பாண்டியர்
பாண்டியப் பேரரசு பாண்டி நாடு | |||||
| |||||
பாண்டியப்பேரரசின் ஆட்சி, அதிகாரத்தின் உச்சம்(கி.பி.1250-1311) | |||||
தலைநகரம் | முற்காலப் பாண்டியர்கள்: கொற்கை, மதுரை
| ||||
மொழி(கள்) | தமிழ் | ||||
சமயம் | சமணம், வைணவம், சைவம் | ||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
வேந்தர் | |||||
- | கி.பி.575 – 600 | கடுங்கோன் | |||
- | கி.பி.900 – 945 | மூன்றாம் இராசசிம்மன் | |||
- | கி.பி.1216-1238 | முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | |||
- | கி.பி.1268-1311 | முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் | |||
வரலாற்றுக் காலம் | சங்க காலம், மத்திய காலம் | ||||
- | உருவாக்கம் | கி.மு. 6ஆம் நூற்.[2][3][4] | |||
- | முதலாம் பாண்டியப் பேரரசு | கி.பி.575 - கி.பி. 945 | |||
- | இரண்டாம் பாண்டியப் பேரரசு | கி.பி. 1216 | |||
- | குலைவு | கி.பி. 1600[1] | |||
தற்போதைய பகுதிகள் | இந்தியா இலங்கை |
தமிழ்நாட்டு வரலாறு |
தமிழக வரலாறு |
---|
பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு.[5]
சொல்லிலக்கணம்
பண்டு = பண்டைய = பாண்டிய = பாண்டியர் என்று திரிந்திருக்கலாம் என்பது பாவாணர் கூற்று.[6]பாண்டியர் என்னும் சொல் பண்டையர் என்னும் சொற்றிரிபே என்றும் மொழி நூல் வல்லுநரும் மொழிவர்.[7] பண்டைய நாடு' என்பதே பாண்டிய நாடு' என மருவியதாக கூறுவர்.[8]
இடம்
பாண்டியதேசம் சோழதேசத்திற்கு தெற்கிலும், சேரதேசத்திற்கு கிழக்கிலும், ஓர் அகன்று பரவி இருந்த தேசம் ஆகும்.[9] இந்த பாண்டியதேசத்தில் பூமி மேற்கே உயரமாகவும், கிழக்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும், கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், ஆகக் காணப்படும்.[10] இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலையே மிகவும் உயரமானது. சிறு, சிறு குன்றுகளும், இத்தேசத்தின் நடுவிலுள்ள சமதளமான பூமியில் சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த தேசத்தின் தெற்கில் மலையம், தர்துரம், என்னும் பெரிய மலைகளும், வருஷகிரி, வராககிரி, போன்ற சிறு மலைகளும் இருக்கும். இந்த கர்னாடகதேசத்தில் யதுகிரி, ஸஹயம் என்னும் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரிநதி பாண்டியதேசத்தை செழிக்க வைக்கின்றது. தெற்கில் பொதியம் மலையில் உற்பத்தியாகும் வைகை நதி சிறப்பு வாய்ந்தது[11] இந்த பாண்டியதேசத்தில் நெல், வாழை, கரும்பு, போன்ற பயிர்களும், பருத்தி, பயறுவகைகளும் விளைகின்றது. காவிரிநதி கரையில் பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட தஞ்சை, இராமேசுவரம் சிறப்பு வாய்ந்தது.
தனிப்பாடல்களின் திரட்டு நூலான பெருந்தொகையில் பாண்டிய நாட்டின் எல்லைகள் பற்றிய பாடல் ஒன்று உள்ளது.
இந்தப் பாடலை 12ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அவைக்களப் புலவராய் இருந்த கம்பர் பாடியது என்று பாவாணர் சொல்லுகிறார். இப்பாடல் படி, வடக்கில் வெள்ளாறும் மேற்கில் பெருவழியும் தெற்கில் கன்னியாகுமரியும் கிழக்கில் வங்காள விரிகுடா கடலும் எல்லைகளாக இருந்துள்ளன.
பாண்டியர் பெயர்கள்
பாண்டியர் தங்கள் பெயரில் மாறன், வழுதி, சடையவர்மன், மாறவர்மன், வர்மன், செழியன், முது குடுமி என்ற ஒட்டுக்களைக் சேர்த்துக் கொண்டனர். இவர்களின் குலப்பெயர் பரவலாகப் பாண்டியர் என அறியப்படினும் இவர்கள் சந்திர குலம், தென்னர் குலம், கவுரியர் குலம், பஞ்சவர் குலம் என்றும் பாடல்களில் போற்றப்படுகின்றனர்.
தொன்மங்களில் பாண்டியர்கள்
குமரிக் கண்டத்தில் தோன்றிய மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து. இந்தியப்பெருங்கடலில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது. இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது. இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது. இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.
- இராமாயணத்தில்
பாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்றும் முத்து, பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது என்றும் இராமாயணத்தில் உள்ளது.[12]
- புராணங்களில்
பல இந்து மதப் புராணங்களும், தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் பல பாண்டிய மன்னர்கள் இருந்ததாகவும் அவர்கள் வரிசையாகப் பதவியேற்றதாகவும் குறிப்பிடுகின்றன. இது தவிர்த்து திருவிளையாடல் புராணங்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாண்டிய மன்னர்களும்,[13] நற்குடி வேளாளர் வரலாற்றில் 201 பாண்டிய மன்னர்களும்[14], இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரையில் 197 பாண்டியர்களும் குறிப்பிடப்படுகின்றனர்.
இப்புராணங்கள் படி மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி, இவளது திருமணம் மதுரையில் சிவனுடன் நடந்தது[15]. சோமசுந்தரப் பெருமானாக மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் வளர்த்தார் இவர்[16].மதுரை மீனாட்சி பெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள். அதன் வழிவந்த வழிமுறையினரே மௌரியர்கள் என்று கருதப்படுகிறது. அந்த வழியில் சித்திராங்கதன் வந்தான் என்பதும் அவன் மகளே சித்திராங்கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச் சான்றுகள்
பிற நாட்டவர் பதிவுகள்
- சுமார் 300 கி.மு. - மெகஸ்தெனஸ் இந்தியா வருகை. பண்டையா என்னும் அரசு பாண்டியர் நாட்டை ஆண்டதாக குறிப்பு.[17] மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. எரெக்ளீசு (Heracles) என்ற மன்னனுக்கு 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான். அதில் 350 ஊர்கள் இருந்தன. நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.[18]
- சுமார் கி. மு. 60 – நிகோலசு தமாசுகசு மற்றும் ஸ்ட்ரேபோ மதுரையை ஆண்ட பாண்டியர் மன்னன் ஒருவன் அகஸ்டஸ் மன்னனுக்கு தூதனுப்பியதாக குறித்தனர்.[19]
- சுமார் கி.பி. 1 – 140 - பிளைனி மற்றும் தாலமி[19] மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாக குறித்தனர்.[20]
- சுமார் கி.பி. 1 – 200 - முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர் யவனர்களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர்.செங்கடல் செலவு என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் மூவேந்தர் துறைமுகங்களான நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை, அழகன்குளம், காலப்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக பெரிப்ளுசு கூறுகிறார்.
