3. பிடரி வர்மம் – Pidari Varmam
வேறு பெயர்கள் :
1. பிடரிக் காலம் (வர்ம சாரி-205)
2. பிடரிச்சுழி (அ) பிடரிக்குழி
இடம் :
பிடரிப் பகுதியில் உள்ளது.
இருப்பிடம் :
1. ‘தாமப்பா தலை முடிந்த தலத்தில் தானே
சார்வான குழிவதிலே பிடரிக்காலம்’ (வர்ம சூத்திரம்-101)
2. ‘அறிந்து கொள்ளு பிடரியென்ற காலங்கேளு
அப்பனே பிடரி என்ற பெருநரம்பில் பிடரிக்காலம்’ (வர்ம நிதானம்)
3. ‘அதனொன்று ஓட்டையின் கீழ் சிறுங்கொல்லி
ஓமென்ற அங்குலம் நால் கீழ் பிடரி வர்மம்’ (வர்ம பீரங்கி-100)
4. ‘கொள்ளவே பிடரியதின் குழியில் தானே
குணமான முடி முகிழ்தலத்திலப்பா
விள்ளவே அதில் பிடரிக்காலம்........’ (வர்ம கண்டி)
5. ‘சீறும்கொல்லி வர்மத்துக்கு நாலு விரலுக்குக்
கீழே பிடரி வர்மம்........’ (வர்ம விரலளவு நூல்)
6. ‘.......................................................................
கீர்த்தி பெற ஓட்டையின் கீழ் சீறும் கொல்லி
நானப்பா நாலு விரலின் கீழ் பிடரிக்காலம்’ (வர்மசாரி-205)
7. ‘முறையான ஆராய்ச்சிக் காலம் பாரு
அடவாக அதற்கு அரைவிரலின் மேலே
அடுத்துண்டு பிடரியென்ற காலமப்பா’ (வ.ஒ.மு.ச.சூ.-1200)
விளக்கம் :
பிடரி வர்மமானது தலை (கொண்டை) முடிந்த தலத்திலுள்ள குழியில் உள்ளது. பெண்கள் தலை முடியை பின் பக்கமாக கொண்டை முடிந்து கொள்ளும் இடம் பிடரியாகும். இறுக்கமாக தலை முடியை கொண்டை போட்டுக் கொண்டால் மட்டுமே இந்த குழியான தலத்தை மறைத்துக் கொண்டிருக்கும். சற்றே தளர்த்திக் கொண்டை போட்டுக் கொண்டாலும் அது இப்பிடரிக் குழிக்கு நான்கு விரலளவுக்கு கீழாக உள்ள வளை முடிந்த வர்மம் என்ற தலத்தை மறைத்துக் கொண்டிருக்கும்.
சீறும்கொல்லி வர்மத்துக்கு நான்கு விரலளவுக்கு கீழாக இவ்வர்மம் உள்ளது என்று பொதுவாக எல்லா நூல்களும் குறிப்பிடுகின்றன. வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200என்ற நூல் மற்ற நூல்களிலிருந்து வேறுபட்டு ‘ஆராய்ச்சி காலம்’ என்ற ஒரு வர்மத்தை அறிமுகப்படுத்துகிறது. இவ்வர்மத்துக்கு அரை விரலளவுக்கு மேலே பிடரி வர்மம் உள்ளதாக இந்நூல் குறிப்பிட்டாலும், வேறு வர்ம நூல்களோடு ஒப்பாய்வு செய்ததில் பிடரி வர்மத்துக்கு ஒரு விரலளவுக்குக் கீழே ஆராய்ச்சிக் காலம் இருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது. (விளக்கம் : பேன் குழி வர்மம் பார்க்கவும்)
வர்ம நிதானம் என்ற நூல் ‘பிடரி என்ற பெரு நரம்பில் பிடரிக்காலம்’ எனக் குறிப்பிடுகிறது. வர்ம சூத்திரம்-101 என்ற நூல் ‘பிடரி தன்னில் பெரு நரம்பின் மையம் வாக்கடா சுழியாடி’ என்று குறிப்பிடுகிறது. எனவே பெரு நரம்பில் மேல் பக்கத்தில் அதாவது சுழியாடி வர்மத்துக்கு அருகிலேயே (சுமார் 2 விரலளவுக்கு மேல்) பிடரி வர்மம் அமைந்திருக்க வேண்டும் என அறிய முடிகிறது.
உடற்கூறுச் சான்று :
பிடரி வர்மத்தின் இருப்பிடமானது மூளைப்பகுதிக்கும், தண்டு வடப்பகுதிக்கும் (பெரு நரம்பு) நடுப்பகுதியான முகுளம் (Medulla Oblongata) பகுதியை மையமாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும் என அறிய முடிகிறது. ஏனெனில் இவ்வர்மத்தின் முக்கிய குறிகுணமாக ‘விதமாக மூச்செடுக்கும்’ (வர்மசாரி-205) என்று கூறப்பட்டுள்ளது. இது முகுளப் பகுதியில் உள்ள சுவாச மையம் (Respiratory Centre) பாதிப்படைவதால் ஏற்படுகிறது.
ஏழாவது கழுத்து என்புக்கும் (கிழிமேக வர்மம்) சுமார் ஏழு விரலளவுக்கு மேலேயுள்ள இடமே பிடரி வர்மத்தின் இருப்பிடமாகும்.
மாத்திரை :
பதினான்கு விரல் அகலம் வாங்கி சரித்து வெட்டினால் விழும். பலமாக கொண்டதென்றால் உடனே சாகும்.
