமும்
சம அளவு தூரத்தில் அமைந்துள்ளது’. (வர்மாணி நாலுமாத்திரை)
9. ‘கண்டத்தின் மேல் திலர்த காலத்திலிருந்து சீறும்கொல்லி
உட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) இரண்டாக
மடக்கி (16 விரலளவு) திலர்த காலத்திலிருந்து (பக்கவாட்டில்)
அளந்தால் சீறும் கொல்லி அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)
10. ‘செய்யவே ஒட்டையின் கீழ் உச்சி தன்னில்
திடமான சிடைவர்மம் தன்னைக்கேளு’ (வ.ஞா.ஒ.மு.ச.சூ-2200)
விளக்கம் :
இவ்வர்மம் கொண்டைக் கொல்லி (துடி காலம்) வர்மத்துக்கு ஓர் ஒட்டைக்கு அல்லது ஒரு சாணுக்கு (12 விரலளவு) பின்புறமாக அமைந்துள்ளது.
(பொதுவாக ‘ஒட்டை’ என்பது 10 விரலளவு என்ற கணக்கில் கொண்டால்கூட தலை போன்ற வளைந்த பகுதிகளில் ஒட்டை அளவை அளக்கும் போது விரிக்கப்பட்ட இரு விரல் நுனிகளுக்கிடைப்பட்ட நேரடி நீளத்தை (10.வி.அ.) கணக்கிட்டாமல் மண்டையின் வளைவை மனதில் கொண்டு விரல்களின் ஓரமாகவே அளக்க வேண்டும். இப்படி அளக்கும் போது 12 வி.அ. இருக்கும்.) மேலும் இவ்வர்மம் பிடரி வர்மத்துக்கு நான்கு விரலளவுக்கு மேலாக அமைந்துள்ளது. திலர்த வர்மத்திலிருந்து 16 விரலளவுக்கு பக்கவாட்டில் உள்ளது. இது ஒற்றை வர்மமாகும்.
‘வர்ம ஞான ஒடிவு முறிவு சரசூத்திரம்-2200’ என்ற நூல் சிடைவர்மம் என்ற பெயரில் ஒரு வர்மத்தைக் குறிப்பிடுகிறது. இது உச்சியிலிருந்து ஒர் ஒட்டைக்கு கீழே (பின்னால்) உள்ளது என்று குறிப்பிடுகிறது. இவ்வர்மத்தில் அடிப்பட்டால் தலை உருட்டல், வாயில் நுரைதள்ளல் போன்ற குறிகுணங்கள் ஏற்படும் இவ்வர்மத்தின் இருப்பிடம் மற்றும் குறி குணங்கள் சீறும் கொல்லி வர்மத்தோடு ஒத்துப் போவதால் இரண்டும் ஒரு வர்மமே என்பது தெளிவாகிறது.
உடற்கூறு :The Lambda of the skull. The point of intersection of sagittal and Lambdoid Sutures இவ்வர்மம் இரு Parietalஎன்புகளும். பின்புறமுள்ள ஒரு Occipital என்பு சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. தலையில் அல்லது ஒரு மண்டை ஓட்டின் பின் பகுதியைத் தடவிப் பார்த்தால் இவ்விடம் சற்றே மேடாகத் தெரியும்.
மாத்திரை :
ஏழு விரல் அகலம் வாங்கி, அடிக்கவோ குத்தவோ செய்தால் உடன் மயங்கும்.
குறிகுணம் :
சீறும் கொல்லி (2)
கொள்ளவே இன்னுமொன்று சீறும் கொல்லி
கொண்டவுடன் தலை உருட்டும் குறி கேடாக
தள்ளவே நுரை தள்ளும் குறுக்கு கூனும்
தாக்கும் பார் நாக்கையுமே சதிவதாக (அடிவர்ம சூட்சம்)
வர்மலாட சூத்திரம்-300 :தலை உருட்டும். (பிரதான குறிகுணம்)
வர்ம பீரங்கி-100 :தலை உருட்டும். வாய் நுரை காணும். குறுக்கு கூனும், நாக்கை உள் வலிக்கும்.