- சுமார் கி.பி. 250 - சீன நாட்டு வரலாற்றியல் அறிஞர் யூ உவான் பாண்டியர் அரசாங்கத்தை பாண்யுவி எனக் குறித்தார். பாண்டிய மக்கள் சீனர்களைப் போலவே சிறிய உயரம் படைத்திருந்தனர் எனக் கூறியுள்ளார்.[21]
- சுமார் கி.பி. 1268-1310 – குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறிப்பு.[22] பாண்டியர்களுக்கும் ஏமன் நாட்டவர்க்கும் 1289ஆம் ஆண்டில் சிறந்த குதிரை வணிகம் நடந்ததாக இபின் பட்டுடா குறிப்பு.[23]
அசோகனின் கல்வெட்டுக்களில்
மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள். மௌரிய அரசன் பேரரசர் அசோகர் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.
மகாவம்சத்தில்
இலங்கையை ஆண்ட விஜயன் தனியாட்சி புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன் ஒருவனின் மகளை மணந்தான். அப்பாண்டிய மன்னனுக்கு ஆண்டுதோறும் பல பரிசுகளை அனுப்பினான் என்று மகாவம்சம் கூறுகின்றது.
சங்க காலப் பதிவுகள்
பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும்.வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.
பாண்டிய நாட்டில் பிற நாட்டவர் ஆட்சி
களப்பிரர் ஆட்சி
வடநாட்டில் பல்லவர்களால் அடித்துவிரட்டப்பட்ட களப்பிரர் கி.பி. (300-600) கன்னட நாடு வழியாக கொங்கு நாட்டிலும், சேர, சோழ, பாண்டி நாட்டிலும் புகுந்து பாண்டியர்களை அடக்கி ஆண்டனர். களப்பிரர்களைத் தொடர்ந்து வந்த பல்லவர் ஆட்சிக்காலமான கி.பி. 350 – 550 வரையிலும் பாண்டியப் பேரரசு பெரும் வீழ்ச்சியிலிருந்ததாகக் கருதப்படுகின்றது.ஆனாலும் கடுங்கோன் ஆட்சிக் காலத்தில் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.பல்லவர்களின் தாக்கமும் களப்பிரர்களை வீழ்த்தியது. இதன்பின்னர் இடைக்காலப் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.
சோழராட்சி
பாண்டிய நாட்டின் பெரும்பகுதிகள் கி.பி. 1020 முதல் 1070 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இராசராசன் மகனான இராசேந்திர சோழனின் மூன்று மகன்களான சுந்தரசோழ பாண்டியன், விக்கிரமசோழ பாண்டியன்,பராக்கிரம பாண்டியன் மூவரும் சோழ பாண்டியர் எனப் பட்டம்பெற்று பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சோழ மன்னர்களாவர். பாண்டிய நாட்டிற்கு இராசராச மண்டலம் எனப்பெயரிட்டு தங்கள் ஆட்சிக்கு முரண்பட்ட பாண்டியர்களை திறை செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்தனர்.
சுல்தானியர் ஆட்சி
கில்ஜி பேரரசின் மன்னன் மாலிக்காபூரிடம் பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியனால் தன் தம்பியான இரண்டாம் வீரபாண்டியனை வெல்ல உதவியினை நாடினான். இரண்டாம் வீரபாண்டியனை வெற்றி கொண்ட மாலிக்காபூர் சுந்தரபாண்டியனை அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சயாவுடீன் பார்னி , அமீர்குசுரு, வாசப் போன்றவர்களின் கூற்றுகள் படி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கோயில்களை இடித்து அங்கிருந்த பொன், பொருள்களைக் கொள்ளையிட்டு சிற்பங்கள் பலவற்றையும் சிதைப்பதற்குக் காரணமானான்[24]. மேலும் கொள்ளையிட்ட பொருள்களை டில்லிக்குக் கொண்டு சென்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தரபாண்டியன் மற்றும் இரண்டாம் வீரபாண்டியன் போன்றோரிடமிருந்து மாலிக்காபூர் 612 யானைகள், 20,000 குதிரைகள், 96,000 மணங்கு பொன், முத்து மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளினை எடுத்துச் சென்றான் என பார்னி என்பவன் குறித்துள்ளான்[25]. 1320களில் மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றி 1378ஆம் ஆண்டு வரை ஆண்டான். அவன் வழி வந்தவர்கள் நாயக்கர்களால் தோற்கடிக்கப்பட்டார்கள்.[26] 1330 ஆம் ஆண்டளவில் பாண்டிய நாட்டில் முகமதியர் ஆட்சி நுழைந்தது. டில்லி துக்ளக்கின் அதிகாரியாகத் திகழ்ந்த 'ஜலாலுதீன் அசன்ஷா' மதுரையினைக் கைப்பற்றி ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் அல்லாவுடீன் உடான்றி, குட்புதீன், நாசிருடீன், அதில்ஷா, பஃருடீன் முபாரக் ஷா, அல்லாவுதீன் சிக்கந்தர்ஷா போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் நாணயங்கள் வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் புதுக்கோட்டையில் உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இபின்படூடா என்பவரின் குறிப்பின் படி இம்மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள்,கலகங்கள் ஏற்பட்டன. கோயில் வழிபாடு,விழா இன்றி சீரழிந்தன. பாண்டிய நாட்டு மக்கள் துன்புற்றனர் என அவர் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முகமதியர் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள்:-
மன்னன் | ஆட்சிக்காலம் |
---|---|
மாறவர்மன் குலசேகர பாண்டியன் | கி.பி. 1314–1346 |
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் | கி.பி. 1315–1347 |
மாறவர்மன் வீரபாண்டியன் | கி.பி. 1334–1380 |
மாறவர்மன் பரக்கிரம பாண்டியன் | கி.பி. 1335–1352 |
இம்மன்னர்களது கல்வெட்டுகள் பாண்டிய நாடெங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் போசள மன்னனான மூன்றாம் வீரவல்லாள தேவனும் போர்க்களத்தில் இறந்தான் இச்செய்தியை விஜயநகர அரசனொருவன் அறிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராயர்களின் ஆட்சி
பாண்டியர் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சமயம் வாணாதிராயர்கள் பலர் இருந்தனர். புதுக்கோட்டை கோனாடு இருந்த பொழுது பிள்ளை குலசேகர வாணாதிராயன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான். இராமநாதபுரத்தில் கேரள சிங்கவள நாடு இருந்தது அங்கு வாணாதிராயன் என்பவன் ஆட்சி செய்தான். இவர்களின் பின்னர் பாண்டியர் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஸ்ரீவல்லிபுத்தூரில் 1453 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டில் "மகாபலி வாணதரையர் சீர்மையான மதுரை மண்டலம் " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் மதுராபுரி நாயகன், பாண்டிய குலாந்தகன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 1483 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டொன்றின்படி மாவலிவாணாதிராயர் பாண்டியருக்குத் திறை செலுத்தினர் எனக்குறிப்பிடும். பாண்டியர் வலிமை குன்றிய வேளை ராயர்கள் மதுரையினை ஆட்சி செய்துள்ளனர். புதுக்கோட்டை குடுமியான் மலைக் கல்வெட்டில் பாண்டியர் ராயரிடம் போரில் தோற்றமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராயர்களின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்தது பாண்டியர்களின் ஆட்சி இக்காலத்தில் இல்லாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
விஜய நகரப் பேரரசாட்சி
கி.பி. 1310 முதல் 1748 ஆம் ஆண்டு வரை தமிழகத்தினை விஜயநகரப் பேரரசு ஆண்டது.நாயக்க மன்னர்கள் அரசியல் அதிகாரிகளாக ஆட்சி புரிந்துள்ளனர்.இவர்கள் ஆட்சிக் காலங்களில் தமிழகத்தில் கோயில்கள்,மண்டபங்கள்,சிற்பக் கூடங்கள்,உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள் போன்றனவை சிறப்பம்சமாக விளங்கின.சேர, சோழ,பாண்டிய போன்ற பேரரசுகள் விஜய நகரப் பேரரசு காலத்தில் வீழ்ச்சியுற்றிருந்தன. பல பாண்டிய மன்னர்கள் குறுநில மன்னர்களாக இருந்து விஜய நகரப் பேரரசிடம் திறை செலுத்தியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள்.
