முடத்திருமாறன்
முடத்திருமாறன் என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் கடற்கோளுக்குப் முன் வாழ்ந்தவன். இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் தமிழகத்தின் வடக்கே சென்று மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் தமிழ்ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய நற்றிணையில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிக்கோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை.
- குறிப்பு
- கொல்லிமலைக் குட்டுவனைத் தன் பாடலில் குறிப்பிடும் இவன் கடைச்சங்க காலத்தவன். மேலே தரப்பட்டுள்ள செய்தியில், இறையனார் களவியலுரை அடிப்படையில் காட்டப்பட்டுள்ள முடத்திருமாறன் இவன் காலத்துக்கு முந்தியவன்.
இவனது பாடல்கள் சொல்லும் செய்தி
நற்றிணை 105[தொகு]
இவன் இந்தப் பாடலில் குட்டுவன் என்னும் சேர மன்னனின் குடவரையைக் குறிப்பிடுகிறான்.
குட்டுவன் குடவரை[தொகு]
குட்டுவன் குடவரைச் சுனையில் பூத்த குவளைப் பூவைச் சூடித் தலைவியின் கூந்தல் மணக்குமாம். குடமலை என்றால் மேலைமலைத்தொடர். குடவரை என்றால் கொல்லிமலை.
பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவன் பாலைநிலத்து இடைவழியில் தன் காதலி தன் பிரிவால் படும் முன்பத்தை எண்ணுகிறான். கலங்குகிறான்.
அவன் சென்ற பாலைவழி[தொகு]
இலவமரத்து முள்ளைப் பற்றி ஏறிய கொடி, உலர்ந்து போனதை, கொடிய காற்று வீசி அதிரச் செய்யுமாம். அந்த வழி மூங்கில் காடுகள் நிறைந்ததாம். விரைந்து நடக்கும் யானைக் கூட்டமே இந்த வழியில் நடக்கும்போது துன்புறுமாம். நீரோ, நிழலோ இல்லையாம். (இப்படிப்பட்ட வழியில் இன்னலுறும்போது தலைவன் தன் தலைவியை நினைக்கிறான்)
நற்றிணை 228[தொகு]
தலைவிக்காகக் காத்திருக்கும் தலைவன் காதில் விழுமாறு தோழி தலைவியிடம் சொல்கிறாள்.
அவன் தன் இன்பத்தை மட்டுமே நினைக்கிறான். நம்மீது அவனுக்கு அருள் இல்லை. இருந்தால் அவன் நம்மைத் துன்புறச் செய்வானா?
அவன் வரும் வழியில் உள்ள இடையூறுகளை நினைக்கும்போது நமக்குத் துன்பம். மழை கொட்டித் தீர்த்த நள்ளிரவில் வருகிறான். கண்ணே தூர்ந்துபோகும் நள்ளிருளில் வருகிறான்.
கானவன் எய்த அம்பு பட்டு வெறிகோண்ட யானை எழுப்பும் ஒலி காதில் விழாதபடி அருவி ஒலிக்கும் நாட்டை உடையவன் அவன். (நம் சொல் அவன் காதில் விழுமா? என்பது தோழி சொல்லும் உள்ளுறை|உட்கருத்து).
பசும்பூண் பாண்டியன்
பசும்பூண் பாண்டியன் என்பவன் சங்ககாலப் பாண்டிய மன்னன்.
பூண் என்பது அரசர்கள் மார்பில் அணியும் கவச அணி. பசும்பூண் என்பது பூண் வகைகளில் ஒன்று. பசும்பூண் பாண்டியனின் படைத்தலைவன் அதிகன். வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த வாட்போரில் கொங்கர் படை இவனைக் கொன்று ஆரவாரம் செய்தது.[1]
பசும்பூண் பாண்டியன் யார்[தொகு]
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே பசும்பூண் பாண்டியன் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.[2][3]
பசும்பூண் பாண்டியன் [4], பசும்பூண் செழியன் [5] என்னும் தொடர்களை ஒப்புநோக்கி இவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே எனத் தெளியலாம்.[6]
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ பரணர் – குறுந்தொகை 393
- ↑ முனைவர் வ. குருநாதன் (2001, திருவள்ளுவர் ஆண்டு 2032). சங்ககால அரச வரலாறு. தஞ்சாவூர் - 613005: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம். பக். 162 - 177.
- ↑ மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். பக். (186 - 188)/232.
- ↑ அகம் 162, 231, 253, 338 குறுந்தொகை 393
- ↑ புறநானூறு 206
- ↑
- தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் - பசும்பூண் பெயருடன் பாண்டியர்களை சங்க இலக்கியங்களில் ஐந்து பாடல்களும் (அகம் 162, 231, 253, 338 குறு 393) தொல்காப்பிய பொருளதிகாரக் களவியலுக்கு நச்சினார்க்கினியார் உரையும் (நூற்பா 11), பசும்பூண் வழுதி என்னும் பெயருடன் நக்கீரர் பாடலிலும் குறிப்புகள் உண்டு. தலையாலங்கானத்துச் செழியன் இளமையிலேயே இவ்வெற்றியை பெற்றதால் அவனுக்கு பசும்பூண் பாண்டியன் என பெயர் அமைந்திருக்கலாம்.
- மேலும் தலையாலங்கானத்துச் செழியனை பாடிய இடைக்குன்றூர் கிழார் இவனை பசும்பூண் செழியன் எனப் பாடியுள்ளார். தலையாலங்கானத்துச் செழியனைப் பற்றி பல பாடல்கள் இயற்றிய நக்கீரர் இவனை பசும்பூண் பாண்டியன் (அகம் 253), பசும்பூண் வழுதி (நற் 358) என்றும் பாடியுள்ளார். நக்கீரர் தந்தையான மதுரை கணக்காயனார் (அகம் 253), பரணர் (அகம் 162, குறு 393) மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் (அகம் 231) இவனை பசும்பூண் பாண்டியன் எனப் பாடியுள்ளனர்.
- மேற்கண்டவற்றிலும் பரணர் செழியன் பெயரைக் குறித்து இவன் கூடற்பறந்தலை போரில் பெற்ற வெற்றியை பாடியதால் பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் முனைவர் வ. குருநாதன்..
- பசும்பூண் பாண்டியன் என்னும் அடைமொழியைக் கொண்டு மட்டும் இவனை வேறு மன்னன் என்பது கூடாது எனவும் மதுரையை இவன் சிறப்பாக ஆட்சி செய்தும் இவனைப் பற்றி புலவர்கள் புறப்பாடல்கள் பாடவில்லை என்றும் எனவே பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் மயிலை சீனி. வேங்கட சாமி.
- மேலும் பாண்டிய நாட்டின் அறியனை கைப்பற்றவே பசும்ப்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் போர் புரிந்ததால் பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் மயிலை சீனி. வேங்கட சாமி. (அகம் 231)
பொற்கைப் பாண்டியன்
பொற்கைப் பாண்டியன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான்.
பொற்கை பெற்ற வரலாறு[தொகு]
பழமொழி நானூறு பாடல் ஒன்று பொற்கைப் பாண்டியன் வரலாற்றைக் குறிப்பிடுகிறது. 102.[1]
மதுரை நான்மாடக்கூடல் நகராக இருந்த சமயம். இரவு நேரங்களில் அரசன் காவல் பொருட்டு வீதி வலம் வருதல் உண்டு ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்துகொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒரு வீட்டினுள் பேச்சுக் குரல் கேட்டது. பாண்டியன் உற்றுக் கேட்ட பொழுது கீரந்தை என்ற வேதியன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் "வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்கின்றேன்" எனவும் அவனது மனைவி அச்சமாக உள்ளது திருடர் பயம் உண்டு எனவும் பதிலளித்தாள். வேதியனும் நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும் அஞ்சாதே எனக்கூறிச் சென்றான். இவ்வுரையாடலைக் கேட்ட பாண்டியன் மனம் மகிழ்ந்தது. தனது நாட்டு மக்கள் தன்னிடம் உள்ள பற்றுதலை நினைந்து வியந்தான். அவனும் அத்தெருவினை நாளும் தவறாது காவல் புரிந்தான். ஒரு நாள் இரவு அவ்வேதியன் வீட்டில் பேச்சுக் கேட்டது. ஐயமுற்ற பாண்டியன் கதவைத் தட்டினான். வேதியன் தான் வந்துள்ளதை அறிந்தால் அவன் மனைவி மீது சந்தேகப்படுவானே என்று எண்ணி அவ்வீதியில் அமைந்திருந்த அனைத்து வீட்டுக் கதவுகளினையும் தட்டினான் பாண்டியன்.
