ஒன்றான பிரமமே வெவ்வே றாக
உலகத்தி லனந்தமடா கூத்து மாச்சு;
நன்றாச்சுத் தீதாச்சு நாலு மாச்சு
ஞாயிறு திங்களென்ற பேருண் டாச்சு;
குன்றாச்சு ஊர்வனகள் அனந்த மாச்சு;
குருக்களென்றுஞ் சீடனென்றுங் குறிக ளாச்சு
நன்றாச்சு நாதவிந்தும் அடங்கி நின்ற
நாதனையு மொருமனமாய் நாட்டு வாயே. 32
நாட்டுவார் சித்தரெல்லாம் பேத மாக
நலம் போலே சாத்திரங்கள் கட்டி னார்கள்!
பூட்டியே மனிதரெல்லாம் நூலைப் பார்த்துப்
பூரணமாய் அண்டமதைப் பாரா மற்றான்
காட்டிலே திரிந்தலைந்த மானைப் போலே
கபடமாய் வாய்ஞானம் பேசு வார்கள்;
கூட்டிலே அடைந்திருக்கும் குயிலைப் பாரார்
கூறாத மந்திரத்தின் குறியைப் பாரே. 33
குறியென்ற உலகத்திற் குருக்கள் தானும்
கொடியமறை வேதமெல்லாங் கூர்ந்து பார்த்தே
அறியாமற் பிரமத்தைப் பாரா மற்றான்
அகந்தையாய்ப் பெரியோரை அழும்பு பேசி
விரிவான வேடமிட்டுக் காவி பூண்டு
வெறும்பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே
பரியாச மாகவுந்தான் தண்டு மேந்திப்
பார்தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே. 34
பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி;
பணம்பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்;
ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்
ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்;
நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு;
நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு;
வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்
விதியாலே முடிந்ததென்று விளம்பு வானே. 35
வானென்ற அண்டமதிற் சென்று புக்கு
வடவரையி லுச்சிநடுத் தீபங் கண்டு
தேனென்ற சுத்தசிவ கங்கை தன்னில்
தீர்த்தங்க ளாடித்திரு நாம மிட்டுக்
கோனென்ற மனமன்பாய் மலராய்ச் சார்த்திக்
கொடியமறை வேதமுந்தா னடக்கங் கண்டு
தேனென்ற சித்தமே புத்தி யாகத்
தெளிந்தவரே மெய்ஞ்ஞானி யாவர் பாரே. 36
பாரண்ட மதையொன்றாய்ப் பார்க்கும் போது
பலபேத மாயையெல்லாம் மருண்டே யோடுஞ்
சீரண்டம் அகிலாண்ட பிரமாண் டங்கள்
செனித்தவகை யுயிர்தோறும் நீயாய் நிற்பாய்
காரண்ட லலாடக்கண் திறந்த போது
கண்கொள்ளாக் காட்சியெல்லாங் கலந்தே காட்டும்;
வீரண்ட மேல்வட்டம் விரிந்த சக்கரம்
மெய்ஞ்ஞான வெளியதனிற் றொடர்ந்து கூடே. 37
கூடுவதென் குணமறிந்த மனமொன் றாகக்
கூத்தாடித் திரியாமற் கவன மாகப்
பாடுது பலநூலைப் படித்தி டாமற்
பராபரத்தி னுச்சிநடு வெளியே சென்றே
ஆடுவது தொந்தோமென் றாட்டைப் பார்த்தே
அடுக்கடுக்கா யாயிரத்தெட்டிதழுங் கண்டு
வாடுகிற பயிர்களுக்கு மழைபெய் தாற்போல்
வாடாத தீபத்தை யறிந்து பாரே. 38
பாரென்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர்
பராபரத்து நிலையினுடைப் பாதஞ் சொன்னீர்
வீரென்ற அண்டமெல்லாம் பாழ தாகி
விராட பிரம மொன்றியா யிருக்கும் போது
சீரென்ற வுயிர்களெல்லா மிருப்ப தெங்கே?
சித்தருடன் திரிமூர்த்தி யிருப்ப தெங்கே?
கூரென்று நீர்தங்கு மிடந்தா னெங்கே?
குருபரனே! இந்தவகை கூறு வீரே. 39
கூறுகிறே னென்மகனே வாசி நாதா
குணமான வீச்சுரனார் சபையிற் கூடித்
தேறுகின்ற பிரளயமாம் காலந் தன்னிற்
சீவசெந்து சித்தருடன் முனிவர் தாமும்
வீருடனே யெங்கேதா னிருப்பா ரென்று
விமலருந்தான் விஷ்ணுவையும் விவரங் கேட்கக்
கார்மேக மேனியனங் கவரை நோக்கிக்
கண்டுமிகப் பணிந்துமினிக் கருது வானே. 40
கருதுவான் ஆலிலைமேற் றுயில்வேன் யானும்
கனமான சீவசெந்தும் அனந்த சித்தர்
உறுதியா யென்றனுடைக் கமலந் தன்னில்
ஒடுங்குவா ராதரித்து மிகவே நிற்பேன்.