பரக்கிரம பாண்டியன் எனற பெயரில் நாயக்கர் காலத்தில் மூன்று மன்னர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கி.பி. 1387 ஆம் ஆண்டளவில் பராக்கிரம பாண்டியன் திருக்குற்றாலத்தில் திருப்பணி புரிந்தான்.
- கி.பி. 1384–1415 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் பராக்கிரம பாண்டியன் என்ற பெயருடைய ஒன்னொருவன்.
- கி.பி. 1401–1434 வரை பராக்கிரம பாண்டியன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான்.
- சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்ற பெயர்கொண்ட ஒருவன் கி.பி. 1396 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றான் என கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
- திருப்புத்தூரி, குற்றாலம் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகளின் படி கி.பி. 1401 முதல் 1422 வரை சடையவர்மன் விக்கிரம பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் பாண்டிய நாட்டினை ஆண்ட உதிரி அரசர்களாவர். இவர்கள் ஆட்சிக் காலத்து தலைநகரங்கள் மற்றும் இவர்கள் பணிகள் செய்த போர்கள் போன்றவற்றின் தகவல்கள் கிடைக்காததும் குறிப்பிடத்தக்கது.
பாண்டிய நாட்டுக் குறுநில மன்னர்கள்
மானாபரணன், வீரகேரள பாண்டியன், சுந்தர பாண்டியன், விக்கிரம பாண்டியன்,வீரபாண்டியன் ஆகிய ஜந்து மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி இருந்த சமயம் சோழ மன்னன் இராசாதிராசனால் அடக்கி வைக்கப்பட்டனர். மானாபரணன் மற்றும் வீரகேரளன் ஆகியோர் இராசராசனிடம் போரிட்டுத் தோற்று இறந்தனர். சுந்தர பாண்டியன் போரில் தோற்று முல்லையூரில் ஒளிந்துகொண்டான். விக்கிரம பாண்டியன் ஈழ நாட்டிற்குத் தப்பி ஓடினான். வீரபாண்டியன் கி.பி. 1048 ஆம் ஆண்டளவில் கொல்லப்பட்டான். கோலார் மிண்டிக்கல் கல்வெட்டு மற்றும் இராசாதிராசன் திருக்களச் செப்பேடு போன்றனவற்றில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாண்டியர் ஆட்சி இயல்
நாட்டியல்
தமிழகத்தின் தென்பகுதியில் பாண்டிய நாடு அமைந்திருந்தது.மேற்கே சேர நாடும்,மலை நாடும்;கிழக்கே கடல்,வடக்கே சோழ நாடும் ,கொங்கு நாடும்;தெற்கே கடலும் குமரிமுனை இதன் எல்லையாகவும் இருந்தன.இன்றைய மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதியில் அமையப்பெற்றிருந்தது எனலாம்.சங்க காலத்தில் ஊர், கூற்றம், மண்டலம், நாடு என்ற பிரிவில் அமைந்திருந்தன.
“ | முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு | ” |
— (புறம்-110) |
“ | வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே | ” |
— (புறம்-242) |
என்ற புறப் பாடல்கள் ஊரும்,நாடும் எனக் கூறும். இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்ற தொடர்மொழி அமைப்புச் சான்றாக விளங்குகின்றது. ஊர்கள்,கூற்றங்கள்,வளநாடுகள்,மண்டலம் என்ற அமைப்பில் பிரிக்கப்பட்டிருந்தது.
பாண்டியர் காலத்து நாடுகளும் கூற்றங்களும் ஊர்கள் கூற்றம்,நாடுகளில் அமைந்தன.
இரணிய முட்டநாடு | குடநாடு | புறப்பறளைநாடு | ஆரிநாடு | களக்குடி நாடு | திருமல்லிநாடு |
தென்புறம்புநாடு | கருநிலக்குடிநாடு | வடபறம்புநாடு | அடலையூர்நாடு | பொங்கலூர்நாடு | திருமலைநாடு |
தென்கல்லகநாடு | தாழையூர்நாடு | செவ்விருக்கைநாடு | கீழ்ச்செம்பிநாடு | பூங்குடிநாடு | விடத்தலைச்செம்பிநாடு |
கீரனூர்நாடு | வெண்புலநாடு | களாந்திருக்கைநாடு | பருத்திக் குடிநாடு | அளநாடு | புறமலை நாடு |
துறையூர்நாடு | துருமாநாடு | வெண்பைக் குடிநாடு | இடைக்குளநாடு | நெச்சுரநாடு | கோட்டூர்நாடு |
சூரன்குடிநாடு | பாகனூர்க்கூற்றம் | ஆசூர்நாடு | தும்பூர்க்கூற்றம் | ஆண் மாநாடு | கீழ்வேம்பநாடு |
மேல்வேம்பநாடு | தென்வாரிநாடு | வடவாரிநாடு | குறுமாறைநாடு | குறுமலைநாடு | முள்ளிநாடு |
திருவழுதிநாடு | முரப்புநாடு | தென்களவழிநாடு | வானவன் நாடு | கீழ்களக்கூற்றம் | கானப்பேர்க்கூற்றம் |
கொழுவூர்க்கூற்றம் | முத்தூர்க்கூற்றம் | மிழலைக்கூற்றம் | மதுரோதயவளநாடு | வரகுண வள நாடு | கேளர சிங்கவளநாடு |
திருவழுதி வளநாடு | வல்லபவள நாடு | பராந்தகவள நாடு | அமிதகுண வளநாடு |
பாண்டியநாடு பிரிவுகள்[சான்று தேவை]
- அளநாடு தேனி சின்னமனூர் கம்பம் வட்டாரம்
- பொங்கலூர்கா நாடு, வைகாவூர் நாடு பழனி வட்டம்,
- அண்டநாடு ஒட்டன்சத்திரம் வட்டம்,
- ஆற்றூர்நாடு, அதம்ப நாடு திண்டுக்கல் வட்டம்,
- வடகல்லகநாடு, தென்கல்லகநாடு, பாகனூர்கூற்றம் ஆகியவை நிலக்கோட்டை வட்டம்
- பூம்பாறை நாடு கொடைக்கானல் வட்டம்,
- நெடுங்களநாடு வத்தலக்குண்டு வட்டம்,
- துவராபதிநாடு, புறமலை நாடு நத்தம் வட்டம்,
- கானாடு , திருமயம் வட்டாரம்
- கோனாடு புதுகோட்டை வட்டாரம்
- மிழலை நாடு ஆவுடையார்கோவில் வட்டாரம்
- பள்ளிநாடு வேடசந்தூர் வட்டம்ஆகிய பகுதிகளை குறிக்கிறது.