மறுநாள் அரசவையில் அத்தெரு மக்கள் முறையிட்டனர். அமைச்சர், மடைத்தலைவர், புலவர் அனைவரும் அமர்ந்திருந்தனர். எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிய திருடன் கையை வெட்ட வேண்டும் என்றும் கூறினர் அம்மக்கள். அரசனும் வாளொன்றைக் கொண்டு வரச்சொல்லி தன் கையையே வெட்டிக் கொண்டான். வியந்த அனைவரிடமும் தானே கதவைத் தட்டியதாகக் கூறியதனைக் கேட்டு மக்கள் வியந்து நின்றனர். பாண்டியனும் பொற்கை ஒன்றினை வைத்துக் கொண்டான் அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என்ற பெயரைப் பெற்றான் அப்பாண்டிய மன்னன். இவ்வாறு சிலப்பதிகாரத்தில் கண்ணகியிடம் தெய்வம் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. [2]
குணநாற்பது என்னும் நூலிலுள்ள பாடல் ஒன்று பொற்கைப்பாண்டியன் வரலாற்றைக் குறிப்பிடுகிறது. [3]
அடிக்குறிப்பு[தொகு]
- ↑
‘எனக்குத் தகவன்றால்’ என்பதே நோக்கித்
தனக்குக் கரியாவான் தானாய், தவற்றை
நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் காணார்
எனச்செய்யார் மாணா வினை. - ↑
உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி,
புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்
“அரைச வேலி அல்லது யாவதும்
புரை தீர் வேலி இல்” என மொழிந்து,
மன்றத்து இருத்திச் சென்றீர்: அவ்வழி
இன்று அவ் வேலி காவாதோ?, என,
செவிச் சூட்டு ஆணியின், புகை அழல் பொத்தி,
நெஞ்சம் சுடுதலின், அஞ்சி, நடுக்குற்று,
வச்சிரத் தடக் கை அமரர் கோமான்
உச்சிப் பொன் முடி ஒளி வளை உடைத்த கை
குறைத்த செங்கோல், குறையாக் கொற்றத்து,
இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை - சிலப்பதிகாரம் கட்டுரைக்காதை - ↑
நாடுவளங் கொண்டு புகழ்நடுதல் வேண்டித்தன்
ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர் பாண்டியன்
கொற்கைஅம் பெருந்துறை குனிதிரை தொகுத்த
விளங்குமுத்து உறைக்கும் வெண்பல்
பன்மாண் சாயல் பரதவர் மகட்கே.
இளம் பெருவழுதி
இளம் பெருவழுதி என்னும் சங்க காலத்து அரசன் கடற்போரிலோ, கடற்கோளிலோ மாய்ந்திருக்க வேண்டும். இவனை "கடலுள் மாய்ந்த" என்னும் அடைமொழியுடன் அழைப்பர். இவன் தனக்கென வாழாது பிறற்குரியனாய் இருந்தான் எனவும், ஈகை இரக்கம் போன்ற நற்குணங்கள் பெற்றாவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவன் திருமாலிடம் பேரன்புடையவனாக இருந்தான் எனவும் தெரிகின்றது. இளம்பெரு வழுதி சங்ககாலப் புலவர்களில் ஒருவனாகவும் திகழ்ந்தான். இவர் பெயரில் 2 பாடல்கள் உள்ளன.புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் வேறு, பரிபாடல் நூலிலுள்ள பாடலைப் பாடியவர் வேறு என்பது அறிஞர்கள் கருத்து. பாடலின் பொருளமைதியே இதற்குக் காரணம்.
புறநானூறு 182[தொகு]
பாடல்[தொகு]
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கு என முயலா நோன் தாள்
பிறர்க்கு என முயலுயர் உண்மை யானே.
பாடல் தரும் செய்தி[தொகு]
- இந்திரர் அமிழ்தம் = தேவாமிர்தம், சாவா மருந்து (கட்டுக்கதை நம்பிக்கை)
அமிழ்தம் பெறினும் பகிர்ந்து உண்ணுபவர், சினம் கொள்ளாதவர், தூங்காமல், அஞ்சாமல் உழைத்துப் புகழுக்காக உயிரையும் தருபவர், உலகையே கூலியாகப் பெறுவதாயினும் சான்றோர் பழிக்கும் செயலைச் செய்யாதவர், முயற்சியைப் பிறர் நலனுக்கு ஆக்குவோர் ஆகிய இவர்கள் வாழ்வதால்தான் உலகம் வாழ்கிறது.
பரிபாடல் 15[தொகு]
செய்தி[தொகு]
- திருமாலிருஞ்சோலை = இருங்குன்று = பெரும்பெயர் இருவரை = கேழ் இருங்குன்று (அழகர் மலை)
அழகர் மலைத் திருமாலை வழிபடுமாறு இந்தப் பாடல் கூறுகிறது. இந்தத் திருமாலின் பெருமை இப்பாடலில் விரிவாகப் பேசப்படுகிறது.
66 அடிகள் கொண்ட இந்தப் பாடலுக்கு மருத்துவன் நல்லச்சுதன் என்பவர் இசை அமைத்து நோதிறம் என்னும் தமிழ்ப்பண்ணால் பாடியுள்ளார்.
மதிவாணன்
அறிவுடை நம்பி
அறிவுடை நம்பி பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். கடைச்சங்க காலப் பாண்டிய மன்னனான இவன் சிறந்த கல்வியறிவு மிக்கவனாகவும் கேள்விச் செல்வம், பொருட்செல்வம் உடையவனாகவும், கொடை வள்ளலாகவும், செந்தமிழ்ப் புலமைமிக்கவனாகவும், அறிஞர் பலர் போற்றுதற்கேற்ற புகழ் மிக்கவனாகவும் திகழ்ந்திருந்தான். இவன் காலத்தில் பிசிராந்தையார் மற்றும் கோப்பெருஞ்சோழன் போன்றவர்கள் வாழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைப் பேறு, இம்மை, மறுமை இன்பம் நல்கும் என்பவன் அறிவுடை நம்பி. இம்மன்னனைப் பற்றி புறம்-188,அகம்-28,குறுந்தொகை-230, நற்றிணை-15 போன்ற பாடல்களில் பாடப்பட்டுள்ள குறிப்புகள் வரலாற்றுச் சிறப்புடையன.[1]
புலவர் அறிவுடை நம்பி[தொகு]
புறநானூறு 188[தொகு]
“ | படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறு கை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே ! | ” |
— (புறம்-188) |
"எலாச் செல்வங்களையும் பெற்று செல்வனாக இருந்து பயனில்லை! பலரோடு விருந்துண்டு உறவாடுதலில் பயனில்லை! வீட்டில் இங்கும் அங்குமாக நடைபயிலும் குழந்தை கையை நீட்டும்; கலத்துணவை தரையில் தள்ளும். பிசைந்து வாயிலிட்டு,நெய்யுணவை உடலில் படுமாறு சிதறிவிடும். இவ்வாறு சிறுகுறும்பு செய்யும் மக்களை இல்லாதவர்க்கு வாழ்நாள் பயனற்றது,வீடு பேறும் இல்லையாம்".
அகநானூறு 28[தொகு]
அறிவுடை நம்பி பாடியது
தலைவன் வீட்டுப் பக்கத்தில் காத்திருக்கிறான். தினைப்புனம் காக்கச் செல்வோம் என்று தோழி தலைவியை அழைப்பதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
'நாம் செல்லாவிட்டால் அன்னை நம்மைக் கிளியோட்டத் தெரியாதவர் என்று வீட்டிலேயே வைத்துவிடுவாள். உன்னைத் தழுவிய அவர் மார்பு வேறொருத்திக்கு ஆகிவிடக் கூடும்' என்கிறாள்.
குறுந்தொகை 230[தொகு]
அறிவுடை நம்பி பாடியது
நான் என் பேதைமையால் அவனை நோகச் செய்துவிட்டேனோ? அவன் திருமணத்தைப் பற்றி நினைக்காமலேயே இருக்கிறானே! - என்கிறாள் தலைவி.
நற்றிணை 15[தொகு]
அறிவுடை நம்பி பாடியது
இதில் உள்ள அரிய உவமைகள்
- அன்னம் தாமரையை நுகர்வது போல அவன் அவளை நுகர்ந்தான்.
- கற்புக்கரசி ஒருத்தியின் குழந்தையைப் பேய் வாங்கிக்கொண்டது போல அவன் அவளது நாணத்தை வாங்கிக்கொண்டான்.
அரசன் அறிவுடை நம்பியிடம் பிசிராந்தையார்[தொகு]
அறிவுடை நம்பியிடம் சென்ற பிசிராந்தையார் அரசன் சிறப்படைய இப்பாடல் வரிகளினைப் பாடினார்.
“ | காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே மாநிறைவு இல்லதும் பல்நாட்டு ஆகும் நூறுசெறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே கோடியாத்து நாடு பெரிது நந்தும் மெல்லியன் கிழவன் ஆகி,வைகலும் வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம் போல தானும் உண்ணான் உலகமும் கெடுமே ! | ” |
— (புறம்-184) |
இப்பாடல் வரிகள் மூலம் பிசிராந்தையார் "அரசே! நெல்லை அறுத்து யானைக்கு உணவு செய்து இட்டால் பலநாட்கு உணவாகும். யானையை நெல்வயலில் விட்டால் காலால் மிதித்துச் சிதைப்பது மிகையாகும். அதுபோல அறிவுடைய அரசானவனே குடிமக்களிடம் முறையாக வரி வாங்கினால் கோடியாக செல்வம் வளரும் நாட்டு மக்களும் விரும்புவர். முறையற்று தன் ஆட்களை ஏவி கருணை இன்றிப் பிடுங்கும் செல்வமானது யானை புகுந்த நிலம் போல் ஆகும். தானும் உண்ண மாட்டான். மக்களும் கெடுவார்கள்" என விளக்குகின்றார்.