குறிகுணம் :
பிடரிவர்மம் (3)
அள்ளுகின்ற பிடரிவர்மம் குணத்தை கேளு
அடித்த உடன் கண்சீறும் நாக்கு தள்ளும்
மெள்ளவே மூச்செடுக்கும் மேல் துடிக்கும்
மெதுவான கடிகையது இருபத்தேழே. (அடிவர்ம சூட்சம்-500)
பிடரி வர்மத்தில் காயம் ஏற்பட்டால் குணம் ஏதெனில் கண் சீறும். நாக்கு வெளியே தள்ளும். மேல் மூச்சு வாங்கும். உடம்பு துடிக்கும்.
வர்மலாட சூத்திரம்-300 :மூச்சிளைக்கும். (பிரதான குறிகுணம்)
வர்ம நிதானம்-500 :கழுத்து நீண்டு கை கால் தளர்ந்து போகும். நாக்கு வெளியில் தள்ளும். வாய் பிளக்கும். வயிறு ஊதும். மூன்று நாட்களுக்குள் மரணம் வரும். இக்குறிகுணங்கள் மாறினால் மரணம் வராது.
வர்மசாரி-205 :தலை குழையும். கண்டம் சாய்க்கும். மூச்சு அடைக்கும். நாக்கு தள்ளும். மரணம் வரும்.
வர்ம கண்ணாடி-500 :கண் சீறும், நாக்கு தள்ளும்.
வர்ம கண்டி : முகம் சீறி கோணும்.
வர்ம விளக்கம் : தலை குனிந்து போகும். கண் இரண்டும் மூடிப்போகும். மூச்சு விடும் கிறுகிறுப்பு காண்பிக்கும்.
தொடுவர்ம நிதானம் : கண் இரண்டும் அடைக்கும் தலை குனிந்து உடல் சாயும். பெருமூச்செடுக்கும் நாக்கு வெளித்தள்ளும்.
உற்பத்தி நரம்பறை-1000 :பிடரியின் முடிச்சுக்குள் குத்திடிகள் கொண்டால், அட்டை சுருண்டது போல உடல் கூனி சுருளும். குதித்தெழுந்த நாடியெல்லாம் விசை தளர்ந்து,பொறியான அசைவெல்லாம் குழைந்து போகும். பிராண வாயு சிக்கல் கொண்டு உணர்வற்று பொறி தளர்ந்து கிடக்கும்.
காலக்கெடு:
நாழிகை 24 (வர்ம கண்ணாடி-500)
நாழிகை 18 (வர்ம கண்டி)
நாழிகை 13¾ (வர்ம சாரி-205)
நாழிகை 2 (தொடுவர்ம நிதானம்)
மருத்துவம் :
இளக்குமுறை 1 : (வர்ம நிதானம்-500)
நாடியை பிடித்து ஏந்தி கழுத்துச் சுற்றி கீழ்பக்கமாக தடவி, நாடியை இருபக்கமும் அசைத்து, கை-காலை இழுத்து விட்டால் குற்றம் மாறிப் போகும்.
பிடரி பெருநரம்பில் குற்றம் வந்தால், நரம்பில் நீருண்டாகி, சிரசில் அக்கினி சேர்ந்து பைத்தியம் வரும். இந்நோய் வராமல் இருந்தாலும், சிரசில் நீரேற்றம், தலைகுத்து உண்டாகும். கால், கை, உடல் உளைச்சல் வரும். உடலில் நீர் கட்டும் வயிறு வலிக்கும்.
இளக்குமுறை 2 : (தொடுவர்ம நிதானம்)
நோயாளியை எடுத்திருத்தி, கால்கள் இரண்டையும், மடக்கிப் பிடித்து நெஞ்சோடு சேர்த்து அணைத்து இறுக்கி, பிடித்து தூக்கி பின் கீழிருத்தி, பலமாக கைமடக்கி உச்சியில் குத்தி, கழுத்தில் இருவிரலால் முறையாகத்தடவி குழியதில் (சுமை வர்மம்) தாக்கவும். பிடரியின் இருபக்கங்களிலும் நரம்பு இளகும் படியாகத் தடவி தாக்கவும். கும்பத்தில் தண்ணீரெடுத்து செபித்து முகத்தில் தண்ணீரை அடிக்கவும். மயக்கம் தெளிந்து எழும்புவர்.
கஞ்சி : உலுவாய் (வெந்தயம்) கஞ்சி சூடாகக் கொடுக்கவும். வியர்த்திடும்.
தைலம் : மொசுமொசுக்கை தைலம் உள்ளுக்கும் கொடுத்து, தலைக்கும் இட்டு முழுகவும்.
பின் விளைவுகள் :300 நாட்களுக்குப் பிறகு பிடரிவலி, மூச்சு முட்டு, கண்களின் பார்வை குன்றல், பசி மந்தம் அல்லது மிகுபசி, காது இரைச்சல், பிரம்மை போல் புலம்புதல், தலை சொறிதல், விந்து வீணாய் வெளியேறல் போன்ற குறிகளைக் காட்டும்.
இளக்குமுறை 3 : (வர்ம கண்டி)
உச்சியில் அடிஅடித்து உதறிவிடவும்.
இளக்குமுறை 4 : (வர்ம விளக்கம்)
நோயாளியை எடுத்து இருத்தி அசைத்து விடவும். இருபுறமும் தடவி தாழ்த்தி விடவேண்டும். கை பிணைத்து தலை மேல் வைத்து மூன்று அடி அடித்து கங்கண பொருத்தில் கைகுத்தி அடித்து விடவும் இளகும்.
மருந்து : கூவிளத்தின் வேர், சிற்றாமுட்டி, மரமஞ்சள்-கஷாயம் வைத்து, கஞ்சி வைத்து கொடுக்க வேண்டும். தண்ணீர் ஓதி எறியவும்.