(நாடும் கூற்றமும் அடங்கியது வளநாடு) பாண்டியர்களின் இயற்பெயரும்,சிறப்புப் பெயரும் வளநாடு பெயராக அமைந்தன.
குடும்பவியல்
அரசன், அரசி, இளவரசன், பட்டத்தரசி என்ற முறையில் குடும்பம் அமைந்தது. பாண்டிய அரசன், வேந்தன் எனப்பட்டான். பட்டத்தரசி, பாண்டிமாதேவி எனப்பட்டாள். சில பாண்டிய அரசர்கள், பட்டத்தரசியை அன்றி பிற பெண்களையும் மணந்திருந்தனர். புராணங்களின் படி பெண்களும் முடிசூடி ஆட்சி நடத்தியதோடு போரும் செய்திருக்கின்றனர். அரசனின் மூத்த மகனே இளவரசு பட்டம் பெற இயலும். இதனால், மாற்றாந்தாய் மக்களுடன் பகைமை வருதலும் உண்டு. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மகன்கள் வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகிய பாண்டிய வேந்தர்களின் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தன் ஊழ்வினையால், கண்ணகி நீதி கேட்டதால் இறந்தான். அந்நேரம், இளவரசனாக கொற்கையில் இருந்த வெற்றுவேற்செழியன், மதுரைக்கு வந்து முடிசூடினான். ஐந்து பேர் ஒரே காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும் இருந்தது. ஆட்சியின் காரணமாக அண்ணன் தம்பி, தந்தை மகன் கருத்து வேறுபாடுகள் வந்தபோது, ஆட்சிக்காக தந்தையை மகன் கொன்ற ஒரு நிகழ்வு பிற்காலப் பாண்டியரின் வரலாற்றில் இருந்தது.[27]
அரசியல் ஆட்சி இயல்
பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அமைச்சர்கள்.அடுத்த நிலையில் அரசியல் அதிகாரிகள்,படைத் தலைவர்கள் இருந்தனர்.அரையர்,நாடுவகை செய்வோர்.வரியிலார்,புரவுவரித் திணைக்களத்தார்,திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.
1-அரையர் உள்நாட்டுப் பணி புரியும் நாட்டதிகாரிகள் ஆவார்கள்.இவர்கள்,நாட்டைச் சுற்றி வந்து,குடிமக்கள் குறை கேட்டு நீதி வழங்குவர்.
2-நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள நிலங்களில் அளந்து பணி செய்வர்.
3- வரியிலார் அனைத்து வகையிலும் ஊர் மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை கணக்கு வைப்பார்கள்.
4-புரவு வரித்திணைக் களத்தார் வட்டாட்சியர்போல் செயல்படுபவர்கள்.
பாண்டிய வேந்தர்கள் அரசியல் அதிகாரிகளின் பணியைப் பாராட்டி பட்டங்களினையும் அளித்தனர். அவை வருமாறு:-
அரையன் | பேரரையன் | விசையரையன் | தென்னவன் பிரமராயன் | தென்வன் தமிழவேள் | காவிரி |
ஏனாதி | பஞ்சவன் மாராயன் | பாண்டிய மூவேந்தவேளான் | செழிய தரையன் | பாண்டிப் பல்லவதரையன் | தொண்டைமான் |
பாண்டிய கொங்கராயன் | மாதவராயன் | வத்தவராயன் | குருகுலராயன் | காலிங்கராயன் |
காவிரி,ஏனாதி பட்டம் பெற்றவர்களுக்கு பொற்பூ, மோதிரம், இறையிலி நிலம் அளித்துக் கௌரவிப்பது பாண்டியர்களின் வழக்கமாகும்.
அரசின் வரி
பாண்டியர் காலத்தில் வரியை இறை என்றழைத்தனர்.இறை பெறுதல்முறை என்பது வழக்கத்திலிருந்துவந்தது.குடிகள் அரசனுக்கு நிலவரி கொடுத்தனர்.விளைநெல்,காசு, பொன் வரியாகக் கொடுத்தனர்.ஊர்த் தலைவர்கள் மக்களிடம் பெற்று அரசிடம் அளித்தனர்.தளியிறை,செக்கிறை,தட்டார்ப் பட்டம்,இடைவரி சான்று வரி,பாடிகாவல்,மனையிறை,உல்கு முதலான வரி முறைகள் இருந்தன.இறை,பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன.தட்டார்ப் பாட்டம் கம்மாளரின் வரியாகும்.நாடு காவலையே பாடி காவல் என்றழைக்கப்பெற்றது.ஊர்க்காவலிற்கு வாங்கிய வரியே இப்பெயர்பெற்றது.பாண்டிய அரசர்களுள் சில அரசர்களும் ஊர்க்காவலிற்குச் சென்றனர்.பொற்கைப்பாண்டியன் இதற்குச் சான்றாக விளங்குகின்றான்.வீட்டு வரியினை மனை இறை என்றழைத்தனர்.கலத்தினும்,காலினும் வரும் பொருள்களுக்கு வாங்கும் வரியே சுங்க வரி எனப்படும்.உல்குவின் பொருள் இதுவேயாகும்.
நில அளவியல்
ஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி விதிக்கப்பட்டது.பாண்டிய நாடு முழுவதும் அளக்கப்பட்டது.நாடு வகை செய்வோர் அளந்தனர்.நிலத்தினை அளக்கும் கோல் 'சுந்தர பாண்டியன் கோல்' என்ற பெயரைக் கொண்டிருந்தது. 24 அடி கொண்ட தடியாகும் இக்கோல்.குடிதாங்கிக் கோலும் அளவு கோலாக புழக்கத்தில் இருந்தது.நிலங்களை குழி,மா,வேலி என்று பெயரிட்டு அளந்தனர்.அளந்த நிலத்திற்கு எல்லைக் கல் நாட்டனர்.இக்கற்களே புள்ளடிக் கற்களாகும்.சிவன் கோயில்களிற்கு இடப்பட்ட நிலத்திற்கு திரிசூலக்கல் நடப்பட்டது.திருமால் கோயிலுக்கு இடப்பட்ட நிலத்திற்கு திருவாழிக்கல் நடப்பட்டது.நீர் நிலம் நன்செய் எனவும் மேட்டு நிலம் புன்செய் என அழைக்கப்பட்டது.நத்தம்,தோட்டம் என்ற வழக்கும் புழக்கத்தில் இருந்தது.
இறையிலி
இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை இறையிலி என அழைக்கப்பட்டது.சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி தேவதானம் என அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்கு திருவிடையாட்டம் என்று பெயர்.சைன, பௌத்த கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை பள்ளிச்சந்தம் என அழைக்கப்பட்டது.அந்தணர்களுக்கு வழங்கப்பட்டது பிரமதேயம்;பட்டவிருத்தி எனவும்,மடங்களுக்கு வழங்கப்பட்டது மடப்புறம் எனவும் புலவர்களுக்கு முற்றூட்டும்,சோதிடர்களுக்கு கணிமுற்றூட்டும் எனவும் கொடைகள் அழைக்கப்பட்டன.