மேற்கோள்கள்[தொகு]
பூதப் பாண்டியன்
வெற்றிவேற் செழியன்
வெற்றிவேற் செழியன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்துவந்த பாண்டிய மன்னனாவான். இவன் நன்மாறன் எனவும் அழைக்கப்பட்டான். கொற்கையில் இளவரசனாகவிருந்த இவன் நெடுஞ்செழியனின் இறப்பிற்குப் பின்னர் பாண்டிய நாட்டை ஆளும் உரிமையினைப் பெற்றான். சேர மன்னன் செங்குட்டுவன் வட நாட்டுப் படையெடுப்பில் இருந்த வேளை வெற்றிவேற் செழியன் மதுரையில் முடிசூடிக் கொண்டான் என்பதனை சிலப்பதிகாரத்திலுள்ள நீர்ப்படைக்காதை (127-138) போன்றன கூறுவது குறிப்பிடத்தக்கது.
சிறப்புப் பெயர் பெற்ற வரலாறு[தொகு]
இவன் காலத்தில் பாண்டி நாட்டில் மழை வளம் இல்லாமல் இருந்தது. குடிமக்கள் ஆடு,மாடுகளினை வளர்க்க முடியாமல் துன்புற்றனர். வான் பொய்த்து, வைகை ஆற்றின் நீரும் பொய்த்தது. இதனைப் பார்த்த நன்மாறனும் கண்ணகியின் சாபமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என உணர்ந்து கண்ணகிக்கு விழா எடுத்தான். அவ்விழாவிற்குப் பின்னர் மழை பெய்து நாடு செழித்தது. வற்கடம் நீங்கியது. குடிமக்களும் நலமுடன் வாழ்ந்தனர். பாண்டியன் சித்திர மாடத்து உயிர் துறந்தான். சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று புகழப்பட்டான்.
நன்மாறனின் சிறப்பைப் பற்றி மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இவ்வாறு பாடுகின்றார்.
“ | "ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின் தாள்தோய் தடக்கை தகை மாண்வழுதி வல்லைமன்ற! நீ நயந்து அளித்தல் தேற்றாய் பெரும! பொய்யே என்றும் காய்சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் ஞாயிறு அனையை நின் பகைவர்க்கு திங்கள் அனையை எம்மனோர்க்கே! | ” |
— (புறம்-59) |
பாடாண் திணைப் பாட்டாக விளங்கும் இப்பாடலில் "அழகான கண்டோர் மயங்கும் மார்பை உடையவன். வெற்றி மாலை அணிந்தவன். நீண்ட கைகளை உடையவன். கை நீண்டிருப்பது ஆண்மைக்குரிய அங்க இலக்கணம்! தகுதியான நல்ல குணங்களை எல்லாம் பெற்றவன். வலிமையானவன். விரும்பி பிறர்க்களிப்பான். பொய் உரையாதவன். பகைவரிடம் கோபம் உடையவன். பகைவர்களுக்குச் சூரியன் போன்றவன். எங்களுக்குத் திங்கள் போன்றவன்" எனப் புகழ்ந்து பாடியுள்ளார் சீத்தலைச் சாத்தனார்.
மாறன் வழுதி, கூடகாரத்துத் துஞ்சியவன்
கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்.
வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் நான்கு பேர்.
அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும் இவை.
- வழுதி – கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி - 3
- வழுதி – கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி - 21
- வழுதி – கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – 51, 52,
- வழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – 12, 15, 9, 6, 64,
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி தமிழ்நாடு எல்லா அரசர்களுக்கும் பொது என்று சொல்வதைப் பொறுத்துக்கொள்ள மாட்டாமல் தனக்கே உரியது என்று போரிட்டானாம். கடலின் சீற்றம் போலவும், காட்டுத்தீ போலவும், சூறாவளிக் காற்று போலவும் போரிட்டுக் கொண்டுவந்த கொண்டிச் செல்வத்தைக் ‘கொள்க’ எனக் கூவி அழைத்துக் கொடுத்தானாம்.[1]
பொதியில் எனப்படும் பொதியமலை நாட்டை வென்ற பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி வடபுல மன்னர் வாடவும் போரிட்டானாம்.[2]
குறுவழுதியின் மகனே இம்மன்னன் என்ற பொதுவான கருத்து நிலவுகின்றது. வடநாட்டுப் போரினை நடத்திய இவனைப் பற்றி புறநானூற்றுப் பாடல்களான புறம் -51 மற்றும் புறம் 52 இரண்டிலும் குறிப்புகள் உள்ளன குறிப்பிடத்தக்கது.
"சினப்போர் வழுதியே! 'தண்தமிழ் பொது' என்பதை ஏற்க மறுத்த வடவர்களை போரில் எதிர்த்து பிறமன்னர் நடுங்க வைத்தவன் நீ" என ஜயூர் முடவனார் இவனை புறம் 51 இல் இவ்வாறு பாடியுள்ளார்.
"வடபுல மன்னர் வாட அடல் குறித்து-இன்னா வெம்போர் இயல் தேர்வழுதியே! நல்லகம் நிறைய கான வாரணம் ஈயும் புகழுடையோனே!"
என மருதன் இள நாகனார் புறம்-52 இல் போற்றுகின்றார்.
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
முதலாம் நெடுஞ்செழியன் (Nedunj Cheliyan I) சிலப்பதிகார காவியத்தில் கூறப்படும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன். இவரது பட்டத்து ராணியின் பெயர் கோப்பெருந்தேவி. கடைச்சங்க கால பாண்டிய மன்னர்களில் ஒருவர். சரியாக ஆராய்ந்து அறியாது ஒரு உயிரைக் கொல்ல ஆணையிட்டு, நீதி தவறியமைக்காக தன்னுயிர் நீத்த பாண்டிய மன்னன். வடநாட்டு ஆரிய மன்னர்களைப் போரில் வென்றதனால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான். பெரும்படை மிக்கவனாகத் திகழ்ந்த இவன் தென்னாட்டு அரசர்கள் பலரை அடக்கி சேர,சோழர்கள் பலரையும் வென்றவனும் ஆவான். சேரன் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்த இவன் அம்மன்னனுக்கு முன்னரே வடநாட்டில் ஆரிய அரசர்களை அடக்கி ஆண்டவனுமாவான். கொங்கு குறுநில மன்னர்கள் பலரை வென்ற பெருமையினையும் உடையவனாவான். அறம் (நீதி) தவறியதால் தன்னுயிரை மாய்த்த இம்மன்னன் கல்விச்சிறப்பினை முதன் முதலில் உலகினுள் உணர்த்திய மன்னன் என்ற பெருமையினைக் கொண்டவன். இவனது புறப்பாடலில் இவன் கல்வியின் சிறப்புகளைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பாடலில்
“ | உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே! பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும் ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும் முத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே | ” |
— (புறம்-183) |
"ஆசானுக்கு உதவி செய்யவேண்டும்; மிக்க பொருளைத் தரவேண்டும். பணிவோடு கற்பது நல்லது! ஒரு குடும்பத்தில் பிறந்தாலும் கற்றவனையே தாய் விரும்புவாள். ஒரு குடும்பத்தில் அகவையால் (வயதால்) மூத்தவனைக் காட்டிலும் கற்ற ஒருவனையே, இளையவனே ஆகிலும் முந்துரிமை தந்து போற்றுவாள் அறிவுடையோன் வழியில்தான் ஆட்சி செல்லும்! கீழ் இனத்தவன் கற்றால் மேலினத் தவனைவிட மேலாக மதிப்பர்!" என கல்வியின் சிறப்பினைப் போற்றி உயர்த்திக் கூறியுள்ளான் இப்பாண்டிய மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது. இவனது ஆற்றலை வியந்து இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்
“ | வடவாரிய படை கடந்து தென்தமிழ் நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் | ” |
என இப்பாண்டிய மன்னனைப் போற்றியுள்ளார் இளங்கோவடிகள்.
அறம் (நீதியைக்) காக்க உயிர் நீத்த வரலாறு[தொகு]
கோவலன் தனது மனைவி கண்ணகியுடன் மதுரை நகரத்திற்குச் சென்று, கண்ணகியின் கால் சிலம்புகளில் ஒன்றை விற்பதற்காக கடைவீதிக்குச் சென்றான். ஆனால் அங்கு அரண்மனைக் காவலர்கள் அவன் பாண்டிய அரசியின் சிலம்புகளைத் திருடியதாகக் கூறி அரசவைக்குக் கூட்டிச்சென்றனர். அரசியின் கால் சிலம்புகளைத் திருடிய பொற்கொல்லனின் பொய்ச்சாட்சியத்தால் மதுரையின் மன்னனான முதலாம் நெடுஞ்செழியன் கோவலனைக் கொல்லுமாறு ஆணையிட்டான். கோவலனும் கொல்லப்பட்டான்.
