Showing posts with label TRAUMATOLOGY OF VARMAM - வர்ம காயம். Show all posts
Showing posts with label TRAUMATOLOGY OF VARMAM - வர்ம காயம். Show all posts

Saturday, December 28, 2019

TRAUMATOLOGY OF VARMAM - வர்ம காயம்

வர்ம காயம் 

எலும்பு மூட்டு மருத்துவம் (Orthopaedics)  மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே பல பரிணாமங்களில் வளரத் தொடங்கியிருக்க வேண்டும்.காரணம் மனிதன் பிறந்து  இயற்கையோடு ஒன்றியும், அதை எதிர்த்துப் போராடியும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டிய கட்டாய சூழலில்,அன்றாடம் அவன் சந்திக்கும் விபத்துக்களினாலும், மேற்கொள்ளும் ஆபத்துக்களினாலும், பாதுகாப்புக்கும், உணவுக்குமாக தான் நடத்தும் பேராட்டங்களினாலும் உடலில் பெறப்படும். பல்வேறு காயங்களைப் பற்றியும், அதன் தன்மைகள் மற்றும் குணப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் சிந்திக்கத் தொடங்கிய நாட்களிலேயே இம்மருத்துவம் துளிர்விடத் தொடங்கிவிட்டது.
நவீன மருத்துவத்திலும் இது போன்ற நீண்ட பயணத்தில், நிக்கோலஸ் அன்ட்ரே என்ற பிரஞ்சு மருத்துவர் (1741)ஆர்த்தோபெடிக்ஸ்(Orthopaedics) என்ற வார்த்தையை உருவாக்கினார். இதில் “Ortho”  என்றால் நேரான (Straight) எனவும்,Paedics” என்றால் குழந்தை(Child) எனவும் பொருள்படும். அதாவது குழந்தைகளுக்குண்டான வளைந்த எலும்பு குறைபாடுகளை நிமிர்த்துவதே இத்துறையின் வேலை என நிக்கோலஸ் அன்ட்ரே ஆரம்ப காலத்தில் நம்பினார். எனவே அவர் இத்துறைக்கு இப்பெயரை வைத்தார். அதுவே இத்துறைக்கு பெயராகஅமைந்துவிட்டாலும் பிற்காலத்தில் ஆர்த்தோபெடிக்ஸ் துறை எலும்பு முறிவு, மூட்டு விலகல், எலும்பு நோய்கள் என தன்துறையை பலப்படுத்தியது. மயக்க மருந்துகளின் கண்டுபிடிப்புக்குப் பின்னர் இத்துறை அசுரவளர்ச்சி கண்டது. ரோன்ஜென்-னால் Xகதிர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும், அல்பெர்ட் மேத்திசென்-னால்  (1852) POPஎனும் Plaster of Paris  -ம் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரும் இத்துறை மேலும் முன்னேறியது.CTஸ்கேன் மற்றும் MRIஸ்கேன்-ன் அறிமுகத்துக்குப் பின்னர் அது மிக நுட்பமாக வளரத்தொடங்கியது. தற்போதைய நவீன அறுவை நுட்பங்கள்எலும்பு மூட்டு மருத்துவத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயினும், நமது நாட்டிலும் போரும் வீரமும் செறிந்த சூழலில் காயங்களுக்கும் பஞ்சமில்லைதானே. அரசர்களின் ஆட்சி காலத்திலிருந்தேஇம்மருத்துவமே கோலோச்சி நிற்கிறது. வீரம்-போர்-வெற்றி என்ற வரிசையை வெளியரங்கமாய் பரணிபாடும் சங்கத்தமிழில், காயம்- ஊனம்-மருத்துவம் என்ற வரிசை உள்ளரங்கமாக்கப்பட்டு பரண்களில் வைத்து பாதுகாக்கப்பட்டதே இம்மருத்துவம் அதிகம் வளராமல் போனதற்கு காரணமாக இருக்கலாம். என்றாலும் X-கதிரும், CT, MRI  ஸ்கேனும் இல்லாத மிகப்பழங்காலத்தே நம் முன்னோர்களுக்கிருந்த காயத்துக்கான சிகிச்சை முறைகளையும், எலும்புகள் மற்றும் பொருத்துக்களின் தன்மை, முறிவு, குணப்படுத்த இயலும்-இயலா நிலைகள், பாதுகாப்பு விதிமுறைகள் பொருத்து முறைகள், கட்டுமுறைகள், அவதிகள், சிக்கல்கள், குணமாகும் நாளளவுகள், மருந்துகள் பற்றிய விரிவான அறிவைஎண்ணிப் பார்க்கும் போது வியப்பே விஞ்சுகிறது. சித்த மருத்துவத்தின் இந்த எலும்பு-முறிவு மருத்துவத்துறையின் நுணுக்கங்கள்ஆராயப்படுமென்றால் இன்னும் பல அரிய மருத்துவ நுட்பங்களை மனித சமுதாயத்திற்கு வழங்க இயலும்.
நம் முன்னோர்கள் இந்த மருத்துவத்தை ‘ஒடிவு-முறிவு மருத்துவம்’ என்றே அழைக்கின்றனர். இதற்கு “Fracture-Injury”   எனப்பொருள். அதாவதுஎலும்பின் முறிவுகளையும், நரம்பின் காயங்களையும் பற்றி அறிந்து மருத்துவம் செய்யும் கலையாகும்.
காயம்(Trauma):
ஒரு விசை உடலுக்கு ஊறுவிளைவிக்கிற போது காயம் (Injury)ஏற்படுகிறது. அது தோல், தசை, நாண்கள், சவ்வுகள், பொருத்துக்கள்,எலும்புகள், நரம்புகள் என எல்லா உறுப்புக்களையும் பாதிப்பனவாக உள்ளது.
வர்ம காயம் (Varma-Trauma):
ஒரு விசையினால் வர்ம தலங்களிலும் காயம் பட்டு அதற்குண்டான நோய் குறிகுணங்களும் தோன்றுமெனில் அதை வர்ம காயம்எனலாம்.