அளவை இயல்
எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல் ஆகிய நான்கு அளவைகள் பாண்டியர் ஆட்சியிக் காலங்களில் புழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன.எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும்.பொன், வெள்ளி, கழஞ்சு, காணம் ஆகிய நிறை கற்களால் நிறுத்தனர்,சர்க்கரை, காய்கறிகள், புளி ஆகியவற்றை துலாம்,பலம் என்பவற்றால் நிறுத்தனர்.சேர் ,மற்றும் மணங்காலும் நிறுக்கப்பட்டன. நெல், அரிசி, உப்பு, நெய், பால், தயிர், மிளகு, சீரகம், கடுகு ஆகியன செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி போன்ற முகறும் கருவிகளால் அளக்கப்பட்டன்.
எடுத்தல் அளவை
- 10 கர்ணம் - 1 கழஞ்சு
- 100 பலம் - 1 துலாம்
முகத்தல் அளவை
- 5 செவிடு - ஒரு ஆழாக்கு
- 2 ஆழாக்கு - ஒரு உழக்கு
- 2 உழக்கு - ஒரு உரி
- 2 உரி - ஒரு நாழி
- 6 நாழி - ஒரு குறுணி
- 16 குறுணி - ஒரு கலம்
இவ்வாறான அளவு முறைகள் பாண்டிய நாட்டில் இருந்தன,சங்க காலம் முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இவ்வளவு முறை புழக்கத்தில் இருந்திருக்கின்றது.14 ஆம் நூற்றாண்டு முதல் புதிய அளவு முறைகள் வந்தன குறிப்பிடத்தக்கது.
நாணய இயல்
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. பொன், செம்பால் செய்யபட்ட காசுகள் புழக்கத்தில் இருந்தன.மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டென மதிக்கப்படும் முத்திரை காசுகள், கி.மு.3-2ஆம் நூற்றாண்டென மதிக்கப்பெறும் பெருவழுதி நாணயம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
சீமாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான்.இதற்குச் சான்றாக சிற்றண்ண வாசல் கல்வெட்டு விளங்குகின்றது.முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் "அவனிப சேகரன் கோளகை" என்ற பெயரில் வெளியிட்டான்.1253 ஆம் ஆண்டில் வீரபாண்டியன் "வாளால் வழி திறந்தான் குளிகை" என்ற பெயரில் நாணயத்தினை வெளியிட்டான்.காசு என்பது ஒரு கழஞ்சு எடை உடையது 10 பொன் கொண்டது ஒரு காசு 10 காணம் - 1 கழஞ்சு ஒரு காணம் 4 குன்றி 'காசும் பொன்னும் கலந்து தூவியும்' என்ற தொடர் இதனை உணர்த்துகின்றது.காணம்,கழஞ்சு,காசு,
ஊரவை
பாண்டியர் ஆட்சியில் ஊர் தோறும் ஊரவை இருந்துவந்தது.ஊராட்சியினை இது செயல்பட வைத்தது.குடவோலை முறையில் ஊர்த் தலைவரை தேர்ந்தெடுத்தனர்.சிற்றூர் பல சேர்ந்து கிராம சபை அமைத்தனர்.நிலமும், கல்வியும், மனையும்,அறநெறியும் உடையவர்கள் மட்டுமே ஊரவை உறுப்பினர்களாக முடுயும்.ஊர்களிற்குப் பொது மன்றங்கள் இருந்தன.அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் ஊரவை நடைபெற்றது.நீதி விசாரணைக்கு ஊரவையில் உட்கழகங்கள் இருந்தன.வாரியங்கள் என்ற பெயரில் இவை அமைந்தன. அவை பின்வருமாறு:-
- சம்வற் சரவாரியம் - நீதி வழங்கும்,அறநிலையங்களை கண்காணிக்கும்.
- ஏரிசவாரியம் - நீர் நிலை,பாசனம் கண்காணிப்பது.
- தோட்ட வாரியம் – நிலங்களை அளப்பது,கண் காணிப்பது.
- பொன் வாரியம் – நாணயங்களை வெளியிடுவது,கொடுப்பது.
- பஞ்சவாரியம் – குடிமக்களிடம் வரிபெற்று அரசுக்கு அளிக்கப்படுவது.
அவை உறுப்பினர் பெருமக்கள்,ஆளுங்கணக்கர் என்றழைக்கப்பட்டனர்.இவர்கள் ஓராண்டு ஊதியமின்றி பணிபுரிவர்.ஊர் மன்றங்களிலும்,கோயில் மண்டபங்களிலும் ஊரவை கூடும்.புதிய விதிகளை அமைக்கும் உரிமை ஊரவைக்கு இருந்தது. மருதனிள நாகனார்,
“ | கயிறு பிணிக் குழிசியோலை கொண்டமர் பொறிகண்டழிக்கு மாவணமாக்களின் | ” |
— (அகம் - 77) |
என்று (அகம்-77) அகப்பாட்டில் கூறியுள்ளார்.இவ்வரிகளில் கூறியபடி பாண்டியர் காலத்தில் குடவோலை முறை இருந்தது என்பதனை அறியலாம்.நெல்லையில் மானூரில் கல்வெட்டு ஊரவை உறுப்பினரின் தகுதி பற்றி குறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆவணக்களரி இயல்
பதிவு அலுவலகம் பாண்டியர் காலத்தில் ஆவணக்களரி என்றழைக்கப்பட்டது.ஒவ்வோர் ஊரிலும் எழுதப்பட்ட ஆவணங்களைக் காப்பிட ஆவணக்களரி இருந்தது.இதனை ஆவணக்களம் என்றழைத்து வந்திருக்கின்றனர். இப்பகுதிக்குப் பொதுவாக நிலம் விற்போர் வாங்குவோர் சென்று தம் நிலத்திற்கு உரிய விலை,பரப்பு,நான்கெல்லை குறிக்கப்படும்.விற்போர் உடன்பட்டு உறுதிமொழியில் கையொப்பம் இடவேண்டும்,ஆவணங்களை கோவில் சுவரில் பொறித்து வைப்பதும் உண்டு.ஆவணக்களரி மக்களின் உரிமைக்கும்,சொத்துக்கும் பாதுகாப்புத் தருவதாக அமைந்திருந்தன.மக்கள் பயன்கருதி பாண்டியர் ஆட்சி நடைபெற்ற அனைத்து ஊர்களிலும் இது செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.[28]
படை இயல்
யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, தேர்ப்படை போன்ற நால்வகைப் படைகளினையும் வைத்திருந்தனர் பாண்டியர்.கொற்கை, தொண்டி துறைமுகங்களில் வெளிநாட்டுக் குதிரைகள் ஆண்டுதோறும் வந்திறங்கியது.ஆண்டுக்கு பதினாராயிரம் குதிரைகள் வந்தன என 'வாசப்' கூறியுள்ளான்,மார்க்கோபோலோ "குதிரைகள் வாங்க மிகுதியான பொருளைச் செலவிடுகின்றனர்" என்று பாண்டியர்களைப் பற்றிக் குறித்துள்ளார்.வாட்போர்வல்ல பெரிய காலாட்படை இருந்தது பாண்டியர் ஆட்சிக்காலத்தில்."பெரும் படையோம்"எனக் கையெழுத்திடும் குழு பாண்டி நாட்டில் இருந்தது.'முனையெதிர் மோகர்' 'தென்னவன் ஆபத்துதவிகள்' போன்ற படைகளும் இருந்தன என கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
"கடி மதில் வாயிற் காவலிற் சிறந்த அடல்வாள் யவணர்"
சிலப்பதிகாரத்தில் வரும் இப்பாடல் வரியிலிருந்து உரோமாபுரிப் போர்ப் படை வீரர்கள் மதுரைக் கோட்டையைக் காத்திருந்தனர் என்று கூறுவதற்கிணைய அத்தகு வலிமையுடன் சிறப்புற்றிருந்தது பாண்டியர் படை என்பது குறிப்பிடத்தக்கது.