வருதியாய்ப் புசுண்டருந்தான் வருவா ரென்று
வலவனுடன் மாலானும் உரைக்கும் போது
சுருதியா யெனையழைத்தே சிவன்றான் கேட்கச்
சூத்திரமாய் நல்வசனம் மொழிந்தேன் பாரே. 41
பாரென்று சிவனுடைய முகத்தைப் பார்த்துப்
பல்லாயிரங் கோடியண்ட வுயிர்க ளெல்லாஞ்
சீரென்ற சித்தருடன் முனிவர் தாமுந்
திருமாலும் ஆலிலைமேற் றுயிலும் போது
கூரென்ற வுந்தியிடக் கமலந் தன்னிற்
கூடியே அடைந்திருப்பார் குணம தாக
வீரென்ற ஐவரையும் தாண்டி யப்பால்
வெகுசுருக்காய் வீதிவழி வந்தேன் பாரே. 42
பாரப்பா ஆகாயஞ் செல்லும் போது
பாலகனே சக்கரந்தான் சுற்றி யாட
ஆரப்பா சக்கரத்தைப் பிசகொட் டாமல்
அதன்மேல் யேறியுந்தா னப்பாற் சென்றேன்;
நேரப்பா நெடுந்தூரம் போகும் போது
நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்;
வீரப்பா அக்கினிபோல் படர்ந்து நிற்கும்
வெளியொன்றுந் தெரியாம லிருக்குந் தானே. 43
இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா!
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்;
ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது
பெருக்கமுடன் முன்பார்த்தாற் புருட ரூபம்
புத்திரனே பின்பார்த்தாற் பெண்போல் ரூபம்
மருக்கமுடன் யான்றானுங் கம்பத் தூடே
வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே. 44
பாரப்பா இப்படியே அனந்த காலம்
பராபரத்தி னூடேதா னிருந்து வாழ்ந்தேன்;
ஆரப்பா பிரமமுந்தான் மனமிரங்கி
அகண்டமதைப் படைப்பதற்கே அருளும் போதும்
வீரப்பா கம்பத்தி லிருந்த பெண்ணும்
விமலரென்றும் உமையென்றும் மிகவே தோன்றிச்
சீரப்பா சக்கரத்தி லிருந்து கொண்டு
திருமாலைத் தானழைக்கத் தீர்க்கம் பாரே. 45
பாரப்பா திருமாலுங் கமலந் தன்னில்
பல்லாயிரங் கோடி அண்ட வுயிர்க ளெல்லாம்
நேரப்பா அழைத்துமுக் குணத்தைக் காட்டி
நிலையான சமுத்திரங்கள் பூமி தானும்
சேரப்பா ரவியோடு திங்கள் தானுஞ்
சிறந்தெழுந்த மலைகாடு சீவ செந்து
விரப்பா நவக்கிரகம் நட்சத் ரங்கள்
வெற்றியுடன் நால்வேதம் வகுத்த வாறே. 46
வாறான தெய்வமென்றும் பூத மென்றும்
வையகத்தில் வானமென்றும் பூமி யென்றும்
கூறான மாமேரு கிரிக ளென்றும்
கோவிலென்றுந் தீர்த்தமென்றுங் குளமுண டாக்கி
நேராகப் பிரமமே சாட்சி யாக
நிலைத்தெங்கும் உயிர்தோறும் நிறைந்தா ரையா!
வீராகத் திரியாமல் மவுனம் பார்த்து
வெற்றிபெற இன்னமுந்தான் உரைக்கக் கேளே; 47
கேளப்பா இப்படியே பிரள யந்தான்
கிருபையுடன் ஏழுலட்சங் கோடி யானால்
ஆளப்பா அரியயனும் சீவ செந்தும்
அகண்டமென்ற பிரமத்தி லடங்கு வார்கள்;
நாளப்பா நானுமந்தப் படியே செல்வேன்;
நலமாக இன்னமுந்தான் அகண்ட மானால்
வாளப்பா காகமென்ற ரூப மானேன்
வடவரையின் கூடுதொத்தி யிருந்தேன் பாரே. 48
பாரடா இப்படியே யுகங்கள் தோறும்
பார்தனில்நா னிருந்தேன்எத் தனையோ கோடி
ஆரடா என்னைப்போல் அறிவா ருண்டோ?
ஆதியென்ற சித்திக்கும் ஆதி யானேன்
வீரடா விமலரிடஞ் செல்லும் போது
வெற்றியுட னெனையெடுத்து முத்த மிட்டார்;
காரடா கைலையின்மே லிருக்கச் சொன்னார்!
காகமென்ற ரூபமா யிருந்தேன் பாரே. 49
காகமென்ற ரூபமா யிருந்து கொண்டு
காரணங்கள் அத்தனையும் கருவாய்ப் பார்த்து
வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க
வெகுதூரம் சுற்றியின்னம் விவரங் காணேன்;
மோகமுடன் பரந்தமனம் அணுவ தாக்கி
மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க
நாகரீக மாகவுந்தா னண்ட மேவி
நடுவணைய முச்சிநடு மத்தி தானே. 50
மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம்
மகாமேரு வுச்சியிலே வளர்ந்த லிங்கம்
சக்தியும் ஆவியுடையு மான லிங்கம்
சஞ்சாரச் சமாதியிலே நிறைந்த லிங்கம்
புத்தியால் மனமொன்றாய்ப் புகழ்ந்த லிங்கம்
பூவருந் தன்னில்தான் முளைத்த லிங்கம்
எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம்
ஏகபர மானதொரு லிங்கந் தானே. 51
No comments:
Post a Comment