Saturday, April 13, 2013

காகபுசுண்டர் ஞானம் 80-4


காப்பு

எண்சீர் விருத்தம்
சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்
     தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்
பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
     பல்லாயிரங் கோடி அண்டம் படைத்த போதம்
வரம்பெருகி யனந்தனந்தம் உயிரு மாகி
     மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
     சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே.
1  

ஓமென்ற சுழுனையடா அண்ட வுச்சி 
     ஓமுடிந்த பட்டணத்துக் கப்பாற் சென்று
நாமென்று சொல்லற்று யோக ஞானம்
     நாட்டுகிறேன் அஞ்சனமுந் திலதப் போக்கும்
வாமென்ற வயித்தியமும் அட்ட கர்மம்
     வாதமென்ற வித்தையெல்லாந் தெளிவ தாகக்
காமென்ற வீடமதிற் கண்டு தேறிக்
     காட்டுகிறேன் மெய்ஞ்ஞானக் கருவைப் பாரே.
2 

பாரேநீ யோகமென்ற வழியைச் சொல்வேன்;
     பத்தடா ஐம்புலனைப் பரத்தி னூடே
சீரொருவர் தெரியாமல் மதங்கள் பேசித்
     திருவான வுச்சியிலே சேரா மற்றான்
ஆரொருவன் ஆதாரம் வெவ்வே றென்றே
     அடுக்கடுக்காய்ப் பன்னிரண்டு தலங்க ளென்று
வீரேதான் பேசியே மெலிந்து போவான்.
     விடமுண்ட அண்டமதை விரும்பிக் காணே.
3

காணப்பா தலமெல்லாம் அண்ட வுச்சி
     கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று
பூணப்பா மனத்தையுந்தான் பிசகொட் டாமற்
     பூட்டடா பிரமத்திற் புகுந்தெந் நாளும்
வீணப்பா மந்திரங்க ளொன்று மில்லை
     விதியில்லை மதியில்லை கெதியு மில்லை
தோணப்பா தோணுமடா மனமொன் றான
     சுத்தமுடன் நீயிருந்து தவஞ்செய் வாயே.
4 

செய்யப்பா வாசிமுனி மகனே கேளு
     தீர்க்கமுடன் முன்னுரைத்த ஆயி ரத்தில்
மெய்யப்பா சரக்குநீத் துவகை யெல்லாம்
     மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கி னங்கள்
பொய்யப்பா சொல்லவில்லை ரத்னப் போக்குப்
     புனிதமுடன் சரியாகச் சொல்லிப் போட்டேன்
வையப்பா இந்நூலில் மவுன மெல்லாம்
     வகையாகச் சொல்லுகிறேன் பணிந்து கேளே.
5

கேளப்பா கேசரமே அண்ட வுச்சி
     கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுன மாகும்
ஆளப்பா பரப்பிரம யோக மென்றே
     அடுக்கையிலே போதமுந்தான் உயரத் தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
     வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும்
நாளப்பா அண்ட மெல்லாஞ் சத்தி யோடு
     நடனமிடுஞ் சிலம்பொலியுங் காண லாமே.
6 

காணலாம் பிரமத்தில் நிர்ண யந்தான்
     காட்டுகிறேன் வாசிமுனி கருவாய்க் கேளு
பூணலாம் அண்டவுச்சி தன்னில் நின்று
     பொறிகளையு முண்டாக்கிப் புவனந் தன்னில்
தோணலாம் உயிர்ப்பயிரைப் படைத்தெந் நாளுந்
     தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்ற மாகி
ஆணலாம் நாலுவகை யோனி யாகி
     அண்டமடா அனந்தனந்த மான வாறே.
7

வாறான பிரமத்தில் நடுவே மைந்தா!
     வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக்
கூறாகப் பின்னியடா கீழே பாயுங்
     கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
     வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி
     நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.
8

 பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே
     பத்திலே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
     அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
     கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
     வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே.
9

 கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்
     கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக
நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம்
     நன்றாக ஓடுமடா நரம்பி னூடே
வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா!
     வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே
தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்
     சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே.
10

 பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
     பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
     நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
     மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
     கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.
11

போமடா முன்சொன்ன நரம்பி னூடே
     பூரித்து ரவிமதியுஞ் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியுங் கீழே பாயும்
     அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும்
நாமடா வெளிதிறந்து சொல்லி விட்டோம்
     நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி
     உறுதியுடன் சித்தமதை யூன்றிப் பாரே.
12 

பாரான சாகரமே அண்ட வுச்சி
     பதினாலு லோகமெல்லாம் பரத்தி னூடே
சீராகத் தெரியுமடா மவுன மார்க்கஞ்
     சித்தான சித்துவிளை யாடிநிற்கும்.
வீரான மந்திரங்கள் பிறந்த தெப்போ?
     விஷ்ணுவென்றும் பிரமனென்றும் வந்த தெப்போ
கூரான முக்குணங்க ளுதித்த தெப்போ?
     கூறாத அட்சரத்தின் குறியைக் காணே.
13 

காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே
     கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ?
தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச்
     சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
     வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு;
கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா!
     குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே.
14 

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது
     மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனந்தானே யேக மாகத்
     தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
     பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
     ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே.
15

No comments:

Post a Comment