“ | முத்தமிழரசரிடமும் யானைப்படை மிகுதியாயிருந்தது. சோழவேந்தனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததாக ஒரு சீன வழிப்போக்கன் கூறியிருப்பதால், யானை இயல்பாகக் கூட்டங் கூட்டமாய் வாழும் குடமலைத் தொடரையுடைய சேரனிடத்தும் பாண்டியனிடத்தும், அவை எத்துணைப் பெருந்தொகையினவாய் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகித்துணர்ந்து கொள்ளலாம். | ” |
வணிகவியலும் தொழிலியலும்
- ஆதாரக் கட்டுரை - பாண்டியர் துறைமுகங்கள்
- பாண்டிய நாட்டில் கடைச்சங்க நாளிலேயே வணிகமும் தொழிலும் மிகச்சிறப்பாக இருந்தன.மதுரை, கொற்கை முதலான நகரங்களில் கிடைத்துள்ள உரோமாபுரி நாணயங்களே இதற்குச் சான்றாகும்.
- வெளிநாட்டு வணிகங்கள் சிறப்புற்றும் உள்நாட்டில் பண்டங்களை எடுத்துச் செல்வதற்கேற்ற பெருவழித் தடங்களும் இருந்தன.நாடு முழுதும் இச்சாலைகள் அமைந்திருந்தன.
- வணிகர்கள் கோவேறு கழுதை, மாட்டு வண்டிகளில் பண்டங்களை ஏற்றிச் சென்றனர்.வழியில் களவு போகாமல் இருக்க காவற்படைகள் இருந்தன.வணிகர்கள் கூட்டமாகச் செல்வதனை வணிகச்சாத்து என அழைத்தனர்.வணிகரில் சிறந்தோர் 'எட்டி' என்றழைக்கப்பட்டனர்.
- பாண்டி நாட்டு கொற்கைப் பெருந்துறையில் முத்துக்களும்,சங்குகளும் பெருவாரியாகக் கிடைத்தன.கொற்கை முத்து உலகெங்கும் சென்றதும் குறிப்பிடத்தக்கது.இதற்குச் சான்றாக
“ | மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் பெருந்துறை முத்து | ” |
— (அகம்-27) |
“ | பாண்டியன் - புகழ்மலி சிறப்பில் கொற்கை முன்துறை அவர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து | ” |
— (அகம்-201) |
இவ்விரு அகநானூற்றுப் பாடல்களும் கொற்கை முத்து பற்றிக் கூறுகின்றன.மேலும் மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப்படை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலும் இவ்வகைச்செய்திகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வகைத் தொழில்கள்
பாண்டிய நாட்டில் முத்துக் குளித்தல்,சங்கறுத்தல்,வளையல் செய்தல்,உப்பு விளைவித்தல்,நூல் நூற்றல்,ஆடை நெய்தல்,வேளாண்மை செய்தல்,ஆடு,மாடு மேய்த்தல் போன்ற பல தொழில்களும் செய்து வந்தனர்.மதுரையில் நுண்ணிய பருத்தி நூலினாலும்,எலி மயிரினாலும்,பட்டு நூலினாலும் ஆடைகள் நெய்யப்பட்டன எனச் சிலப்பதிகாரப் பாடல்வரிகளான இவ்வரி விளக்கும்.
“ | நூலினும்,மயிரினும்,நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூல் அடுக்கத்து நறும்படி செறிந்த அறுவை வீதியும் | ” |
— (சிலப்பதிகாரம் -ஊர்-205,207) |
முத்து, பவளம், மிளகு,பலவகை பட்டாடைகள் மேனாடுகளுக்கு அனுப்பப்பட்டன.மேனாடுகளிருந்து குதிரைகளும்,மது வகைகளும்,கண்ணாடிப் பொருள்களும் கொற்கைத் துறைமுகத்திற்கு வந்திறங்கின.சுங்க வரியினால் ஆண்டுதோறும் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தது.கப்பல்கள் திசைமாறாமல் இருக்க துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது.வெளிநாட்டு வணிகர்களும் யவனர்களும் (கிரேக்கர்களும்,உரோமர்களும்),சோனகரும் (அரேபியர்கள்),பாண்டிய நாட்டு மக்களுன் அன்புடன் பழகினர் என்பது குறிப்பிடத்தக்கது.வணிகத்திலும்,கைத்தொழிலிலும் சிறந்து விளங்கிற்று பாண்டிய நாடு.பண்டைக் காலத்தில் தமிழகத்தின் பாண்டி நாட்டில் தான் வணிகமும்,வெளிநாட்டார் தொடர்பும் சிறப்புற்று இருந்தது.
கல்வி இயல்
பாண்டிய நாடு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமையைப் பெற்றிருந்தது.புலமை நலம் சான்ற முடிமன்னர்களும் இருந்தனர்.ஆண், பெண் இருபாலரும் கல்வி கற்றனர்.கல்வியின் சிறப்பை நெடுஞ்செழியன் போல் யாரும் பாண்டியராட்சியில் கூறியதில்லை எனலாம் அதற்கு எடுத்துக்காட்டாக
“ | உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே! ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன்வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறுஅரசும் செல்லும்! | ” |
— (புறநானூறு) |
என்று புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்,
“ | பலர் புகழ்சிறப்பின் புலவர் பாடாது வளர்க என் நிலவரை | ” |
என்று புறப்பாட்டில் பாடியுள்ளார்.
“ | கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக! | ” |
என்றும்,
“ | கண்ணெனப் படுவது வாழும் உயிர்க்கு கல்வியே! | ” |
என்றும் வள்ளுவர் கூறினார்.இவை அரங்கேற்றமானது பாண்டியரின் தமிழ்ச்சங்கத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.உடன்கட்டை ஏறிய பாண்டிமாதேவி புறம்பாடிவளாவாள்.செல்வமும் ஒருங்கே பெற்ற இவள் பூத பாண்டியன் மனைவி பெருங்கோப் பெண்டு ஆவாள்.பல்சான்றீரே என்ற புறப்பாடல் (246) அவள் புலமை காட்டும்.