இதையறிந்த கண்ணகி அரசவைக்கு வந்து தனது சிலம்பை உடைத்து தனது சிலம்பில் உள்ள பரல்களும் அரசியின் சிலம்பில் உள்ள பரல்களும் வெவ்வேறு என்பதை காட்டி மன்னன் தவறு செய்ததை சுட்டிக்காட்டினாள். கோவலனைச் செய்யாத குற்றத்திற்காக கொலை செய்ய ஆணையிட்ட (உத்தரவிட்ட) நெடுஞ்செழியன், கண்ணகி சொல்லக் கேட்டு தான் அறம் வழுவியதை (நீதி தவறியதை) உணர்ந்து மனம் நொந்து "யானோ அரசன்! யானே கள்வன்! தென்புலங்காவல் என் முதல் பிழைத்தது" எனத் தனதுயிரை விட்டான். வளைந்த செங்கோலை தன் உயிர் கொடுத்து நிமிர்த்தினான். இவன் மனைவி கோப்பெருந்தேவியும் தன் கணவன் இறந்த மறுகணமே உயிர் நீத்தாள். நீதி தவறியதால் தம் உயிர் நீத்த நெடுஞ்செழியன் அவன் மனைவி கோப்பெருந்தேவி இருவரும் உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இப்பாண்டிய மன்னன் செயலை நினைத்து வியந்த சேரன் செங்குட்டுவன் "பாண்டியன் செங்கோல் திறங்காக்க உயிர்விட்டானே! அரசர்களுக்கு, மழை வளம் கரப்பின் வான் பேரச்சம், பிழை உயிர் எய்தில் பெரும் பேரச்சம். கொடுங்கோலுக்கு அஞ்சி வாழ்தல் துன்பம். துன்பம் அல்லது தொழுதகவு இல்லை!" என மனம் வருந்தினான் செங்குட்டுவன் என்பது வரலாறு.
எனினும் கோபம் தணியாத கண்ணகி, தன் கற்பின் வலிமையால் மதுரை மாநகரையே எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.[1] [2] [3]
மேற்கோள்கள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
உக்கிரப் பெருவழுதி
பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்.
- வெற்றி
ஐயூர் மூலங்கிழார் என்னும் புலவர் இவனது வெற்றிகளைப் புகழ்ந்து பாடியுள்ளார்.[1] கானப்பேரெயில் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆண்டுவந்த அரசன் வேங்கைமார்பன். இந்த உக்கிரப் பெருவழுதி காய்ச்சிய இரும்பு உறிஞ்சிக்கொண்ட நீரைப் போல மீட்க முடியாததாய்க் கைப்பற்றிக்கொண்டானாம்.
- நட்பு
இவன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி எனவும் குறிப்பிடப்படுகிறான். இவன் சேரமான் மாரிவெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியவர்களுடன் கூடி ஒற்றுமையாக மகிழ்ந்திருந்ததைப் பார்த்த ஔவையார் இப்படியே மூவரும் என்றும் கூடி வாழவேண்டும் என வாழ்த்துகிறார்.[2]
- கடைச்சங்க காலக் கடைசி அரசன்
இறையனார் களவியல் உரையில் இவன் உக்கிரப் பெருவழுதி என்னும் பெயருடன் கடைச்சங்க காலக் கடைசி அரசன் எனக் காட்டப்படுகிறான்.
- சினப்போர் வழுதி
அ
- வழுதி என்னும் பெயர் கொண்ட பாண்டியர்
வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் பலர்.
அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும்:
- வழுதி – கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி - 3
- வழுதி – கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி - 21
- வழுதி – கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – 51, 52,
- வழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – 12, 15, 9, 6, 64,
கருத்துகள்[தொகு]
உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் என்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் வேங்கைமார்பன் என்னும் அண்டை நாட்டு அரசனுடைய கானப் பேரெயிலை வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன். ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளியும, சேரமான் மாரி வெண்கோவும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு மற்ற இரு அரசர்களும் வந்திருந்தனர். அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை கண்ட சங்க காலத்து ஔவயார் அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அது புறநானூற்றில் உள்ளது. அதில்:
“ | வாழச்செய்த நல்வினை அல்லது ஆழுங்காலை புணை பிறிதில்லை | ” |
என்று வழங்கும் அறவாக்கு பெரிதும் போற்றப்படுவது.
புறநானூற்றில் உள்ள ஔவையாரின் பாடலின் வரிகள்:
“ | நாகத் தன்ன பாகார் மண்டிலம் தமவே யாயினும் தம்மொடு செல்லா பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை | ” |
இவ்வரசன் காலத்தில் தான் திருக்குறள் அரங்கேற்றப் பட்டது என்று செவிவழிமரபு. இவன் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களாகிய அகநானூற்றிலும் நற்றிணையிலும் உள்ளன.
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
வெளிப்பார்வை[தொகு]
மாறன் வழுதி
மாறன் வழுதி சங்ககால பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பன்னாடு தந்த மாறன் வழுதி என்ற பட்டத்தினைப் பெற்ற மாறன் வழுதி நற்றிணை நூலினை தொகுத்த பெருமையினை உடையவனும் ஆவான்.குறுந்தொகையில் உள்ள 270 ஆம் பாடலினைப் பாடிய பெருமையினையும் உடையவனாவான்.
பாண்டியன் மாறன் வழுதி அரசனாகவும், புலவராகவும் விளங்கியவன். இவனது பாடல்கள் இரண்டு உள்ளன. இவன் அரசனாகவும் புலவனாகவும் விளங்கியவன். [1]
பூக்காரி மேல் காதல்[தொகு]
ஆறாமல் இருக்கும் புண்ணில் வேல் பாய்ந்தது போல ஆற்றங்கரையில் ஆண்குயிலும் பெண்குயிலும் மாறி மாறிக் கூவுவதுதான் கொடிது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். “குருக்கத்திப் பூவும், பித்திகைப் பூவும் விரவித் தொடுத்த பூ வாங்குகிறீர்களா” (பூவோ பூ) என்று தெருவில் திரிந்து கூவுவாள் குரல் அதனினும் கொடிதாக உள்ளது. (என் நெஞ்சில் பேசிக்கொண்டே இருக்கிறது) – பூக்காரி மேல் காதல் கொண்ட அவன் இவ்வாறு பாங்கனிடம் சொல்கிறான். [2]
அவள் அழகு[தொகு]
குறிஞ்சிப் பூ போன்ற மேனி, கருங்குவளை மலர் போன்ற கண், மயில் போன்ற சாயல், கிளி போன்ற மொழி, பாவை போன்ற வனப்பு, இப்படியெல்லாம் அவளது தாயும், அவளது தேயமும் அவளைப் பாராட்டுகின்றன. எனக்கோ அவள் கூந்தல் மணம் நெஞ்சில் மணந்துகொண்டே இருக்கிறது. அவளோடு கிடந்தவன் இப்படிப் பேசுகிறான். [3]
அடிக்குறிப்பு[தொகு]
நல்வழுதி
நல்வழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். 12 ஆம் பரிபாடலினைப் [1] பாடிய பெருமையினை உடைய இம்மன்னர் அவர் பாடலில்
"தொடித்தோள் செறிப்ப,தோள்வளை இயங்க-நொடி சேராத் திருக்கோவை, காழ்கொள, முத்துத்தொடை கழண்டு விழ வண்டல் மண்ட இலையும், மயிரும் ஈர்த்து முலையும் மார்பும் முயங்கணி மயங்க நிறை உடத்தென உடைத்த வையை!" என மதுரையில் உள்ள வையை ஆற்றில் ஏற்பட்ட புதுவெள்ளம் பற்றிப் பாடி அங்கு நீராடும் பொழுது ஏற்பட்ட நிகழ்ச்சிகளினை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவன் அரசாண்டதற்கு சங்கநூல் பாடல்கள் ஏதுமில்லை. ஆனால் இவன் பெயரில் வரும் வழுதி என்னும் பாண்டியக் குடிப்பெயர் ஒட்டாக வருவதை வைத்து இவன் ஒரு சிறு பகுதிக்கு அரசனாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.[2]
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
- ↑ பரிபாடல் 12 மூலம்
- ↑ மயிலை சீனி. வேங்கடசாமி (2007). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். பக். 180.
குறுவழுதி
அண்டர் மகன் குறுவழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.[1] பெரும் பெயர் வழுதியின் இளவல் [2] ஆகலாம்.
இவரது பெயர் குறுவழுதியார் என்றும் [3] என்றும், அண்டர் மகன் குறுவழுதியார் [3] என்றும், அண்டர் மகன் குறுவழுதி [4][5] என்றும், பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப் பெயர்களில் 'ஆர்' விகுதி இல்லாத பெயர்கள் இவரை பாண்டிய அரசர் எனக் கொள்ளத் தூண்டுகின்றன.[6]
பருவம் அடைந்த பெண்ணிடம் தோன்றும் அடையாளங்கள் இவை என இவர் கூறும் அடையாளங்கள் மனத்தில் கொள்ளத்தக்கவை.[7]
பெயர் விளக்கம்[தொகு]
- அண்டர் என்னும் சொல் குதிரைமீது ஏறி ஆனிரை மேய்த்த இடையரைக் குறிக்கும். இவர் இடையரின் பெருங்குடி மகனாய் விளங்கியவர் என்பது இவரது பெயரால் தெரியவருகிறது.வழுதி என்னும் சொல் பாண்டிய அரசர்களின் பெயர்களில் ஒன்று.
குறுவழுதி ஒரு புலவர்[தொகு]
- மதிப்பு மிக்க பெருமக்களாக விளங்கிய புலவர்கள் [8] பெயர்களில் ‘ஆர்’ விகுயைச் சேர்ப்பது சங்க கால மரபு. இந்தப் புலவர் பெயர் குறுவழுதி என ஆர் விகுதி இல்லாமலும், ஆர் விகுதி சேர்த்தும் குறிக்கப்பட்டுள்ளது.