இளக்குமுறை 5 : (வர்ம சூத்திரம்-101)
நோயாளியை எடுத்து இருத்தி அசையாமல் உச்சியில் ஓர் அடி போடவும் கண்டத்தில் அணுகாமல் இருபுறமும் கயிறு போல அசைத்து விடவும் அன்னப்பாலுடன் கறி உப்பு இட்டு குடிக்கக் கொடுக்கவும்.
இளக்குமுறை 6 : (உற்பத்தி நரம்பறை-1000)
இரு புருவத்தில் தாக்கிட வேண்டும்.
மருத்துவப்பயன் :
(1) பிடரி வர்மம் இடகலை நாடியின் துணை வர்மமாகும். இவ்வர்மத்தைப் பயன்படுத்தி இடகலை நாடியையும் அதில் இயங்கும் வாயுவின் செயல்பாட்டையும் சீர்படுத்தலாம்.
(2) பிடரி வர்மம் விசுத்தி வர்மங்களுள் ஒன்று. இதனை பயன்படுத்தி விசுத்தி சக்கரத்தின் செயல்பாட்டைத் தூண்டலாம். இதன் மூலம் வாயு பூதக்குறைபாடுகளை சீர்செய்யலாம்.
(3) கிரியை நோய்கள், தலைவலி குணமாகும்.
(4 ) தலை-கழுத்து வர்ம தடவுமுறைகளில் பயன்படுகிறது.
4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam
வேறு பெயர்கள் :
1. சுருதி வர்மம் (வர்ம பீரங்கி-100)
2. சருதி வர்மம் (வர்ம ஒடிவு முறிவு சாரி-1500)
3. சரிதி வர்மம் (வர்ம கண்ணாடி-500)
இருப்பிடம் :
1. ‘தானான உச்சியிலிருந்து எட்டு விரலின் கீழே
சரிதி வர்ம மெனவுஞ் சொல்வார்
வானான இதற்கு இரு விரலின் கீழே
மகிமையுள்ள பொற்சை என்ற காலமாமே’
(வர்ம கண்ணாடி-500)
2. ‘ஏறவே கொண்டைக்கொல்லி எண்விரல் கீழ் சருதியாமே’
(வர்ம லாட சூத்திரம்-300)
3. ‘உச்சியில் நின்றெண் விரல் கீழ் சருதி வர்மம்’
(அடிவர்ம சூட்சம்-500)
4. ‘நாமப்பா நாலுவிரல் கீழ் பிடரிக்காலம்
நாலிறைக்கும் பக்கத்தில் சுருதி வர்மம்’
(வர்மானி-16)
5. ‘நாளப்பா விரல் நாலின் கீழ் பிடரிக்காலம்
நாலிறை பக்கம் மேல் முன் சருதி வர்மம்’
(வர்ம ஒடிவு முறிவு சாரி-1500)
6. ‘கேளப்பா சிரசில் நடு கொண்ட கொல்லி
கீர்த்தி பெற ஒட்டயின் கீழ் சீறும் கொல்லி
நாளப்பா நாலு விரலின் கீழ் பிடரிக்காலம்
நாலிறைக்கும் மேல் பக்கமதில் சுருதிவர்மம்
(வர்ம சாரி-205)
குறிகுணம் :
சருதி வர்மம் (4)
தானான சருதி வர்மம் குணமேதென்னில்
தலை உருட்டும் பனிகுளிர்ந்து அடிக்கும் பாரு
தேனான பல்நறுக்கும் பிதற்றும் சொன்னோம்
தெளிவான வர்மமிது சாத்தியம் சொல்லு
சருதி வர்மத்தின் குணம் ஏதெனில் தலை உருட்டும். சுரம், குளிர் இவைகள் காணும். வாய் பிதற்றும்.
வர்மலாட சூத்திரம்-300 :தலை பிதற்றும் (பிரதான குறிகுணம்)
வர்ம பீரங்கி-100 :தலை உருட்டும், சுரம்,குளிரடிக்கும்.
வர்ம சாரி-205 :தலை சுருட்டும், சுரம், குளிரடிக்கும்.
காலக்கெடு:
கடிகை 18-க்குள் சாத்தியம் (வர்ம பீரங்கி - 100) (கடிகை என்பது 24 நிமிடம்)
கடிகை 11 (வர்மசாரி - 205)
5. பொற்சை வர்மம் – Porchai Varmam
வேறு பெயர்கள் :
1. பொற்சை காலம் (வர்ம பீரங்கி-100)
2. பொர்ச்சை காலம் (வர்ம கண்ணாடி-500)
3. புகழ்ச்சை வர்மம் (உற்பத்தி நரம்பறை-1000)
4. புகச்சை வர்மம் (வர்மசாரி-205)
5. பெரிச்சல் வர்மம் (வர்ம நிதானம்-500)
இருப்பிடம் :
1. ‘தானான உச்சியிலேயிருந்து எட்டு விரலின் கீழ்
சரிதி வர்ம மெனவுஞ் சொல்வார்
வானான இதற்கு இரு விரலின் கீழே
மகிமையுள்ள பொர்ச்சை என்ற காலமாமே
காலமாம் அதற்குமொரு இறைக்கு கீழே
கனமான குத்தி என்ற காலமாகும்’
(வர்ம கண்ணாடி-500)
2. ‘ஓமென்றங்குலம் நாலுக்குக் கீழ் பிடரி வர்மம்
உச்சாணின் எண் விரலுக்குக் கீழ் சுருதி வர்மம்
காமென்ற இருவிரலுக்குக் கீழ் பொற்சைக் காலம்
காணிறை கீழ் குற்றிக் காலம்............’ (வர்ம பீரங்கி-100)
3. ‘.......................................சீறும்கொல்லி
நாளப்பா நாலு விரலின் கீழ் பிடரிக்காலம்
நாலிறைக்கு மேல் பக்கமதில் சுருதி வர்மம்
பாளப்பா இரண்டிறை கீழ் பொற்சகாலம்
பகர்ந்த ஓரிறை பற்றி குற்றிக்காலம்’ (வர்மசாரி-205)
4. ‘தேனென்ற காதில் நால் விரலுக்கு மேல்
திறமான பெரிச்சல் வர்மம் குணத்தைக் கேளு’ (வர்ம நிதானம்-500)
குறிகுணம் :
பொர்ச்சைக் காலம் (5)
ஏனான பொர்ச்சை என்ற காலம் தானும்
எழும் புகை போல் கண் இரண்டும் புகைச்சல் காய்ச்சல்
தானான பொய்கை குத்தும் புருவம் வீங்கும்
தனிமுகங்கள் வேறாகி கலங்கும் பாரு
மானான மணி மந்திரம் வேண்டாம் சொன்னோம்
மலங்காதே மனம் சலித்து வாடிடாதே
வர்மலாட சூத்திரம்-300 : கண் புகையும் (பிரதான குறிகுணம்)
வர்ம சாரி-205 :வர்மம் கொண்டவுடன் மயங்கும். புருவம் சீறி குத்தும்.