“ | நகுதக்கனரே நாடுமீக் கூறுநர் | ” |
— (புறம்-72) |
என்று பாடிய நெடுஞ்செழியன் கல்வியில் வல்லமை பெற்று விளங்கியிருந்தான்.அகநானூறு தொகுப்பித்த உக்கிரப்பெருவழுதி குறிஞ்சி, வருதம் பாடுவதில் வல்லவனாக விளங்கினான்.சங்க காலப் புலவர்களிலும் மேலாக கவிதை பாடிய பாண்டிய மன்னர்களும் ஆட்சி புரிந்தவர்கள் என்பதனை இவர்கள் மூலம் அறியலாம்.பாண்டியர்களும் மதுரைத் தமிழ்ச் சங்கமும் தலைச்சங்கம் தொடங்கி கடைச்சங்கம்வரை தமிழ் எழுச்சியும்,வளர்ச்சியும் பெற்றது.இன்றைய மதுரையில் பாண்டியர் கடைச்சங்கம் வைத்து தமிழை வளர்த்தனர்.
“ | கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந்தமிழ் | ” |
என்னும் பாடல் சான்றாகும். சிவனே பாண்டிய மன்னந்தான்,மீனாட்சியும் பாண்டியன் மகள் தான். "பாண்டிய நின் நாட்டுடைத்து நல்லதமிழ்" என்று ஔவையார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. "வியாத தமிழுடையான் பல்வேல் கடல்தானைப் பாண்டியன்" என யாப்பருங்கல விருத்தி (229) கூறுகின்றது.
“ | தமிழ்நிலை பெற்ற தாங்கருமரபின் மகிழ்நனை மறுகின் மதுரை | ” |
— (சிறுபா-66-67) |
என்று பாடியுள்ளார்.
“ | தமிழ் வையத் தண்ணம் புனல் | ” |
— (பரிபாடல் - 6 - வரி - 60) |
என்று பரிபாடல் (பாடல்-6-வரி-60) கூறுகின்றது. செந்தமிழ்நாடு என்று பாண்டிய நாட்டை மட்டுமே இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பர் ஆகியோர் கூறியுள்ளனர்.தொல்காப்பியம், திருக்குறள் அரங்கேற்றப்பட்டது இங்கென்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்த்தொண்டெனில் அது பாண்டி மண்டலந்தானாகவிருந்தது.பாலாசிருயர்,கணக்காயர் தமிழ் கற்பித்தனர்.ஆசிரியர் புலவராகவும் இருந்தனர்.குருவே தெய்வம் என்றனர்.பாண்டிய நாட்டில் குலவேறுபாடு இன்றி கல்வி கற்றனர்.கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது பாண்டிய நாட்டில் நிலவியது.
ஆன்மீக இயல்
உமையாள் மதுரை மீனாட்சியாக வந்து பாண்டியன் மகளாகப் பிறந்தாள் என்றும் பின்னர் சோமசுந்தரப் பெருமானை மணந்தாள் என்றும் பாண்டி நாட்டை சோமசுந்தரர் ஆண்டார் என்று புராணங்கள் கூறும்.பாண்டிய வரலாற்றினைக் கூறும் இலக்கிய நூற்களிலும் இவ்வாறு ஆட்சி செய்தார்கள் எனச் சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.பாண்டியர் ஆட்சியில் சைவ சமயமே தழைத்தோங்கியிருந்தது. ஆனாலும் வைணவம், சமணம், புத்த மதம் போன்ற பிற மதங்களும் இருந்தன.சிவன் கோயிலில் விண்ணகரங்கள், அருகன் கோட்டங்கள், புத்த பள்ளிகள் போன்றனவையும் அடங்கியிருந்தன.அனைத்து மதத்திற்கும் மதிப்பளிக்கப்பட்டிருந்தன. கோயில்களுக்கு நிபந்தங்கள்,இறையிலிகள் விடப்பட்டன.பாண்டிய அரசர்கள்,அமைச்சர்,அதிகாரிகள், மேற்பார்வையில் கோயில்கள் கட்டப்பெற்றன.சங்க காலத்தில் சமயப் பூசல்கள் தோற்றம் பெறவில்லை.17 ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில் சமயப் பூசல்கள் தோற்றம் பெற்றன.மன்னர்களும்,அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் பிறந்த நாளில் கோயில்களில் விழா எடுத்து மகிழ்ந்தனர்.அதற்கென நிலம் அளிக்கப்பட்டன.தேவாரம், திருவாய் மொழிகள் போன்றன ஓதப்பட்டன.இயல், இசை, நடனம், கூத்து முதலியன நடைபெற்றன.செங்கற் கோயில்கள், கற்றளிகள்,செப்புத் திருமேனிகள் கல்படிமங்கள்,அமைக்கப்பட்டு அணிகலன்களை வழிபாடு செய்யத் தானம் செய்தனர்.கோயில் வழிபாட்டுத் தலமாக அன்றி பொருள், பணம் சேர்த்து வைக்கும் இடமாகவும் விளங்கியது.கோயிலின் பொதுப்பணம் மக்களுக்குக் கடனாகக் கொடுக்கப்பட்டது.தினமும் கோயில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.புத்தகசாலைகள் கோயில்களில் அமைக்கப்பெற்றிருந்தன.கோயில் காரியங்களை ஊர் அவையோரும் அதிகாரிகளும் செய்தனர்.கோயில் மற்றும் அறநிலையங்கள் திட்டப்படி நடக்கின்றனவா என கவனிக்கப்பட்டன.தவறுகள் இழைப்போர் தண்டனையும் பெற்றனர்.கோயிலில் அமைந்த கல்வெட்டுக்கள் வரலாற்று ஏடுகளாக அமைந்திருந்தன.கோயில் புதுப்பிக்கும் சமயம் படியெடுத்துவைத்துப் புதுப்பித்தனர்.மீண்டும் அவை பொறிக்கப்பட்டன.
பாண்டியர் பழக்க வழக்கங்கள்
மன்னன் மகன்,பெயரன் என்ற முறையில் முடிசூடினர்.சிங்காதனங்களுக்கு மழவராயன் காலிங்கராயன் முனையதரையன்,தமிழ்ப் பல்லவராயன் என்று பெயரிடப்பட்டனர்.அரசன் பிறப்பிக்கும் ஆணை திருமுகம்,ஓலை மூலம் மக்களுக்கு அனுப்பப்படும்.அரசர்கள் பிறந்த நாள் விழா நடத்தினர்.போரில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதிரப்பட்டி என்ற இறையிலி நிலம் அளிக்கப்பட்டது.பாடிய புலவர்களுக்குப் பொன்னும், பொருளும் பரிசாக அளிக்கப்பட்டன.நீதி தவறாது செங்கோல் முறை கோடாது வழங்கப்பட்டன.நீதியை நிலைநாட்ட கை குறைத்தும்,உயிர் கொடுத்தும் காத்தனர் சில பாண்டியர்கள்.நீதி காக்க பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் கொடுத்தான்.பொற்கைப் பாண்டியன் நீதிக்குத் தன் கையை வெட்டிக் கொண்டான்.தினமும் மக்கள் குறைகேட்கும் வழக்கம் இருந்தது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும்,பாராட்டும் செய்யப்பட்டன.காசுகள் வெளியிடப்பட்டன.பிறவிப் பெருங்கடல் நீந்த நாளும் இறைவனை வழிபட்டனர்.அறம் ஈகையாக,நீதியாகக் காக்கப்பட்டது."மழை வளம் சிறக்க!மண்ணுயிர் வாழ்க! மன்னனும் வாழ்க!" என்று வாழ்த்தும் வழக்கமும் இருந்து வந்தது.இடுவதும்,சுடுவதும் இறந்தோர்க்கு உண்டு!முன்னோடு வழிபடும் வடிக்கமும் இருந்திருந்தன. பாண்டியர் பண்பாட்டில்
“ | பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் | ” |
என்று இலக்கணத்தினைக் கூறும் கலித்தொகை. பாண்டிய மன்னர்கள் பண்புடையவர்களாகவிருந்தனர் இதனை விளக்கும் சான்றாக
“ | பண்பட்டமென்மொழிப் பைந்தொடி மகளிர் | ” |
எனச் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“ | உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் | ” |
எனப் பாண்டிய மன்னன் ஒருவன் கூறுகின்றான்.இப்பாடல் வரிகளானது உதவி செய்தல் ஈதல் அறஞ்செய்தல் எல்லாம் பண்பாட்டின் கூறுகள் என விளக்குகின்றது.