- நாடாண்ட பாண்டிய அரசர்கள் [9]
- இவர் பெயரில் வரும் அண்டர் என்பது இவரை ஆயர் குல பாண்டிய அரசனாக குறிக்கிறது [10]
பாடல் தரும் செய்திகள்[தொகு]
அகநானூறு 150 நெய்தல்
- தலைவியின் பருவ மாற்ற அழகைக் கண்டு தாய் தலைமகளை வீட்டுக்குள்ளேயே காப்பாற்றுகிறாள். தலைவனோ மணந்துகொள்ளாமல் விலகி நிற்கிறான். தலைவி தன்னைத் தலைவன் தழுவிய இடத்தைக் காணும்போதெல்லாம் அவர் வரமாட்டாரா என்று எண்ணி ஏங்குகிறாள். - தோழி தலைவனிடம் இப்படிச் சொல்லித் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள்.
- தாய் கண்ட பருவ மாற்றம் - பின்னிவிட வேண்டிய அளவில் கூந்தல் நெருக்கமாக உள்ளது. உடலில் பொன்னிறத் தேமல் காணப்படுகிறது. முலை வம்பு என்னும் துணிக் கட்டில் பிதுங்குகிறது.
- தோழி கண்ட மாற்றம் - தலைவியின் கண்கள் நீர்த்துறையில் பூத்த நெய்தல் போலவும், நனைந்துகொண்டு பூக்கும் செருந்திப் பூ போலவும், காலையில் கள் துளிக்கும் காவி மலர் போலவும் உள்ளன.
அகநானூறு 228 குறிஞ்சி
- அருவி தேன் கூடுகளில் மோதிக்கொண்டு பாறையில் விழும் சுனையில் பகல் முழுவதும் தலைவன் தலைவியோடு சேர்ந்து நீராடிவிட்டு இரவில் செல்வதும் நல்லதுதான். அல்லது இரவில் பகல் போன்ற நிலவில் வரினும் வரலாம். தலைவியின் சிறுகுடி சூரல்முள் வேலியைக் கொண்டது. அங்கே உயர்ந்த பாறையோரத்தில் பூத்திருக்கும் வேங்கை மரம் புலியும் யானையும் போல மருட்டும். - என்கிறாள் தோழி.
குறுந்தொகை 345 நெய்தல்
- பகலில் வருவானைத் தோழி இரவில் வா என்கிறாள். கொடி உயர்த்தி மாலையணிந்த தேரை மணல் மேட்டில் ஏற்றிக்கொண்டு வருகிறாய். அது வேண்டாம். இரவில் கடற்கழி ஓரத்தில் தாழைமர ஓரத்தில் அமைதியான இடம் தலைவியின் இருப்பிடம். அங்கு அவள் தழையாடை அணிந்துகொண்டு உனக்காக ஏங்கிக்கொண்டிருப்பாள் - என்கிளாள்.
புறநானூறு 346 காஞ்சி, மகட்பாற் காஞ்சி
- பெருங்குடி மகள் ஒருத்தியின் அழகு திருமணம் இல்லாமல் வீணாவதாக இந்தப் பாடல் தெரிவிக்கிறது.
- இந்தப் பாடலில் முதலடி சிதைந்துள்ளது. எனினும் அதில் உள்ள பகுதிகள் அவள் மாற்றாந் தாயின் பாலை அருந்தி வளர்ந்தாள் என்பதைப் புலப்படுத்துகின்றன. ஈன்ற தாய் இவளுக்கு வேண்டாதவள் ஆகிவிட்டாளாம். பானவர்கள் போகட்டும் இருப்பவர்களாவது இவளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லையாம். இந்த நிலையில் வல்லாண் சிறாஅன் ஒருவன் இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு இவளுக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறானாம். இவளது அழகே இவளைப் பாழ் செய்துகொண்டிருக்கிறது - என்கிறது பாடல்.
- தொந்தரவு செய்பவன் கல்வியில் பெரியவன் என்று தன்னைப் பீத்திக்கொண்டு திரிபவனாம். வேல் வீரனாம். நல்லவனாம்.
பழந்தமிழ்[தொகு]
இவரது பாடல்களில் சில பழந்தமிழ்ச் சொற்கள் பொருள் உணரும் வகையில் எடுத்தாளப்பட்டுள்ளன.
- 'வல்லான் சிறாஅன்' என இவர் கூறுவது பெருங்குடி மகனை.
- 'இழும் என் ஒலி' அமைதியைக் குறிக்கும்.
- பருவம் எய்திவிட்டாய் என்பதனை 'எல்லினை' என்னும் பழஞ்சொல்லால் இவர் குறிப்பிடுகிறார்.
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ http://mukkulamannargal.weebly.com/5-2990300929653021296530092994-29902985298529923021296529953021.html
- ↑ தம்பி
- ↑ 3.03.1 http://www.tamilvu.org/library/l1270/html/l1270ind.htm
- ↑ http://www.tamilvu.org/library/l1220/html/l1220ind.htm
- ↑ http://www.tamilvu.org/library/l1280/html/l1280ind.htm
- ↑ http://www.tamilvu.org/slet/l1280/l1280pag.jsp?bookid=28&page=610
- ↑ பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக்
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி;
எல்லினை பெரிது (அகநானூறு 150) - ↑ பாண்டியன் ஏனாதி திருக்கண்ணனார் முதலானோர்
- ↑
- பாண்டியன் அறிவுடை நம்பி
- பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
- பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி
- பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
- பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி
- பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய நன்மாறன்
- பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் மாறன் வழுதி
- பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்
- பாண்டியன் நெடுஞ்செழியன்
- பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
- பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
- பூதபாண்டியன்
- ↑ மயிலை சீனி. வேங்கடசாமி (2007). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். பக். 180.
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் சங்க காலத்தில் பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த மன்னனாவான்.இவர் இலவந்திகைப் பள்ளியில் இறந்ததால் நன்மாறன், பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறன் என்றும் வழங்கப்பட்டான். இவனைப் பாடிய புலவர்கள் மதுரை மருதனிளநாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், வடம வண்ணக்கன்பேரி சாத்தனார் ஆவர்.[1]
"நாஞ்சில் நாடான், அன்னக் கொடியோன், சோழன், சேரன் ஆகிய நால்வர்க்கும் கூற்றுவன் நீ! இகழுநரை அடுவதால் முருகனை ஒத்தாய்! நினக்கு ஒப்பார் இல்லை! இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈவாய்! யவனர் நன்கலம் தந்த தண்கமல்தேறல் நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்பர்.ஒங்குவாள் மாறனே! வெங்கதிர்ச் செல்வன் போலவும், தண்கதிர் மதியம் போலவும் நின்று நிலைப்பாய் உலகமோடு!" எனப் புறம்-56 இல் பாடியுள்ளார் நக்கீரர்.
மதுரை மருதன் இளநாகனார் இம்மன்னனைப் புகழ்ந்து
"நெடுந்தகை! நீ நீடுவாழிய! ஞாயிறு அன்ன வெந்திறல் ஆண்லையும்,திங்கள் அன்ன தண் பெருஞ்சாயலும்,வானத்தன்ன வண்மையும் உடையவனாக உள்ளாய்! கறை மிடற்று அண்ணல் பிறைநுதல் பெருமான் போல வேந்து மேம்பட்ட பூந்தார் மாறனே! கொல்களிறும்,கவிமாவும்,கொடித்தேரும்,புகல் மறவரும் என நான்குடன் மாண்ட சிறப்புடையோய்! அறநெறிமுதற்றே அரசின் கொற்றம்" என புறம்-55 இல் பாடியுள்ளார் மருதன் இளநாகனார்.
மேற்கோள்கள்[தொகு]
நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னராவார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவர், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவர். இவர் போருக்குச் செல்லும் போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் காலில் இருந்து கழட்டவில்லை என்பதை வைத்து, இவர் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றார் எனலாம்.