வர்ம கண்ணாடி-500 :கண்ணிரண்டும் புகையும் சுரம் வரும். சென்னியிலே குத்து உண்டாகும். கண் புருவம் அடுத்தடுத்து சீறும்.
வர்ம நிதானம்-500 :தலை எல்லாம் பெரிச்சல் (உணர்விழத்தல்) பிடிக்கும். செவி இரண்டும் அடைக்கும். தலை சுற்றும்.
காலக்கெடு :
வர்ம சாரி-205 :கடிகை 64 (ஒரு கடிகை 24 நிமிடம்)
வர்ம கண்ணாடி-500 :கடிகை 60 கழிந்தால் சாத்தியம்.
6. குற்றிக் காலம் – Kutti Kalam
வேறு பெயர்கள் :
1. குற்றிக் காலம் (வர்ம சாரி-205)
2. குத்திக் காலம் (வர்ம கண்ணாடி-500)
3. கொம்பு குத்தி வர்மம் (வர்ம வில்லு விசை)
இருப்பிடம் :
1. ‘......................................................................
மகிமையுள்ள பொர்ச்சை என்ற காலமாமே’
‘காலமாம் அதற்கு ஒரு இறைக்கும் கீழே
கனமான குத்தி என்ற காலமாகும்’ (வர்ம கண்ணாடி-500)
2. ‘பாரப்பா இரண்டிறை கீழ் பொற்சைக் காலம்
பகர்ந்த ஓரிறை பற்றி குற்றிக் காலம்’ (வர்மசாரி-205)
3. ‘வலது காதுக்கும் மூன்று விரலுக்கும் உயரே
மோடெலும்பின் சுளியில் கொம்புகுத்திகாலம்’ (வர்ம வில்லு விசை)
.
குறிகுணம் :
வர்மலாட சூத்திரம்-300 :சுழன்று சுற்றும். (பிரதான குறிகுணம்)
வர்ம சாரி-205 :உடல் துடிக்கும். சுழலும். கண்ணிரண்டும் அடைக்கும் மதிமயங்கி மயக்கம் உண்டாகும்.
வர்ம கண்ணாடி-500 :தேகம் துடிக்கும் பல் பூண்டு, கண் அடைக்கும்.
வர்ம வில்லு விசை : தலை உருட்டி பேசும், காதின் பக்கம் குழிந்து இருக்கும். கண் மஞ்சள் நிறமாக இருக்கும். மூக்கில் சுவாசம் திறந்து வரும்.
காலக்கெடு:
வர்ம சாரி - 205 :நாழிகை 26 (ஒரு நாழிகை/கடிகை 24 நிமிடம்)
வர்ம கண்ணாடி - 500 :கடிகை 19
7. செவிக்குத்தி வர்மம்
வேறு பெயர்கள் :
1. செவிக்குத்தி வர்மம் (வர்ம கண்ணாடி-500)
2. செவிக்குற்றி வர்மம் (உற்பத்தி நரம்பறை-1000)
3. செவிக்குறி வர்மம் (வர்ம சூடாமணி)
4. சிருங்காடம் (வர்ம விதி)
இருப்பிடம் :
1. ‘தேளப்பா காது சிறு தண்டருகு பற்றி
திட்டமுடன் செவிக்குத்தி காலமாகும்’ (வர்ம நிதானம்)
2. ‘மூலமாம் காதில் சிறுதண்டருகில் தானே
முறையான செவிக்குத்தி காலமென்பர்
கூலமாம் இதனிரண்டு இறைக்கும் மேலே
குணமான பொய்கை என்ற காலமாகும்’
(வர்ம கண்ணாடி-500)
3. ‘காடப்பா காதில் சிறுதண்டில் தானே
கலங்காதே செவிக்குத்தி காலம் என்பர்’ (வர்ம சூத்திரம்-101)
4. ‘காதின் முன்புறத்தில் செவிக்குத்தி காலம்’ (வர்மவிரலளவு நூல்)
5. ‘சயமாகும் செவிக்குறி வர்மம் தானும்
செயலாக அதன் குணத்தை சொல்லக்கேளு’
‘கேளப்பா காதில் சிறுதண்டின் அருகே
கெடி குழிவுங்காணும் அதுதானே......’ (வர்ம சூடாமணி)
6. ‘சீறுகின்ற கொல்லியதில் ஆறுவிரலில்
ஆறுவிரல் சுற்றி செவிக்குத்திக் காலம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
7. ‘வருதியின் செவியினில் சேர்வன்மையாம் சிறுதண்டிற்கும்
சுருதியின் சேரிடத்தில் செவிக்குற்றி காலம் தானே’ (வர்ம லாட சூத்திரம்-300)
8. ‘பேதகமே இல்லையடா கீழ்தாரைக்குள்
வேதகமே அலவாடி மூட்டில் குச்சம்
சேதகமுனை ஏவி நிற்கும் செவிக்குற்றியில்’ (உற்பத்தி நரம்பறை-1000)
9. ‘கண்டத்தின் மேல் திலர்த வர்மத்திலிருந்து
சீறுங்கொல்லியுட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) நான்காக மடக்கி (8 விரலளவு) திலர்த காலத்திலிருந்து
பார்த்தால் செவிக்குத்திக் காலம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)
10 ‘உற்ற கண்ணாடி நாசியுறு கன்னமிவை பிரிந்து
வெற்றியுள் வாயிற் காணுமெதிற் சிருங்காட வன்மம்’ (வர்மவிதி)
குறிகுணம் :
சொல்லு செவிக்குற்றியுட காலம் தானும்
சுண்டுதான் கோணி ஒருபுறமாய் கொள்ளும்
தொல்லையோடு வாய் மூக்கில் ரத்தம் வந்து
தொடராக கொப்பளித்து ஒலிக்கும் பாரு
முல்லையுடல் மயங்கிவரும் மூக்கு வியர்க்கும்
மோசம் ஒரு செவிகேளாது இருக்கும் பாரு
பல்லையாம் படுவர்மம் இதுதானய்யா
பலமாகும் கடிகை இருபத்தி மூன்றே.
