Showing posts with label Leucorrhea. Show all posts
Showing posts with label Leucorrhea. Show all posts

Thursday, January 2, 2020

வெள்ளைப்படுதலும் சித்தர் சொன்ன தீர்வுகளும்


வெள்ளைப்படுதலும் சித்தர் சொன்ன தீர்வுகளும்.

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறுகளில் வெள்ளைப் படுதல் சர்வ சாதாரணமாகிவிட்டது.

வெள்ளைப்படுதல் என்றால் என்ன? - பெண்களின் பிறப்புறுப்பின் வழியே வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம்.

காரணாங்கள்: நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும்.

சித்தர்கள் அருளிய மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

கீழாநெல்லி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து 10 நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம்.

அம்மான்பச்சரிசி இலையை அரைத்துச் சுண்டைக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து பருகலாம்.

பொடுதலை இலையுடன், சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெள்ளருகுடன் 5 மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தலாம்.

இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.

ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.

பொரித்த படிகாரம், மாசிக்காய், வால்மிளகு சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் சீழ்வெள்ளை, ரத்த வெள்ளை குணமாகும்.

இளநீரில் ஒரு ஸ்பூன் சந்தனத்தூளை ஊற வைத்து, அந்த நீரை வடித்துப் பருகி வரலாம். .
திப்பிலி 5 பங்கு, தேற்றான் விதை 3 பங்கு கலந்து நன்றாய்ப் பொடித்து, அதில் 4 கிராம் எடுத்துக் கழுநீரில் 3 நாட்கள் சேர்த்து உண்ணலாம்.

ஓரிதழ் தாமரை இலை, யானை நெருஞ்சில் இலை இவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து அருந்தலாம்.

பரங்கிப்பட்டை, சுக்கு, மிளகு, நற்சீரகம் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம்.

சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
ஒரு கைப்பிடி துத்தியிலையை இடித்து 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து அதில் பால், சர்க்கரை கலந்து பருகலாம்.

சிறு துண்டு கற்றாழையைத் தோல் சீவி, கசப்பு நீங்கப் பத்து முறை நன்கு கழுவி சர்க்கரை சேர்த்து, தினமும் காலையில் சாப்பிட்டுவர வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.

விஷ்ணு கிரந்திவேர், ஆவாரை வேர்ப்பட்டை சம அளவு எடுத்து அரைத்து அதில் நெல்லிக்காய் அளவு எடுத்துப் பாலில் உண்ணலாம்.

தண்ணீர்விட்டான் இலையை அரைத்து 30 மி.லி. சாறு எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

தென்னம்பூவை இடித்து, 30 மிலி சாறு எடுத்து, மோர் சேர்த்துப் பருகலாம்.

உணவு முறைகள்.

சேர்க்க வேண்டியவை: தர்பூசணி, வெண்பூசணி, வெள்ளரி, வெந்தயம், பசலைக்கீரை, தண்டுக்கீரை, பருப்புக்கீரை, இளநுங்கு, நாட்டு வாழைப்பழம், நல்லெண்ணய், பனங்கிழங்கு.

தவிர்க்க வேண்டியவை: மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுகள். எண்ணெயில் பொரித்த உணவுகள், கோழி இறைச்சி.

மேற்கண்ட குறிப்புகளை சித்தமருத்துவ நிபுனரின் ஆலோசனைக்குப் பின் பயன்படுத்தவும்.

நன்றி, வாழ்க வளத்துடன்

மரு.மு.யோகானந்த் MD., MEM., Msc (Varmam)., MSCP., MITBCCT (UK),

சத்யா கிளினிக், 51/2, செந்தூர்புரம் முக்கிய சாலை, காட்டுப்பாக்கம், சென்னை - 600 056.
அலைபேசி எண்கள் : +919843118402.
வலைதளம்: http://sathyapolyclinic.wixsite.com/ayush