காலம்[தொகு]
பொதுவாகச் சங்ககால வேந்தர்களின் காலக்கணிப்புகளில் பல கருத்து வேறுபாடுகள் காணப்படினும், இம்மன்னரின் காலத்தை அறிஞர்கள் இரண்டு வகையாகக் கணிக்கின்றனர். ஒன்று, இவர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தம்பியான வெற்றிவேற் செழியன் மகன் என்பது ஒரு கருத்து.[1][2]
மற்றொன்று இவர், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவருக்கு முன்னோர் என்ற கருத்து. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, "இளைய ராயினும் பகையரசு கடியுஞ் செருமாண் தென்னர் குலமுத லாகலின்" என்ற ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் புகழும் சிலம்பின் வரியை எடுத்துக்காட்டி, இளமையிலேயே பகைவரைப் பொருது வென்ற பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்றவனே என எடுத்துக்காட்டுவார் முனைவர் வ. குருநாதன். இவர் கூற்றின் படி, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இளமையிலேயே இறந்ததும், அவரது மனைவி பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறினாள். இந்தத் தலையாலங்கானத்துச் செருவென்றவனைக் குறிக்கும் பாடல்களும், இவர் இளமையிலேயே அரியணை ஏறியதாகச் சுட்டுகின்றன. அதன்படி இவர் பெற்றோரும் 30 வயதுக்குள்ளேயே மறைந்திருக்க வேண்டும். அதனால் இவர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவருக்கு முன்னோர் என்று கூறுகிறார்.[3]
நெடுஞ்செழியனைக் குறிக்கும் அடைமொழித் தொடர்கள்[தொகு]
- அடுபோர்ச் செழியன்
- மறப்போர்ச் செழியன்
- வெம்போர்ச் செழியன்
- இயல்தேர்ச் செழியன்
- திண்டேர்ச் செழியன்
- பொற்றேர்ச் செழியன்
- கல்லாயானை கடுந்தேர்ச் செழியன்
- கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்
- கொய்சுவல் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
- ஒளிறுவாள் தானை கொற்றச் செழியன்
- வேல்கெழு தானைச் செழியன்
- கைவண் செழியன்
- முசிறி முற்றிய செழியன்
நெடுஞ்செழியன் வெற்றிகள்[தொகு]
நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன், ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தோற்கடித்தார் என்பது வரலாறு. இதற்குச் சான்றாக இப்பாடல்கள் விளங்குவது குறிப்பிடத்தக்கது.[4]
வெற்றிக் குறிப்புகள்[தொகு]
- கூடல் பறந்தலையில் இருபெரு வேந்தரை வென்றது [5]
- இருபெரு வேந்தரும் வேளிரும் சாயப் போரிட்டு வென்றவன் [6]
- தன்னைத் தாக்கிய ஒன்றுமொழி வேந்தரின் முரசுகளைக் கைப்பற்றிக்கொண்டான்.[7]
- பகைவர் நாட்டுக்கே துரத்திச் சென்று வென்றான்.[8]
- சேரநாட்டு முசிறியில் சேரரை வென்றது [9]
- குட்டுவர் (சேரர்) பலரை வென்றவன். “பல்குட்டுவர் வெல்கோவே” [10]
- ஆலங்கானம் என்னும் தலையாலங்கானத்தில் எழுவரை ஓட்டியது [11]
- இயல்தேர்ச் செழியன் ஆலங்கானத்து எழுவரை வென்றான்.[12]
- எழுவரை வென்றோன் – புலவர் இவனைத் தழுவினார் குடபுலவியனார் [13]
- நாடுகெழு திருவின் பசும்பூண் செழியன் – எழுவரைத் தனியனாக வென்றான்.[14]
- இளமையிலேயே வென்றான்.[15]
- செழியன் பாசறையில் வாள் மின்னியது[16]
- கொடித்தேர்ச் செழியன் எழுவரை வென்றான்[17]
- இவனைத் தாக்கியவர்கள் பலர்.[18]
- மிழலை நாட்டு எவ்வியை வென்றது, முத்தூறு வேளிரை வென்றது [19]
- ஆய் குலத்தவரின் கீழிருந்த குற்றாலத்தை வென்றான்[20]
- நெல்லின் ஊர் பகுதியை வென்றான்[21]
- முதுமலைப் பகுதியை வென்றது[22]
- பலர் மதில்களை அழித்தது[23]
- தென்பரதவர் என்ற நெய்தல் மன்னர்களை வென்றான்.[24]
- முதுவெள்ளிலை வென்றான். இந்நகரம் நெய்தல் நில வளமும் மருதம் நில வளமும் மிக்கதாகும்.[25]
- விடியும் பொழுதில் தன்னைத் தாக்கிய மழவர்களை ஓட ஓட விரட்டினான்.[26]
நெடுஞ்செழியனுக்கு அறிவுரை[தொகு]
- அடுபோர்ச் செழியன் – நீர்நிலைகளைப் பெருக்கவேண்டும் என இவனைப் புலவர் வேண்டுகிறார் [27]
அடிமைகொள் வேள்வி[தொகு]
- மன்னர் இவனுக்கு ஏவல் செய்யும் புதுமையான வேள்வியை இவன் செய்தான். புறம் 26,
வள்ளண்மை[தொகு]
- வாள் வீரர்களுக்கு
- கொற்றச் செழியன் வாள்வீரர்களுடன் சென்று போரிட்டு வென்றபோதெல்லாம் பாணர்கள் களிறுகளைப் பரிசாகப் பெற்றனர்.[28]
- புலவர் ஒருவர் இவனைப் பாடி இவன் கழுத்திலிருந்த முத்தாரத்தையும், இவன் ஏறிவந்த யானையையும் பரிசிலாகப் பெற்றார்.[29]
- பாணர்க்கும் பாட்டியர்க்கும் தேரும் யானைகளும் வழங்கியவன் [30]
- கருணை உள்ளம்
- போர்ப் பாசறையில் இவனது படை காயம் பட்டுக் கிடந்ததைக் கருணை உள்ளத்தோடி இரவெல்லாம் தூங்காமல் தேற்றினான்.[31]
முன்னோர்[தொகு]
- கடல்வெள்ளம் கொண்ட முன்னோரின் வழிவந்தவன் “நல்லூழி அடி படரப் பல்வெள்ளம் மீக்கூற உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக” [32]
- நிலந்தரு திருவின் பாண்டியன் வழியில் வந்து ஆண்டவர்களில் போர்யானை போன்றவன் [33]
ஆட்சி[தொகு]
- உழவர்க்குக் ‘காவுதி’ என்னும் பட்டம் வழங்கியவன் [34]
- சிறந்த போர் வீரர்களுக்குப் பொன்னால் செய்த தாமரைப் பூ (இக்காலப் பத்மஸ்ரீ போன்றது) சூட்டிப் பாராட்டியவன் [35]
- பழிக்கு அஞ்சுபவன். ஈகையால் வரும் புகழை விரும்புபவன்.[36]
- அறங்கூறு அவையம் நிறுவி நீதி வழங்கியவன் [37]
- ஆட்சிக்கு உதவியாக ‘நாற்பெருங்குழு’ வைத்திருந்தவன் [38]
- ஐம்பெருங்குழுவாக ஐந்து அரசர்களை வைத்துக்கொண்டு அரசாண்டவன் [39]
- கண்ணுள் வினைஞர் (ஓவியர்), கம்மியர் முதலான கலைஞர்களைப் போற்றியவன் [40]
- மதுரையில் ‘ஓண நன்னாள்’ (திருவோணத் திருநாள்) கொண்டாடியவன் [41]
நாட்டுப் பரப்பு[தொகு]
- பண்டைய தமிழகம் முழுவதும் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.[42]
- தந்தை மதுரையிலிருந்து ஆண்டபோது இவன் கொற்கையில் இளவரசனாக இருந்து தந்தைக்குப் பின் மதுரையில் முடிசூடிக்கொண்டான்.[43]
- இவனது நாட்டுப் பரப்பில் இருந்தன எனச் சில ஊர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதுவெள்ளில் [44] பெருங்குளம் [45] நெல்லின் அள்ளூர் [46] சிறுமலை [47] பொதியில் [48] முதலானவை.
பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியன்[தொகு]
பத்துப்பாட்டில் மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சிக்கும் [49],மதுரைக்கணக்காயர் மகனார் நக்கீரர் பாடிய நெடுநல்வாடைக்கும் பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியனான இவனே என்பது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்செழியனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்த மாங்குடி மருதனார் வீடு அடைய வேண்டிய அறநெறி கூறுவதற்காகவே இப்பாடலை நெடுஞ்செழியன் மீது பாடினார். நிலையாமையை எடுத்துச் சொல்லும் இந்நூல் இவனது முன்னோர்களின் சிறப்பும் செங்கோல் சிறப்பும், பாண்டிய நாட்டின் வளமும், மதுரையின் அழகும் கூறப்பட்டுள்ளன.[50] மேலும் முல்லைப்பாட்டு இவனின் மேல் பாடப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அந்நூலில் தலைவன் பெயர் குறிக்கப்படவில்லை.
புலவனாக[தொகு]
இவன் புலவனாகவும் விளங்கினான். இவனது ஒரே ஒரு பாடல் புறநானூறு 72 எண்ணுள்ள பாடலாக உள்ளது. அதில் அவன் வஞ்சினம் கூறுகிறான். இது செய்யாவிட்டால் எனக்கு இன்னது நேரட்டும் என்று பலர் முன் கூறுவது வஞ்சினம்.
நாற்படை நலம் உடையவர் என்று தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு செருக்கோடு என்னைப்பற்றிச் சிறுசொல் கூறி, என்னோடு போரிடுவோர் எல்லாரையும் ஒன்றாகச் சிதைத்து, என் அடிக்கீழ் நான் கொண்டுவராவிட்டால்,
- என் குடிமக்கள் என்னைக் கொடியன் என்று தூற்றுவார்களாக!
- மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட என் புலவர்-சங்கம் என்னைப் பாடாது போகட்டும்!
- என்னைப் பாதுகாப்போர் துன்பம் கொள்ள, இரவலர்களுக்கு வழங்கமுடியாத வறுமை என்னை வந்தடையட்டும்!
-இவ்வாறு இவன் கூறுவதில் இவனது நற்பண்புகள் வெளிப்படுகின்றன.
பாடிய புலவர் பட்டியல்[தொகு]
இவனை
|
|
ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர்.
ஒப்பு நோக்குக[தொகு]
- பசும்பூண் பாண்டியன் - இப்பெயருடன் சங்க இலக்கியங்களில் ஐந்து பாடல்களும் (அகம் 162, 231, 253, 338 குறு 393) தொல்காப்பிய பொருளதிகாரக் களவியலுக்கு நச்சினார்க்கினியார் உரையும் (நூற்பா 11), பசும்பூண் வழுதி என்னும் பெயருடன் நக்கீரர் பாடலிலும் குறிப்புகள் உண்டு. தலையாலங்கானத்துச் செழியன் இளமையிலேயே இவ்வெற்றியை பெற்றதால் அவனுக்கு பசும்பூண் பாண்டியன் என பெயர் அமைந்திருக்கலாம்.