வர்மலாட சூத்திரம்-300 :வாய், மூக்கில் இரத்தம் வரும். (பிரதான குறிகுணம்)
வர்ம சாரி-205 :வாய், மூக்கில் நீர் வடியும். முகம் கறுக்கும். மூக்கில் இரத்தம் கொட்டும்.
வர்ம கண்ணாடி-500 :வாய், மூக்கில் இரத்தம் கொப்புளித்து பாயும். உதடும் வாயும் கோணும். உணர்வு கெட்டு மயங்கும்.
வர்மாணி-101 :வாயில் நுரை தள்ளும். விழி இரண்டும் தெறித்து நிற்கும். செவி ஒன்றும் கேட்காது.
வர்ம கண்டி : கண்ணிரண்டும் தள்ளி இரத்தம் காணும்.
வர்ம கண்டி - உரைநடை : சன்னி வரும். பல் பூண்டு, கண் அடைக்கும். தலை சுற்றும்.
வர்ம சூத்திரம்-101 :விழியிரண்டும் தள்ளி வாயில் நுரை வரும்.
வர்ம சூடாமணி : வாயில் நுரை வரும். கண்ணிரண்டும் அரை கண்ணாகும்.
வர்ம விதி : மரணம் ஏற்படும்.
வர்ம நிதானம்-500 :சென்னி வலிக்கும். கண் வலிக்கும். கண்ணில் நீர் பாயும். தலைசுற்றும். இதில் முறிந்தால் வாய் மூக்கில் இரத்தம் வரும். கவிழ்ந்து விழும். தலை உருட்டும், சன்னி உண்டாகும். காது இரண்டும் அடைக்கும். மயங்கும் பிடரியில் குத்து உண்டாகி, சுரம், குளிர், சீதம் வரும். 3-6-9-12 கழிந்தால் மரணம் ஏற்படுத்தாது.
தட்டு வர்ம திரட்டு : விழி இரண்டும் தள்ளி வாயில் நுரை வரும். செவி இரண்டும் கேளாது. மருத்துவம் செய்தாலும் 3-ம் மாதம் காது இரண்டும் தடிக்கும், கேளாது. 6-ம் மாதம் முகம் கோணும். 12-ம் மாதம் மரணம் வரும்.
உற்பத்தி நரம்பறை-1000 :காயம் பலமாய் கொண்டால் உடனே கொல்லும். மாத்திரை குறைவாக இருந்தால் கொண்டவுடன் ஆள் மயங்கும். கண்டம் ஒரு பக்கம் கோணும். கண்ணிரண்டும் சிவக்கும். நாசியில் நீர் பாய்ந்து காணும்.