“ | அவரவர் வேண்டிய அவரவர்க்கு அருளியவன் | ” |
பராக்கிரம பாண்டியன் என அவன் மெய்க்கீர்த்திகள் கூறும் அளவிற்குப் பண்புடையவனாக இருந்தான்.இவ்வாறான பல நல்ல பண்புகளையுடைவர்களாக பல பாண்டிய மன்னர்கள் திகழ்ந்திருந்தனர்.
பாண்டியர் ஆட்சியில் சிறந்து விளங்கியோர்[எவ்வாறு?]
எயினன் | கணபதி | சாத்தஞ்சாத்தன் | தீரகரன் மூர்த்தி எயினன் | சங்கரன் சீதரன் | காரி |
கண்டன் காங்கேயன் | திருக்கானப்பேருடையான் | குருகுலத்தரையன் | புள்ளன் | எட்டிச்சாத்தன் |
மேலும் காணலாம்
- பாண்டிய அரசர் காலநிரல்
- உச்சங்கிப் பாண்டியர்
- தமிழக வரலாறு
- பண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை
- பண்டைய தமிழகத்தின் தொழில்கள்
- தமிழகம்
- தமிழ் மன்னர்களின் பட்டியல்
- இந்திய-உரோம வர்த்தக உறவுகள்
மேற்கோள்கள்
- ↑ "Pandya dynasty (Indian dynasty) – Britannica Online Encyclopedia". Britannica.com. பார்த்த நாள் 30 July 2012.
- ↑ Kishore, Kavita (15 October 2010). "States / Tamil Nadu: Porunthal excavations prove existence of Indian scripts in 5th century BC: expert". தி இந்து. Archived from the original on 14 பிப்ரவரி 2012. பார்த்த நாள்: 30 July 2012.
- ↑ "Government Museum Chennai". Chennaimuseum.org. பார்த்த நாள் 30 July 2012.
- ↑ "History – Ancient History in depth: The Story of India". BBC. 17 February 2011. பார்த்த நாள்: 30 July 2012.
- ↑ கே.ஆர். ஏ. நரசய்யா. ஆலவாய்.
- ↑ பாண்டியன் என்பது பண்டு என்னும் சொல்லினின்று திரிந்ததென்றும், பழைமையானவன் என்னும் பொருள் கொண்டதென்றும், சொல்வதுண்டு., தமிழ் வரலாறு, மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பதிப்பாசிரியர், புலவர் அ.நக்கீரன்
- ↑ "மாண்புடைய மங்கையர்".
- ↑ "கோப்பெருந்தேவியர்".
- ↑ "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 – Published by- P. R. Rama Iyer & co-madaras
- ↑ புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 279 -
- ↑ புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 280-
- ↑ இராமாயணம், கிசுகிந்தா காண்டம் (4-41-18), சீதையை நோக்கி தென்திசையை தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம் சுக்ரீவன் கூறியது,
தடோ ஹேமாயம் திவ்யம் முக்த மனி விபுசிடம் யுக்தம் கவாடம் பாண்டியானாம் கடா த்ரக்சுயத வானராம்
தமிழ் மொழிபெயர்ப்பு
நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும் போது தங்கம், முத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட ஒரு நகரத்தை காண்பீர்கள்
அந்த பேரரசான பாண்டியனின் கபாடபுரத்திலும் சீதையை தேடிப்பாருங்கள் - ↑ "The Madras journal of literature and science, Volume 6" பப 211-215. By Madras Literary Society and Auxiliary of the Royal Asiatic Society, Royal Asiatic Society of Great Britain and Ireland. பார்த்த நாள் சூலை 28, 2012.
- ↑ மு.இராமசாமி (1976). "நன்குமடி-நற்குடி வேளாளர் வரலாறு". ம.தி.தா. இந்துக்கல்லூரி ஆண்டு மலர். doi:12 சூலை 2012.
- ↑ திருவிளையாடல் புராணம், திருமணப் படலம்
- ↑ "Indian Folklore Research Journal". பார்த்த நாள் 31 December 2015.
- ↑ Keay, John (2000) [2001]. India: A history. India: Grove Press. ISBN 0-8021-3797-0.
- ↑ "Age of the Nandas and Mauryas". பார்த்த நாள் 31 December 2015.
- ↑ 19.019.1 The cyclopædia of India and of Eastern and Southern Asia By Edward Balfour
- ↑ Pliny (77 AD) and Ptolemy (140 AD) wrote of "Madura
- ↑ Hill, John E. 2004. The Peoples of the West from the Weilüe 魏略 by Yu Huan 魚豢: A Third Century Chinese Account Composed between 239 and 265 CE. Draft annotated English translation
- ↑ "findthedata.org - findthedata Resources and Information.". ww1.findthedata.org. மூல முகவரியிலிருந்து 2020-11-07 அன்று பரணிடப்பட்டது.
- ↑ அல்பருனி, மார்க்கோபோலோ, இபின்தூதா (1976). தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாடினர் குறிப்புகள். சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம். பக். 215 – 217, (265, 294), (265-282, 294-296).
- ↑ தமிழர் நாகரிகமும் பண்பாடும், டாக்டர் அ.தட்சிணாமூர்த்தி, பக்கம்-448, மறுபதிப்பு, சூலை 2008, தமிழ் பண்பாட்டில் இசுலாம் சமயம்
- ↑ Keay, J. India, 2001, Grove Press; ISBN 0-8021-3797-0
- ↑ அ.கி. பரந்தாமனார், மதுரை நாயக்கர் வரலாறு
- ↑ முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் அவன் மகனால் கொல்லப்பட்டான் என கருதப்படுகிறது.
- ↑ "பாண்டியன் தமிழ் பேரரசன் - Tamilar History (தமிழர் வரலாறு)". பார்த்த நாள் 31 December 2015.
- ↑ பழந்தமிழாட்சி, மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பக்கம் - 42
உசாத்துணை
- என்.கே வேலன், பாண்டியர் ஆட்சி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1979.
- தே. ப. சின்னசாமி,பெருமைமிகு பாண்டியர்களின் வீர வரலாறு, 2001.
No comments:
Post a Comment