I. எலும்பு-மூட்டு மருத்துவம் (ORTHOPAEDICS)

எலும்பு-மூட்டு மருத்துவத்தை நாம் இரண்டாக பகுத்துப் படிக்கலாம்.
அவை:
1) காய-எலும்பு மூட்டு மருத்துவம் (Traumatic Orthopaedic disorders)  
2)காயமற்ற-எலும்பு மூட்டு மருத்துவம்  (Non-Traumatic Orthopaedic disorders)
இதில், முதல் வகையில் எலும்பு முறிவுகள், மூட்டு விலகல்கள் போன்றவற்றைக் கொண்டு வரும் காயங்களும் அதற்குண்டான பரிகாரங்களும் கூறப்பட்டுள்ளது. மேலும் புறக்காயமின்றி, உடலிலுண்டான நோய் கூறுகளின் விளைவாக ஏற்படும் எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகளும் அதற்குண்டான தீர்வுகளும் இரண்டாம் வகையில் கூறப்பட்டுள்ளது. காயங்களால் உண்டாகும் எலும்பு-மூட்டு சீர்கேடுகளுக்கு(Traumatic Orthopaedic disorders)  செய்யப்படும் மருத்துவ முறைகளையே ‘வர்ம ஒடிவு முறிவு மருத்துவம்’ என்கிறோம்.
ஒடிவுகள்(Fractures):எலும்புகளில் சிறு கீறல் விழுதல் அல்லது முற்றிலும் முறிந்து துண்டாதலே ஒடிவுகள் எனப்படுகிறது. தற்போதுஎல்லாஎலும்பு ஒடிவுகளும் முறிவு என்றே அழைக்கப்படுகிறது.
முறிவுகள்(Injuries):முறிவு என்பதை ‘தொடர்பு முறிந்து போதல்’ அல்லது ‘துண்டாகிப் போதல்’ எனக் கொள்ளலாம். பொதுவாகக் எலும்புஒடிதலை முறிவு எனக் கூறினாலும், முறிவு என்பதை ‘காயம்’ (Injury)என்ற அர்த்தத்திலும் வர்ம மருத்துவ நூல்களில் கையாண்டுள்ளனர். (உம்.நரம்பு முறிவுகள்- Nerve Injury)
விலகல்கள்(Dislocations): எலும்பு ஒன்றோடொன்று முட்டி நிற்கும் எலும்பு முட்டு அல்லது மூட்டின் பொருத்தில் காயம் ஏற்பட்டு சந்தித்துக் கொண்டிருக்கும் எலும்புகள் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் விலகிச் செல்வதே ‘விலகல்’ எனப்படும்
நழுவல்கள்(Subluxations): எலும்பு முட்டுக்கள் அதிக அளவு விலகாமல் ஒன்றிலிருந்து ஒன்று சற்றே நழுவிப் போவதே நழுவல் எனப்படும்.
முறிந்து விலகல்(Fracture dislocation):எலும்பு முறிந்து அதன் முனைகள் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்லுவதே முறிவு-விலகல்எனப்படும்.
தசை-சுளுக்கு (Strain) : தசை அல்லது தசை நாண் இணைப்புகள் அதிகம் விரிக்க அல்லது நீட்ட அல்லது இழுக்கப்படும் போது(Stretch)ஏற்படும் காலமே தசை சுளுக்கு எனப்படுகிறது. இதைத்தொடர்ந்து தசை சிதைவு (Muscle rupture) ஏற்படுகிறது.
சவ்வு-சுளுக்கு(Sprain):சவ்வுகளில் ஏற்படும் காயங்களே (injury)சவ்வு சுளுக்கு (Sprain)எனப்படுகிறது. காயங்களால் சவ்வின் நாரிழைகள் கிழிக்கப்படுவதால் சவ்வுக் கிழிவு                (Ligament tear)எனவும் அழைக்கப்படுகிறது.
வர்ம மருத்துவ நூல்கள் காயங்களால் உடலில் என்னென்ன நிகழ்வுகள் ஏற்படுகின்றன?. அதன் விளைவாக முடங்கள் எவ்வாறு தோன்றுகின்றன. குணப்படுத்தஇயலாத அசாத்திய காயங்கள் என்னென்ன? அசாத்திய குறிகுணங்கள் யாவை? என்பனவற்றையும், இவ்வாறான நோயர்களை வர்ம மருத்துவத்தில் சிகிச்சை செய்யாது அவசர சிகிச்சைக்காக நவீன மருத்துவத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்ற சூசக தகவலையும், சாத்திய காய குறிகுணங்களையும் தெளிவாக விளக்குகின்றன.