காலக்கெடு :
1. கடிகை - 37 (வர்ம சாரி-205) (கடிகை/நாழிகை 24 நிமிடம்)
2. கடிகை - 21 (வர்ம கண்ணாடி-500)
3. கடிகை - 29 (வர்ம பீரங்கி-100)
4. கடிகை - 13¾ (வர்மாணி-101)
5. நாழிகை - 23 (வர்ம கண்டி)
6. நாழிகை - 13 (வர்ம கண்டி-உரைநடை)
7. நாழிகை - 17 (வர்ம சூடாமணி)
8. நாழிகை - 25 (தட்டு வர்ம திரட்டு)
9. 3-6-9-12 கழிந்தால் மரணம் ஏற்படாது (வர்ம நிதானம்-300)
8. பொய்கை காலம் - Poigai Kalam
வேறு பெயர்கள் :
1. பொய்கை காலம் (வர்ம கண்ணாடி-500)
2. சென்னி பொய்கை வர்மம் (வர்மாணி நாலுமாத்திரை)
இருப்பிடம் :
1. ‘வர்மமடா காதின் மேல் பொய்கைக் காலம்’ (வர்மசாரி-205)
2. ‘காமென்ற செவிக்குத்திக்காலம் இருவிரலின் மேல்
கண்டிடுவாய் பொய்கையென்ற காலமாமே’ (வர்ம பீரங்கி-100)
3. ‘முறையான செவிக்குத்திக் காலமென்பார்
கூலமாம் இது இரண்டு இறைக்கும் மேலே
குணமான பொய்கை என்ற காலமாகும்’ (வர்ம கண்ணாடி-500)
4. ‘குறியான செவிக்குத்தி வர்மம் அதிலிருந்து
கூறு இருவிரல் மேலே பொய்கை வர்மமிரண்டு’
(வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
5. ‘பெருநரம்பு வர்மத்துக்கு ஆறுவிரலுக்கு முன்னால் பொய்கைக்
காலம் இதற்கு நான்கு விரலுக்கு முன்னால் நட்சத்திரக்காலம்’
(வர்மவிரலளவு நூல்)
6. ‘தலை சுற்றளவு நூலை (32 விரலளவு) நான்காக மடக்கி
(8 விரலளவு) திலர்த வர்மத்திலிருந்து பக்கவாட்டில்
அளக்க பொய்கை காலம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)
7. ‘தானென்றால் செவிக்குற்றியதனுக்கு மேல் பக்கமாக
கோனென்றால் ரண்டிறைக்கு கொள்கையாம் பொய்கைக்காலம்’
(வர்ம லாட சூத்திரம்-300)
8. ‘நானென்ற பொய்கையது கடைக்கண்ணில்
நட்சத்திரம் பதிய நால் விரல் தான் வைக்க’
(சரசூத்திர திறவுகோல்-36)
9. ‘சென்னி பொய்கையில் கைதேற்றி அடித்தால்........... (வர்மாணி நாலுமாத்திரை)
10. ‘நிறைவான பொய்கையடா கண்ணின் பக்கம்
துறவொன்று மாறியது துடிப்பு பாரே
............. .......... ............ ................ ...........
தப்பாமல் அத்தலத்தில் நரம்பு தானே
ஒப்பாமல் நிற்கும் ஒயாமல் உயிருள்ளமட்டும்’ (உற்பத்தி நரம்பறை-1000)
குறிகுணம் :
பொய்கைக் காலம் (8)
பாரப்பா இன்னுமொரு பொய்கை காலம்
படும் குணம் யான் பண்பாக உரைக்க கேளு
சீரப்பா பட்ட உடன் மயக்கமாகும்
செவி கேட்கும் செகம் பார்க்கும் தெளிவிராது
சாரப்பா சடலமதுக்கு அழிவிராது
சார்வாக கடிகையாறில் எழும்பும் பாரு
நேரப்பா கடிகை ஓர் ஒன்பதுக்குள்
நினைவாகி நிற்குமடா நிலைமைக்காணே.
பொய்கை காலத்தின் குறி குணம் ஏதெனில் பட்ட உடன் மயங்கும். செவி கேட்கும். கண்ணை சுழற்றி சுழற்றி பார்க்கும். ஆனால் தெளிவாக இருக்காது. மரணம் ஏற்படுத்தாது,
வர்மலாட சூத்திரம்-300 :கண் புகைச்சலாகும் (பிரதான குறிகுணம்)
வர்ம சாரி-205 :கண் புகைந்து சுரம் உண்டாகும். குத்தல் ஏற்படும். புருவம் சீறும். வாய்,மூக்கில் நீர் வடியும்.
வர்ம கண்ணாடி-500 :பட்டவுடன் மயங்கும். உணர்வு அற்று போகும்.
வர்ம நிதானம்-300 :சென்னிபொட்டில் வலி, முக வீக்கம், தலை சுற்றல், மூக்கில் வலி,காந்தல் இவை உண்டாகும். இந்த இடத்தில் குத்துப்பட்டு முறிந்து போனால் கண் பார்வை இழப்பு ஏற்படலாம். நாளடைவில் தலைவலி உண்டாகும். பொய்கை குத்து மாறாது.
தொடுவர்ம நிதானம் : பொறி தளர்ந்து, கண் மயங்கி, புலன் அயர்வு உண்டாகும். வாயில் நுரை-பதைதள்ளும். அண்ணாந்து வாய் பிளந்திருக்கும். உணர்வற்று முதிர்ந்து போகும்.
உற்பத்தி நரம்பறை-1000 :பொய்கையில் காயம் ஏற்பட்டவுடன் முகம் மஞ்சள் நிறம் போல பேதமுற்று காணும். மூச்சு விட சிரமம் உண்டாகும். மிகவும் வலித்து மூச்சு இழுக்கும். அடிபட்ட தலம் பந்து போல வீங்கும். மயக்கம் உண்டாகும். பள்ளை இரண்டும் குளிர்ந்து காணும். முதுகுத் தண்டும் குளிர்ந்து போகும். வியர்வையுண்டாகும். அழைத்தால் கேட்காது. கண் மயங்கி அடைத்திருக்கும். உடல் முற்றும் குளிர்ந்து போகும். முடிப்புகள் ஒரு நொடியில் குழைந்து போகும். தாதுக்கள் நிலை தளர்ந்து தயங்கி தடைப்பட்டு அசையாது நிற்கும்.
வர்மாணி நாலுமாத்திரை : தலை ஒரு புறம் சரிந்து விழும். அலறும் மூக்கில் நீர் வடியும். வாய் பூட்டி உணர்வு கெட்டு கிடக்கும்.