- மேலும் தலையாலங்கானத்துச் செழியனை பாடிய இடைக்குன்றூர் கிழார் இவனை பசும்பூண் செழியன் எனப் பாடியுள்ளார். தலையாலங்கானத்துச் செழியனைப் பற்றிப் பல பாடல்கள் இயற்றிய நக்கீரர் இவனை பசும்பூண் பாண்டியன் (அகம் 253), பசும்பூண் வழுதி (நற் 358) என்றும் பாடியுள்ளார். நக்கீரர் தந்தையான மதுரை கணக்காயனார் (அகம் 253), பரணர் (அகம் 162, குறு 393) மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் (அகம் 231) இவனை பசும்பூண் பாண்டியன் எனப் பாடியுள்ளனர்.
- மேற்கண்டவற்றிலும் பரணர் செழியன் பெயரைக் குறித்து இவன் கூடற்பறந்தலை போரில் பெற்ற வெற்றியைப் பாடியதால் பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் முனைவர் வ. குருநாதன்.[3]
- பசும்பூண் பாண்டியன் என்னும் அடைமொழியைக் கொண்டு மட்டும் இவனை வேறு மன்னன் என்பது கூடாது எனவும் மதுரையை இவன் சிறப்பாக ஆட்சி செய்தும் இவனைப் பற்றிப் புலவர்கள் புறப்பாடல்கள் பாடவில்லை என்றும் எனவே பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் மயிலை சீனி. வேங்கட சாமி.
- மேலும் பாண்டிய நாட்டின் அறியனை கைப்பற்றவே பசும்ப்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் போர் புரிந்ததால் பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் மயிலை சீனி. வேங்கட சாமி. (அகம் 231)[51]
மேற்கோள்[தொகு]
- ↑ Geography of Tamilakkam (1979). The Tamils Eighteen Hundred Years Ago. Asian Educational Services, noolaham.org (in web).
- ↑ தமிழகத்தின் நில இயல் பிரிவுகள் (1962). ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம். Colombo Apothecaries' Co., Ltd, noolaham.org (in web).
- ↑ 3.03.1 முனைவர் வ. குருநாதன் (2001, திருவள்ளுவர் ஆண்டு 2032). சங்ககால அரச வரலாறு. தஞ்சாவூர் - 613005: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம். பக். 162 - 177.
- ↑
“ அன்னையின் அணைப்பிலே இருந்தவன்.ஐம்படைத் தாலியும் கழட்டவில்லை!காலில் கிண்கிணி அணிந்துள்ளான்
பாலறாவாயினன்
” — (புறம்-77) விளக்கம்:- தன்னை இளையவன் என்று இகழ்ந்து போருக்கு வந்த ஏழு அரசர்களையும் வெற்றி கொள்ள படை திரட்டினான். படை முன் நடக்க தேர் ஏறி வந்தான். ஏழு படைகளையும் தலையலங்கானம் என்ற இடத்தில் எதிர்த்தான். பகைவர் படைகளை முன்னிலைப்படுத்தினான். ஏழு அரசர்களையும் நோக்கி வீர சபதம் செய்தான்!.
“ நடுதக்கனரே நாடுமீக் கூறுநர் இளையன் இவன்' என உளையக் கூறி
படுமணி இரட்டும் பாஅடிப்பணைத்தாள்
நெடுநல் யானையும் தேரும்,மாவும்
படைசுமை மறவரும் உடையம் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கி
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத்தாக்கி முரமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின்-பொருந்திய
என் நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது
கொடியன் எம் இறை' எனக்கண்ணீர் பரப்பி
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர் புகழ்சிறப்பின்
புலவர் பாடாது வரைக என்நிலவரை
புரப்போர் புன்கண்கூர
இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே
” — (புறம்-72) விளக்கம்:- "என் நாட்டை விரும்பி வந்த பகைவர்கள் எள்ளி நகையாடத்தக்கவர்கள். 'இளையவன் இவன்' என வந்தனர். யானையும், தேரும், குதிரைப் படையும் உடையவன் நான் என்பதை உணராது வந்தனர். என் வலிமை அறியாதவர்கள். என் கோபத்தை மூட்டினர். போரில் அனைவரையும் சிதைந்து ஓடுமாறு செய்வேன். முடியையும், முரசத்தையும் கைப்பற்றுவேன். இல்லாவிட்டால் என் மக்கள் என்னைக் கொடியவன் என்று பழி தூற்றட்டும். மாங்குடி மருதன் முதலான புலவர்கள் என்னைப் பாடாது நீங்கட்டும். என்னிடம் யாசிப்போர்க்கு ஈய முடியாத வறுமை உடையவன் ஆவேன்" என்று வஞ்சினம் கூறினான்.
இடைக்குன்றூர் கிழாரும் இவனது வெற்றியைப்பற்றி (புறம்-76) இல் பாடுகின்றார்.
“ நெடுங்கொடி உழிஞைப் பலரொடும் மிடைந்து புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப்பொருது களத்து அடலே
” — (புறம்-76) சோழன் பெருநற்கிள்ளி, சேரன் மாந்தரஞ்சேரல், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய எழுவரும் பாண்டியனிடம் தோற்றவர்கள். தோற்று ஓடினார்கள். தொடர்ந்து சென்று உறையூரையும், வஞ்சியையும் வென்றான். அவ்வரசர்களின் உரிமை மகளிர் நாணமுற்று உயிர் துறக்குமாறு செய்தான். இவ்வாறு (புறம்-78) கூறுகின்றது.
இருங்கோவேளின் மிழலைக் கூற்றத்தையும், வேளிரது முத்தூர்க்கூற்றத்தையும் வென்றான் என(புறம்-24) கூறுவது படி, தமிழகம் முழுவதினையும் வென்று ஆண்டார் என்பதனை அறிய முடியும்.
- ↑
- மறப்போர்ச் செழியனைக் கூடல் பறந்தலையில் தாக்கிய இருபெரு வேந்தர் போர்க்களத்திலேயே தம் முரசுகளை எறிந்துவிட்டு ஓடிவிட்டனர். - அகம் 116
- ↑ “இருவெரு வேந்தரொடு வேளிர் சாயப், பொருது அவரைச் செரு வென்றும் – மதுரைக்காஞ்சி 55-56
- ↑ புறம் 25,
- ↑ புறம் 78,
- ↑ :கொடித்தேர்ச் செழியன் குதிரைப் படையுடன் சென்று, கடலோர முசிறியை முற்றுகையிட்டு சேரரின் யானைப்படையை வீழ்த்தினான். அகம் 57
- ↑ மதுரைக்காஞ்சி 105
- ↑ :கைவண் செழியன் ஆலங்கானத்து அமர் கடந்தான். அகம் 175
- ↑ அகம் 209
- ↑ – புறம் 19
- ↑ புறம் 76
- ↑ புறம் 77
- ↑ நற்றிணை 387
- ↑ அகம் 36
- ↑ புறம் 79,
- ↑ எவ்வியை வென்று மிழலை நாட்டையும், தொன்முது வேளிர் ஆட்சிக்கு உட்பட்ட முத்தூறு (முத்துக்கள் ஊறும் கொற்கை போன்றதோர் ஊர்) நாட்டையும் கைப்பற்றிக்கொண்டவன். புறம் 24,
- ↑ ஆய்நாட்டு மலை குற்றாலத்தில் போரிட்டு வென்றவன். “தென்னவன் பெயரிய துன் அருந் துப்பின் தொன்முது கடவுள் பின்னர் மேய, வரைதாழ் அருவிப் பொருப்பின் பொருந” – மதுரைக்காஞ்சி 40-43
- ↑ நாவாய்க் கப்பல்கள் தங்கும் நெல்லின் ஊர் துறைமுகப் பகுதியைக் கைப்பற்றியவன், மதுரைக்காஞ்சி 85-88
- ↑ முதுபொழில் எனப்பட்ட முதுமலைப் பகுதியை முற்றுகையிட்டு வென்றவன். மதுரைக்காஞ்சி 190
- ↑ :அடுபோர்ச் செழியன் – கூடல் அரசன், பகைவரின் ஆண்டலை மதிலை அழித்து அவரது முரசைக் கைப்பற்றினான் நற்றிணை 39
- பகைமன்னர் இவனை எண்ணி நாள்தோறும் நடுங்கினர் புறம் 23,
- ↑ தென்பரதவர் போர் ஏறே - மதுரைக்காஞ்சி 144
- ↑ "முதுவெள்ளிலை மீக்கூறும் வியன்மேவல் விழுச்செல்வத் திருவகையா னிசைசான்ற" - மதுரைக்காஞ்சி 111 - 120
- ↑ மாங்குடி மருதனார் – மதுரைக்காஞ்சி 687
- ↑ குடபுலவியனார் - புறநானூறு 18,
- ↑ அகம் 106
- ↑ கல்லாடனார் - புறம் 371, 372
- ↑ மதுரைக்காஞ்சி 748-753
- ↑ நெடுநல்வாடை,
- ↑ மதுரைக்காஞ்சி 21-23
- ↑ “நிலம் தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்” – மதுரைக்காஞ்சி 60-61
- ↑ மதுரைக்காஞ்சி 499
- ↑ “பொலந்தாமரைப் பூச்சூட்டியும்” மதுரைக்காஞ்சி 103-105
- ↑ மதுரைக்காஞ்சி 205
- ↑ மதுரைக்காஞ்சி 493
- ↑ மதுரைக்காஞ்சி 506-510
- ↑ ‘பொலம்பூண் ஐவர்’ மதுரைக்காஞ்சி 775-778
- ↑ மதுரைக்காஞ்சி 511-522
- ↑ மதுரைக்காஞ்சி 590-591
- ↑ தென்குமரி வடபெருங்கல் இடைப்பட்ட நாடுகளின் அரசர்க்கெல்லாம் அரசன் - மதுரைக்காஞ்சி 70-74
- ↑
- கடுந்தேர்ச் செழியன் – கொற்கைக் கோமானின் மதுரை சிறுபாணாற்றுப்படை 65
- பொற்றேர்ச் செழியன் கூடல் நற்றிணை 298
- நெடுந்தேர்ச் செழியன் கூடல் கம்பலை அகம் 296
- அடுபோர்ச் செழியன் மாடமூதூர் அகம் 335
- அடுபோர்ச் செழியன் கூடல் நகருக்கு மேற்கில் நெடியோன் குன்றத்துச் சுனையில் நீலமலர். அகம் 149
- ↑ முதுவெள்ளில் என்னும் கடல்சார் நிலமக்கள் இவனை வாழ்த்தினர் மதுரைக்காஞ்சி 117-119
- ↑ கடுந்தேர்ச் செழியன் பெருங்குளம் நற்றிணை 340
- ↑ கொற்றச் செழியன் பிண்ட நெல்லின் அள்ளூர் அகம் 46
- ↑ *கைவண் செழியன் மழை விளையாடும் சிறுமலை அகம் 47
- ↑ திண்டேர்ச் செழியன் பொருப்பில் (பொதியில்) மூங்கில் வளம். அகம் 137
- ↑ [1]
- ↑
“ தென்னவன் பெயரில் துன்னருந்துப்புன் தொன்முது கடவுள் பின்னர்மேய
வரைத்தாழ் அருவிப்பொருப்பிற் பொருந
” என மதுரை சோமசுந்தரப் பெருமான் வழியில் தோன்றியவன் இவன் என மருதனார் கூறுகின்றார். இந்நூல் 782 அடிகளுடையதாகும். நெடுஞ்செழியன் போர் விரும்பும் இயல்பினன் என்பதனை
“ ஒளிறிலைய வெஃகேந்தி அரசுபட அமர் உழக்கி
அடுகளம் வேட்டு
” என்ற அடிகளினால் குறிப்பிடுகின்றார்.