வர்ம சாரி-205 :கொண்டவுடன் தலை உருட்டும். வாயில் நுரை வரும். குறுக்கு கூனும். நாவை சப்பும்.
வர்ம விளக்கம் : ஓயாமல் தும்மும், வியர்க்கும், மூக்கில் நுரை வரும். இரத்தமும் வரும்.
வர்ம வில்லு விசை : உதடு கோணும். வாயில் நுரை வரும். தலை சுற்றும். இருமல், தாகம், பைத்தியம் (கிரிகை) இவை வரும்.
வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200 :சிடைவர்மம் கொண்டால் தலை உருட்டும். நுரை தள்ளும். வாய் நீரூறி உள் வாங்கும்.
அவதி :
வர்ம சாரி - 205 :நாழிகை 12
வ.ஞா.ஓ.மு. சரசூத்திரம்-2200 :நாழிகை 10-க்குள் அடங்கல் செய்யவும்.
மருத்துவம் :
இளக்குமுறை 1 :
தலை-கழுத்து வர்மங்களுக்கான சிறப்பு வர்ம இளக்குமுறை.
மருந்து : (வர்ம வில்லுவிசை)
எண்ணெய் : வெங்காயம், சிவதை, மூசாம்பரம், பஞ்சவன் பழுக்காய், சாதிக்காய், பற்படாகம், சீரகம், நாங்கணம், கோரோசனை வகைக்கு 5 கிராம் வீதம்,சித்திரமூலம், இசங்கு, ஆடாதோடை, இஞ்சி வகைக்கு 20 கிராம், சதைத்து தேங்காய் எண்ணெய் 750 மில்லியில் காய்ச்சி முதிர் மெழுகு பதத்தில் எடுத்து தலையில் தேய்க்கவும்,
தளம் : உழிஞ்ஞை சாற்றில் பஞ்சாரை (சீனி) அரைத்து தலையில் தளம் வைக்கவும்.
இளக்குமுறை 2 : (வர்ம விளக்கம்)
நாடியை ஏந்தி குலுக்கிவிட்டு, குரல்வளையிலிருந்து மேல் நோக்கி தலையின் இருபுறமும் தடவி விடவும். இளகும். இளகினாலும் தலைச்சுற்றல் போல இருக்கும். மயக்கம் உண்டாகும்.
மருந்து : ஓரிலைதாமரைவேர், விஷ்ணுகிரந்தி, வேர், சீதேவிசெங்கழுநீர், புலிச்சுவடி, சிற்றாமுட்டிவேர், வல்லாரை இவைகளை கசாயமிட்டு கஞ்சி வைத்து கொடுக்கவும்.
இளக்குமுறை 3 : (பிராண அடக்கம்)
சீறுங்கொல்லி வர்மம் கொண்டால் கழுத்தில் புறந்தலைக்குழியில் (பேன்குழி) கையை வைத்து இருத்த வேண்டும். உடன் இளகும்.
மருத்துவப்பயன் :
(1) இவ்வர்மம் சுழுமுனை நாடியின் இணைவர்மங்களுள் ஒன்று. இதை பயன்படுத்தி சுழுமுனை நாடியையும், அதில் இயங்கும் வாயுவின் செயல்பாட்டையும் சீர்படுத்தலாம்.
(2) ஆதார வர்மங்களில் இது ஆக்கினை வர்மமாகும். இதைக்கொண்டு ஆக்கினை சக்கரத்தின் செயல்பாட்டைத் தூண்டலாம். இதன் மூலம் ஆகாய பூத குறைபாடுகளை சீர்செய்யலாம்.
(3) தலை-கழுத்து வர்ம தடவு முறைகளில் பயன்படுகிறது.
நன்றி, டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி
No comments:
Post a Comment