காலக்கெடு:
(1) 51 நாழிகைக்குள் இளக்குமுறை செய்ய வேண்டும். 51 நாழிகை
கழிந்தால் மயக்கம் தெளிந்து சுகமாகும். (நாழிகை 24 நிமிடம்)
(2) 30 நாழிகைக்குள் இளக்குமுறை செய்ய வேண்டும். (தொடுவர்ம
நிதானம்)
(3) 5 நாழிகை (வர்மாணி நாலுமாத்திரை)
9. நட்சத்திர காலம் – Natchathira Kalam
வேறு பெயர்கள் :
1. நட்சேத்திர காலம் (வர்ம பீரங்கி-100)
2. மீன வர்மம் (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)
3. ஆபங்க வர்மம் (வர்ம விதி / சுஸ்ருத சம்ஹிதா)
இருப்பிடம் :
1. ‘காலமாம் கடைக்கண் கீழ் நட்சத்திரக்காலம்’ (வர்ம பீரங்கி-100)
2. ‘காலமாம் கடைக்கண்ணில் இறைக்குள்ளே தான்
கலங்குகின்ற நட்சத்திர காலம் எண்ணே
எண்ணவே அதற்கு இரண்டு இறைக்குக் கீழே
இதமான காம்போதிக் காலமாகும்’ (வர்ம கண்ணாடி-500)
3. ‘வளமான கண்ணின் கீழ் நட்சத்திர காலம்
வர்மமடா இரண்டிறை கீழ் காம்பூரிக்காலம்’ (வர்மசாரி-205)
4. ‘பொய்கை காலத்துக்கு நான்கு விரலுக்கு முன்னால் நட்சேத்திரக்காலம் இதற்கு இரண்டு விரலுக்கு
கீழே அலவு காம்பூரி வர்மம்’ (வர்ம விரலளவு நூல்)
5. ‘இயல்பான கடைக்கண்ணில் இமையில் தானே
நயம்பெறவே நட்சேத்திர காலம்.....’ (வர்ம கண்டி)
6. ‘கடைக்கண் இறைக்குள்ளே தான்
கலங்குகின்ற குழியிதிலே நட்சேத்திரகாலம்’ (வர்மசூத்திரம்-101)
7. ‘............... பொய்கை வர்மம் ரண்டு
தறுகிலே இருவிரலின் பக்கம் மாறி
சார்வான நட்சத்திரகாலம் ரண்டு
மறவாதே அதிலிருந்து நால்விரல் மேல்
மைந்தேனே சென்னிவர்மமாகும் ரண்டு’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
8. ‘நன்றான கடைக்கண்ணில் ஓரிறைக்கு தாழே
நாயகனே நட்சத்திரக் காலமாகும்’ (வர்ம திறவு கோல்-225)
9. ‘நானென்ற கடைவிழிக்கு கீழ் நட்சத்திரம்தான்
நாடுமறை ரண்டின்கீழ் காம்பூரியாகும்’ (அடி வர்ம சூட்சம்-500)
10. ‘கண்டத்தின் மேல் திலர்தகாலத்திலிருந்து சீறுங்கொல்லி
உட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) எட்டாக
மடக்கி (4 விரலளவு) திலர்தவர்மத்திலிருந்து அளக்க
நட்சத்திரக்காலம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)
11. ‘சுருதியிடங்கண் புறத்திற் கண் புருவத்தில்
மருவிடுங் கீழபாங்கமெனு...............’ (வர்ம விதி)
12. ‘அப்பனே மீனமது நட்சேத்திர வர்மம்’
(வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)
குறிகுணம் :
நட்சத்திரக் காலம் (9)
ஆமப்பா நட்சத்திர காலம் கொண்டால்
அகலாது கண்சீறி சிவந்து போகும்
வாமப்பா முகம் கோணும் இன்னும் கேளு
வளர் மேனி அண்ணாந்து ஆகாசம் பார்க்கும்
நாமப்பா கடிகை பதினெட்டரைக்குள்
நவின்ற குறிகுணமதனை நன்றாய் பார்த்து
பாரப்பா படுவர்ம அடங்கல் தன்னில்
பார்த்திளக்கு பரிகாரம் முன்போல் காணே. (அடிவர்ம சூட்சம் -500)
நட்சத்திரக் காலத்தில் காயம் ஏற்பட்டால் கண் சீறி சிவக்கும். முகம் ஒரு புறமாய் கோணும். மல்லாக்க விழுந்து ஆகாயம் பார்க்கும். பதினெட்டரை நாழிகைக்குள் பார்த்து தக்க பரிகாரம் தேடிக்கொள்ளவும்.
வர்மலாட சூத்திரம்-300 :அதிகமாய் கண் சிவக்கும் (பிரதான குறிகுணம்)
வர்ம சாரி-205 :வாய், மூக்கில் நீர் பாயும். மலம் போகாது. முகம் கோணும். உடல் நடுங்கும்.
வர்ம பீரங்கி-100 :கண் இரண்டும் சிவக்கும். முகம் கோணும். உடல் தடிக்கும். வாயில் நீர் பாயும். மயங்கும்.
வர்ம சூத்திரம்-101 :கண்ணும் முகமும் மஞ்சள் போல மாறும். முகம் மாறி, வியர்வை உண்டாகும். கண் பார்வை இருக்காது. முதுகு, விலா இருபுறமும் குளிர்ந்து காணும்.
வர்ம நிதானம்-500 :சென்னியில் தரிப்பு உண்டாகும், தலை நடுக்கம் காணும். வாய் பேசாது. கண் கூசும். கண்ணில் தரிப்பு உண்டாகும்.
வர்ம விதி : கண் பார்வை குறைவு நோய்கள், கண் குருடு இவை ஏற்படும்.
காலக்கெடு :
நாழிகை-18 அல்லது 27-க்குள் இளக்குமுறை செய்ய வேண்டும்.