நெடுநல்வாடையில் இவனது படைக்களம் விரும்பும் செய்தியினை நக்கீரர் "நள் என்ற யாமம்! பள்ளி கொள்ளாத நெடுஞ்செழியன் பாசறையில் திரிகின்றான். போரில் புண்பட்ட வீரர்கள் பாசறையில் படுத்துள்ளனர். அவர்களை நேரில் கண்டு ஆறுதல் கூற நலம் கேட்கச் செல்கின்றான். வேப்பம் பூ மாலை அணிந்த வேலுடன் வீரர் பின் தொடரச் செல்கிறான். குதிரைகள் கரிய சேற்றை பனித்துளியால் உதறும். பனிக்காற்று வீசும். தோளின்று நழுவிய வெற்றி வாளினை வலக்கையில் ஏந்தியவனாய், முத்துமாலை தொங்கும் (வெண்கெற்றக்) குடை அசைய சென்றான். புண்பட்ட வீரர்களின் முகம் மலர நலம் விசாரிக்கின்றான். புண் வலி நீங்கி புன்முறுவல் பூத்த வீரர்கள் நன்றியுடன் நோக்குகின்றனர். 'வேம்புதலையாத்த நோன்கால் எஃகமொடு' திரிகின்றான் பாசறையில்! பாண்டியன் மனைவி, நெடுஞ்செழியன் வருகைக்குக் காத்துக் கிடக்கின்றாள் மெல்லிய படுக்கையில். "பனிக்காற்று வீசுகிறது! அரசியின் காதல் உள்ளம் வெப்பம் அடைகிறது! சாளரங்களில் முத்து மாலைகளும், திரைச் சீலையும் மெல்ல அசைகின்றன! தூக்கம் வராத ஏக்கத்துடன் அரசி படுத்திருக்கின்றாள். இவளது ஏக்கத்தைப் போக்க அரசன் பாசறை நீங்கி வரவேண்டும். அரசனும் அரசியும் மகிழ்ந்திரவு நேரத்தைக் கழிக்க வேண்டும்" என்று நக்கீரர் நெடுநல்வாடையில் பாடுகின்றார்.
- ↑ மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். பக். (186 - 188)/232.
வெளி இணைப்புகள்[தொகு]
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: |
- தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பாடல் புறநானூறு 72
- மாந்தரஞ்சேரலைச் சிறை கொண்டது
- நீரைத் தேக்குக - பாண்டரங்கனார் அறிவுரை
- எழுவரை வென்றது - குடபுலவியனார்
- தலையாலங்கானப் போரின் விளைவு
- மிழலை முத்தூறு கைப்பற்றியது
- போர்க்கள வேள்வி
- வெற்றிக்குப் பின்னர் கலங்கியது
பெருவழுதி, வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன்
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்.
இவனும் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்பவனும் புகார் அரண்மனையில் நண்பர்களாகக் கூடியிருந்தபோது, புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கண்டு இன்று போல் என்றும் ஆட்சியிலும் கூடியிருக்க வேண்டும் எனப் பாடியுள்ளார். இப்படிக் கூடியிருந்தால் பிற அரசர் நாட்டுக் குன்றங்களிலெல்லாம் சோழனின் புலி, பாண்டியனின் கயல் ஆகிய இரண்டு சின்னங்களையும் சேர்த்துப் பொறிக்கலாம் என்கிறார். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவரால் இம்மன்னன்
“ | தமிழ் கெழுகூடல் தண்கோல் வேந்தே! இருபெருந்தெய்வம் போல் இருவிரும் உள்ளீர்! இன்றே போல் நும்புணர்ச்சி | ” |
— (புறம் - 58) |
பாடப்பட்டுள்ளான்.
நம்பி நெடுஞ்செழியன்
நம்பி நெடுஞ்செழியன் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.[1] பேரெயின் முறுவலார் இம்மன்னனைப் பற்றிப் பாடியுள்ளார். [2]
அதில் "செய்தக்க எல்லாம் செய்தவன். இறந்துவிட்டான்! புகழ் கொண்டான். இவனை இடுகாட்டில் புதைத்தால் என்ன? சுட்டால் என்ன?' என இப்புலவர் வருந்திக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
நம்பி நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டியர் மரபில் தோன்றிய மாவீரன். இவன் உக்கிரப் பெருவழுதியின் தூதுவனாகக் கானப்பேரெயில் அரசனிடம் சென்றான். தூது பயன் தரவில்லை. போர் மூண்டது. போரில் தன் அரசனுக்காகப் போரிட்டு மாண்டான். இவன் போர்க்களத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து, பேரெயில் முறுவலார் என்னும் புலவர் இவனது புகழைப் பாடியுள்ளார்,
- புலவர் பேரெயில் என்னும் ஊரில் வாழ்ந்தவர். இது கானப்பேரெயில் எனப் பெயர் பெற்றிருந்த ஊர்.உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியன் இவ்வூரில் போரிட்டு அதனைத் தனதாக்கிக் கொண்டான். எனவே நம்பி நெடுஞ்செழியன் இந்தப் போரில் மாண்டவன்[சான்று தேவை] எனலாம்.
இவனைப் பற்றிய குறிப்புகள்
- தோளில் காப்பு அணிந்திருந்தான். தலையில் பூச் சூடியிருந்தான். சந்தனம் பூசிக்கொண்டிருந்தான்.
- பகைவரைப் பூண்டோடு அழித்தவன்.
- நண்பர்களுக்கு உயர்வளித்தவன்.
- வலியவர்களை வணங்கமாட்டான். மெலியவர்களை ஏளனப்படுத்த மாட்டான்.
- யாரிடமும் இரக்கமாட்டான். தன்னிடம் இரந்தவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்காமல் அனுப்ப மாட்டான்.
- தேரிலும், யானைமீதும் உலா வருவான்ய
- பாணர்களின் பசியைப் போக்கி, அவர்கள் மகிழ குளிர்பானங்கள் (தீம் செறி தசும்பு) தருவான்.
- ஐயம் தோன்றாதபடி தெளிவாகப் பேசுவான்.
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ நம்பிநெடுஞ்செழியன் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
- ↑
“ "தொடிஉடைய தோள் மணந்தனன் கடி காலில் பூச் சூடினன்
தண் கமழும் சாந்து நீவினன்
செற்றோரை வழி தடித்தனன்
நட்டோரை உயர்பு கூறினன்
வலியர் என வழி மொழிபவன்
மெலியர் என மீக்கூறலன்
பிறரைத் தான் இரப்பு அறியலன்
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்
வேந்துடை அவையத்து ஒங்குபுகழ் தோற்றினன்
வருபடை எதிர் தாங்கினன்
பெயர் படை புறங்கண்டனன்
பாண் உவப்ப பசி தீர்த்தனன்
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
இடுக ஒன்றோ?சுடுக ஒன்றோ
படுவழிப் படுக இப்புகழ் வெய்யோன் தலையே!
” — (புறம் - 239)
credits wikipedia
No comments:
Post a Comment