நாழிகை-12 (வர்ம கண்டி-வடக்கன்வழி)
10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam
வேறு பெயர்கள் :
1. காம்பூரி காலம் (வர்ம பீரங்கி-100)
2. காம்போதிக் காலம் (வர்ம கண்ணாடி-500)
3. அலவு காம்பூரி வர்மம் (வர்ம விரலளவு நூல்)
4. அலவு காம்போதி அடங்கல் (அடங்கல் விவரம்)
இருப்பிடம் :
1. ‘வளமான கண்ணின் கீழ் நட்சத்திரக் காலம்
கற்மமடா ரண்டிறை கீழ் காம்பூரிக் காலம்
கருது மூன்றிறைவலத்தே மூர்த்தி வர்மமே’ (வர்மசாரி-205)
2. ‘..........நட்சத்திரகாலம் எண்ணே
எண்ணவே அதற்கு இரண்டிறைக்கும் கீழே
இதமான காம்போதிக் காலமாகும்.
திண்ணவே இதற்கு மேல் வலம் இறை மூன்றில்
திருக்கான மூர்த்தி என்ற காலமென்பர்’ (வர்ம கண்ணாடி-500)
3. ‘நட்சத்திரக் காலத்துக்கும் இரண்டு விரலுக்கு கீழே
அலவு காம்பூரி வர்மம் இதற்கு இரண்டு விரலுக்கு
வலத்தே சிறு தண்டின் பக்கம் கபால வர்மம்’ (வர்ம விரலளவு நூல்)
4. ‘காலமாம் கடைக்கண் கீழ் நட்சத்திர காலம்
காலம் கீழ் இரண்டிறையில் காம்பூரிகாலம்’
‘காலமதில் இறைமூன்றில் மூர்த்திக்காலம்’ (வர்ம பீரங்கி-100)
குறிகுணம் :
காம்பூரிக் காலம் (10)
காணப்பா காம்பூரி காலம் கொண்டால்
கணக்கான குறி குணங்கள் கலந்து கேளு
பூணவே கடிவிசம் தான் கொண்டா போலே
புயலான கண்ணதுவே காணாதப்பா
வீணவே வெற்றி பச்சிலை பறித்து
விரைவாக சிரசுமேல் மத்திப்பிட்டால்
தோணவே கண்திறக்கும் கடிகை எட்டில்
தொகையான மறுகாலம் சொல்ல கேளே.
காம்பூரிக் காலத்தின் குணம் ஏதெனில் விஷம் தீண்டியது போல் வலி மேல்நோக்கி ஏறும். கண் காணாது மயங்கும்.
வர்மலாட சூத்திரம்-300 : தலை கனம், கண் மயக்கும். (பிரதான குறிகுணங்கள்)
வர்ம பீரங்கி-100 :மதிமயங்கும், கடி விஷம் போல ஏறும். இரு விழிக்கும் பார்வை தெரியாது. கண் சீறல், கண்புகைச்சல் இருக்கும்.
காலக்கெடு :
கடிகை 8-க்குள் (அல்லது 18) மருத்துவம் செய்தால் குணமாகும்.(கடிகை 24 நிமிடம்)
11. மூர்த்தி காலம் – Moorthi Kalam
வேறு பெயர்கள் :
1. மூர்த்தி வர்மம் (வர்மசாரி-205)
2. வலமூர்த்தி காலம் (வர்ம லாட சூத்திரம்-300)
இருப்பிடம் :
1. ‘கர்மமடா ரண்டிறை கீழ் காம்பூரிக்காலம்
கருது மூன்றிறை வலத்தே மூர்த்திக்காலம்
தர்மமடா இறையின் கீழ் அண்ணான் காலம்’ (வ.ஒ.மு. சாரி-1500)
2. ‘பண்பான காம்பூரி ரண்டு மூர்த்தி ரண்டு’ (வர்ம சாரி-205)
3. ‘அனாதி ரண்டிறைக்கு கீழ் காம்பூரிக் காலம்
இன்னும் மூன்றிறை வலத்தே மூர்த்திக் காலம்
இன்னு யிறையின் கீழ் அண்ணான் காலம்’ (வர்மானி-16)
4. ‘நாடுமிறை ரண்டின் கீழ் காம்பூரியாகும்
மானென்ற இறை மூன்றில் வலமே மூர்த்தி
மருளிறையாம் இறையின் கீழ் அண்ணான் காலம்’ (அடிவர்ம சூட்சம்-500)
5. ‘கருத்தான கண்ணினடி அருகுபற்றி
கூர்ந்து நிற்கும் முனைகள் இருவசங்கள் தாவி
கண்டுகொள் இத்தலமிரண்டும் மூர்த்தியென்றகாலம்’ (உற்பத்தி நரம்பறை-1000)
குறிகுணம் :
மூர்த்திக்காலம் (11)
வேளடா இன்னுமொன்று மூர்த்தி காலம்
வெளியாக அதின் குணத்தை விள்ள கேளு
மெள்ளடா மண்டை தனில் உளைவு குத்து
மெதுவான மயக்கமது கண்டுபாரு
பாளடா அரத்தை சிறு புள்ளடிவிட்டு அரைத்து
பூசிடவே குத்துவலி உளைச்சல் போமே.
மூர்த்தி காலத்தின் குணம் ஏதெனில் தலை உளைச்சல், குத்து, சிறு மயக்கம் காணும்.
வர்மலாட சூத்திரம்-300 :தலை உளைச்சல் (பிரதான குறிகுணம்)
வர்ம சாரி-205 :மண்டை உளைவு, விலா குத்து உண்டாகும். அறிவு கெட்டு மயங்கும்.
உற்பத்தி நரம்பறை-1000 :கண் சிவக்கும். நாசி வழியே நீர் வடியும். மயக்கமும்,மரணமும் வரும்.
காலக்கெடு :
18 நாழிகைக்குள் மரணம் வரும். (உற்பத்தி நரம்பறை-1000) (நாழிகை 24 நிமிடம்)
No comments:
Post a Comment